மண் காப்போம் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழாவில் வழிகாட்ட வருகிறார்!
“பசியில் இருப்போருக்கு மீன்களை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்” என்றொரு பழமொழி உண்டு. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் “Eco Green Unit” நிறுவனத்தின் நிறுவனர் திரு. எஸ்.கே பாபு. இதுவரையில் 17,000-க்கும் மேற்பட்ட வேளாண் சார் தொழில் முனைவோர்களை உருவாக்கி இருக்கிறார்.
கோவை பொள்ளாச்சியில் அமைந்துள்ள சேத்துமடை இவரது சொந்த ஊர். நம்மாழ்வார் அவர்களின் உந்துதலாலும், ஊக்கத்தாலும் இயற்கை விவசாயத்தின் மீது இவருக்கு ஈர்ப்பு வந்துள்ளது. 1998-ஆம் ஆண்டு வெறும் மூன்று நபர்களுடன் பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிலை தொடங்கியிருக்கிறார். அதனை தொடர்ந்து வேளாண் சார்ந்த பல பொருட்களை இவர் ஒவ்வொன்றாக தயாரித்து சந்தைப்படுத்தி வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று 160 பணியாளர்களுடன் இயங்கும் “Eco Green Unit” நிறுவனத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். மேலும் இந்நிறுவனத்தின் சேவையை 14 மாநிலங்கள் 7 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து கடல் கடந்து தன் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வேளாண் பொருள் உற்பத்தி, வேளாண் கருவிகள் கண்டுபிடிப்பு மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் என ஏராளமான செயல்பாடுகளை இவரின் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இது குறித்து அவரிடம் கேட்ட போது அவரின் கம்பீர குரலில் பேசத் தொடங்கினார் “பாக்கு தட்டு தயாரிப்பதில் தொடங்கியது எங்கள் தொழில் வாழ்வு. பின் பாக்கு தட்டு தயாரிக்கும் இயந்திரத்தை நான் தான் கண்டுபிடித்தேன். வெகு சமீபத்தில் வாழை பட்டையிலிருந்து டீ கப் தயரிக்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறோம். இது போலவே வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், சாணத்திலிருந்து பூந்தொட்டி தயாரிக்கும் இயந்திரம், மூங்கிலில் இருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் சாதனங்கள் என இதுவரையில் 5-க்கும் அதிகமான உபகரணங்களை நாங்கள் கண்டுப்பிடித்து உள்ளோம். இவற்றை வெற்றிகரமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவது குறித்த பயிற்சியை முதலில் மகளிர் குழுக்களுக்கு தொடங்கி இன்று உகாண்டா, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட எழு நாடுகளில் பயிற்சி அளிக்கிறோம். மேலும் அங்கு வேளாண் பொருட்களை மற்றும் உபகரணங்களை விநியோகிக்கிறோம். அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஐரோப்பா நாடுகளில் சந்தைப்படுத்துகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் சமீபத்திய சாதனையாக இலங்கையில் பிவிசி பைப்களை பயன்படுத்தி வெட்டிவேர் சாகுபடி முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது குறித்த பயிற்சி அளித்தோம். அதன் மூலம் அவர்கள் சிறு இடத்தில் பைப் வழியே வெட்டி வேர் சாகுபடி செய்து அதன் மூலம் கலை பொருட்களை உருவாக்கி சந்தைப்படுத்தி வருகிறார்கள். இது அவர்களின் வாழ்வாதாரமாக இப்போது மாறி வருகிறது.
இது போல் 17,000-த்திற்கும் மேற்பட்டோரை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறோம்.. இயந்திரங்கள் விநியோகம், பயிற்சி, பொருட்கள் உற்பத்தி, தொழில் விரிவாக்கம், சமூகம் சார்ந்த வளர்ச்சி திட்டங்களை வகுத்தல் என பல தளங்களில் எங்கள் நிறுவனம் செயல்படுகிறது” என தெரிவித்தார்.
இந்தத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வரும் இவரின் அனுபவ பகிர்வையும் வேளான் தொழில்கள் சார்ந்த வழிகாட்டுதல்களையும் கோவையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று மண் காப்போம் இயக்கம் நடத்தும் “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா”விலும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இவரைப் போலவே இன்னும் பல வெற்றிகரமான வேளாண் தொழிலதிபர்கள், வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் இதில் வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டவது, பிராண்டிங், மார்க்கெட்டிங், ஏற்றுமதி செய்வது மற்றும் இதற்காக அரசு வழங்கும் உதவி திட்டங்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் பற்றி பேச இருக்கிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
The post 17,000 வேளாண் தொழில் முனைவோர்களை உருவாக்கிய வித்தகர்! appeared first on Dinakaran.