கூடலூர்: இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீதகிருஷ்ணர் போன்றோர் உள்ளனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரமும் இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.
திருவாலி: மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமிதேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம்புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.
அரசர்கோயில்: செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும் பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டுவிரலை அடுத்து அழகான ஆறாவது விரல் உள்ளது . இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச்சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். செங்கல்பட்டு மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.
கொற்கை: சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்ப்பித்துத் தரவேண்டி ரதிதேவி மகாலட்சுமியை வேண்டினாள். எனவே, மகாலட்சுமியும் இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தார். மன்மதனை உயிர்ப்பித்தார். மகாலட்சுமி இவ்வாறு வழிபாடு செய்த லிங்கம் லட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளும், செல்வமும் வேண்டுவோர் இத்தல ஈசனை வழிபட்டு பயனடைகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார்.
The post மகத்தான மகாலட்சுமி தலங்கள் appeared first on Dinakaran.