- கல்கத்தா மருத்துவக் கல்லூரி
- தில்லி
- சிபிஐ
- கொல்கத்தா
- ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி
- ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த பெண் டாக்டர் ஒருவர், கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அரைநிர்வாணமாக அவரது சடலம் மீட்கப்பட்டது. இவ்வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் முதுகலை மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், மிகுந்த வேதனை அளிக்கிறது. சமூக வலைதளங்களின் மூலம் என் மீது அவதூறு பரப்புகின்றனர். இறந்த மாணவி, எனது மகளை போன்றவர். இனிமேலும் என்னால் இந்த அவமானத்தை தாங்க முடியாது. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை. என்னை நீக்க ஒரு மாணவர் இயக்கம் தூண்டப்பட்டுள்ளது.
இதற்கு பின்னணியில் அரசியல் உள்ளது. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். சிசிடிவி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் யாருக்கும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விரைவில் மருத்துவ பணிக்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார். அவருக்கு பதில் டீன் புல்புல் முகோபாத்யாய், கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்புகளுடன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை வளாகத்தில், கொல்கத்தா சம்பவத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கேட்டும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் மேற்குவங்கம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முதுநிலைப் பட்டதாரி பயிற்சியாளர்கள் தொடர்ந்து 4வது நாளாக போராட்டத்தை தொடர்ந்ததால், மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்பட்டன.
சிபிஐ விசாரணை ேகட்டு 3 மனுக்கள் தாக்கல்
பெண் மருத்துவர் பலாத்கார கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு கொல்கத்தாவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 3 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி எஸ் சிவஞானம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டிஎஸ் சிவஞானம், இந்த பொதுநல வழக்குகளை நீதிபதி ஹிரண்மய் பட்டாச்சார்யா அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்வு: மம்தா உறுதி
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் டாக்டர் கொலை வழக்கை ஞாயிற்றுக்கிழமைக்குள் காவல்துறையால் தீர்க்க முடியாவிட்டால், வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் மம்தா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ குற்றவாளிகளை காவல்துறை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர்களால் வழக்கை முடிக்க முடியாவிட்டால், சிபிஐ வசம் ஒப்படைப்போம். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும்’ என்றார். முன்னதாக கொலை செய்யப்பட்ட பெண் டாக்டர் இல்லத்திற்கு முதல்வர் மம்தா, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலுடன் சென்று ஆறுதல் கூறினார்.
The post பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை; கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜினாமா: சிபிஐ விசாரணை கோரி டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.