×

வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான தகுதியைத் தீர்மானிக்கும் ‘நெட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதையடுத்து இந்த தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, நெட் தேர்வையே ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இதையடுத்து யுஜிசி நெட் தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து வரும் 21ம் தேதி யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் வரும் 21ம் தேதி நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 47 பேர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முன்னதாக இந்த விவகாரத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து அதற்கென்று உருவாக்கப்பட்டுள்ள குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடக்காதவாறு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், வினாத்தாள் கசிவு குறித்து முழு விவரங்களும் தெரியும் வரையில் வரும் 21ம் தேதி நடத்தப்பட உள்ள நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், ‘‘ யுஜிசி நெட் தேர்வு நாடு முழுவதும் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. அதனை சுமார் 9லட்சம் பேர் எழுத உள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் எப்படி தேர்வை ஒத்திவைக்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. 47 பேர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்கும் பட்சத்தில் 9 லட்சம் பேர்களின் எதிர்காலம் பாதிப்படையும் என்று தெரிவித்தார். இதையடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UGC ,Supreme Court ,NEW DELHI ,Union Education Ministry ,UGC NET ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...