விழுப்புரம்: ஒரே இரவில் 22 செ.மீ மழை கொட்டி தீர்த்ததால் விழுப்புரம் நகரம் வெள்ளக்காடானது. தமிழக தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் நிலையில் வட மாவட்டங்களில் மழையின்றி வறட்சியான வானிலை காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கியது. விழுப்புரம் பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கி, விடிய, விடிய கொட்டி தீர்த்தது. ஒரே நாள் இரவில் 22 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியதால் விழுப்புரம் நகரம் வெள்ளக்காடானது. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், பள்ளி வளாகம், குடியிருப்புகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பேருந்துகள் படகுகள் போல தத்தளித்தபடி சென்றன. பல பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.
நகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பழனி, லட்சுமணன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் இப்பணியை ஆய்வு செய்து துரிதப்படுத்தினர். அதேபோல் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேல்களவாய் தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்ததால் 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.கெடார்-செல்லங்குப்பம் சாலையில் உள்ள கோழி பண்ணையில் மழை வெள்ளம் புகுந்ததால் 4,800 கோழிகள் உயிரிழந்தன.
ஒருவர் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கடுவனூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (32), நேற்று முன்தினம் குலதெய்வ கோயில் வழிபாட்டுக்காக மாமியார் வீடான செம்படை கிராமத்திற்கு வந்துள்ளார். இரவில் பைக்கில் மணலூர்பேட்டை சென்றவர் கனமழை காரணமாக கால்வாயில் விழுந்துள்ளார். அதிகளவில் மழைநீர் சென்றதால் நீரில் மூழ்கி பலியானார்.
திருவண்ணாமலை:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ெதாடங்கி அதிகாலை வரை இடி மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. அதிகபட்சமாக தண்டராம்பட்டு தாலுகாவில் 11 செ.மீ மழை பதிவானது. திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நொச்சிமலை ஏரியில் இருந்து கால்வாயில் பெருக்கெடுத்த நீரில் இருந்து பெரிய அளவிலான மீன்கள் வெளியேறியதை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டி போட்டு பிடித்து மகிழ்ந்தனர். மழை காரணமாக சாத்தனூர், குப்பனத்தம், மிருகண்டா செண்பகத்தோப்பு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3,500 ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுதோறும் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமில்லாமல் புதுவை, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உப்பு உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையால் உப்பளங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி குளம்போல் காணப்படுகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் துவங்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மின்னல்தாக்கி மின்பெட்டி வெடித்தது; சிறுமிக்கு கண் பார்வை பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, கெடார் அடுத்த கக்கனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பயங்கர இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவு 12 மணியளவில் கக்கனூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. தூங்கி கொண்டிருந்த அவரது மகள் சன்மதி (14), கண் விழித்துள்ளார். அப்போது வீட்டின் மின்சார பெட்டி வெடித்ததை பார்த்துள்ளார். இதில் அவர் கண் வலியால் கதறி துடித்தார். குடும்பத்தினர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமியின் இரு கண்களும் பாதிப்படைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post ஒரே இரவில் 22 செ.மீ. மழை கொட்டியது; வெள்ளக்காடானது விழுப்புரம் நகரம்: ஓடையில் விழுந்து ஒருவர் பலி; தரைப்பாலம் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.