- 78வது சுதந்திர தின விருது
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- குறைபாடுகள் உள்ளவர்கள்
- சிஜி தாமஸ் வைத்தியன்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவர், வேலைவாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாரா தொண்டு நிறுவனம், சமூக பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என 6 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு மாநில விருதுகளுக்கு 9 பேர் தேர்வாகி உள்ளனர். அதன்படி, அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் அளித்து அவர்களின் நலனுக்காக பணிகளை ஆற்றி வரும் ஆட்சியர்களில் சிறந்த ஆட்சியர்களாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்றும் சிறந்த மருத்துவராக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் விஜயலட்சுமி, சிறந்த சமூக பணியாளராக சென்னை திரிசூலத்தை சேர்ந்த சூசை ஆண்டனி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
சிறந்த நிறுவனமாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த வித்யாசாகர் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனமாக காஞ்சிபுரம் மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட், மதுரை தேங்யூ புட்ஸ், தூத்துக்குடி சந்தானம் பேக்கேஜிங் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வசதிகள் உள்பட அவர்களின் நலன்களில் பங்கெடுத்து வரும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட வங்கி தேர்வாகியுள்ளது.
இதன் மூலம் விருதிற்கு தேர்வான அனைவருக்கும் வரும் ஆக.15ம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் அந்த மாவட்டங்களில் தேசிய கொடியேற்று விழாவில் பங்கேற்க உள்ளதால் அவர்களுக்கு வேறொரு தினத்தில் சென்னையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் வழங்கி சிறப்பிக்கப்படுவர்.
The post 78வது சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த 9 பேருக்கு விருது: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.