திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், 500 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நஷ்டஈடாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வரும்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலடங்கிய திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுத்தது. பின்னர், மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு வட்டத்திற்குட்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. மேலும், வாயலூர் பாலாற்று தடுப்பணையும் நிரம்பியுள்ளது.
இதனிடையே, திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கொத்திமங்கலம், நரப்பாக்கம், பெரும்பேடு, ஈச்சங்கரணை, மேலப்பட்டு, தத்தலூர், அம்மணம்பாக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் சாய்ந்து மூழ்கிப்போனது. இதனால், விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். எதிர்ப்பார்க்காத இந்த திடீர் கன மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிருக்கு அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருக்கழுக்குன்றம் பகுதிகளில் தொடர் மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.