×

டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்

*மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

ஊட்டி : டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் நடந்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) மாநில செயற்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தை முழுமையாக உடனடியாக அமல்படுத்திட வேண்டும். பணிபுரிந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் வயது அரசு ஊழியர்களுக்கு இணையாக 60ஆக உயர்த்திட வேண்டும்.

பணியில் இருக்கும்போது இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு அரசு துறையில் அல்லது டாஸ்மாக் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்.
காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. பாட்டில் பெறும்போது மதுபான கடைகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே, காலி மதுபாட்டில்களை மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனமே திரும்ப பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில நிர்வாகிகள் மாரி, மணிகண்டன், நெல்லை நெப்போலியன், இளங்கோவன், பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,State Working Committee ,Ooty ,State ,Executive ,Committee ,Tamil ,Nadu ,TASMAC Employees Association ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி