×

கடந்த அதிமுக ஆட்சியில் சிறைத்துறையில் மெகா ஊழல் கண்டுபிடிப்பு: ஜாமர் பொருத்தியதில் பலகோடி சுருட்டல்; சிக்கன் வாங்கியதில் கூட கமிஷன்; பொது கணக்கு குழு ஆய்வில் பகீர் தகவல்கள் அம்பலம்; முன்னாள் டிஜிபி ஜார்ஜுக்கு சம்மன்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, சிறைத் துறையில் நடந்த மெகா ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாமர் கருவி பொருத்தியதில் பல கோடி ரூபாய் சுருட்டியதும், சிக்கன் வாங்கியதில் கூட கமிஷன் பெற்ற பகீர் தகவல்களும் பொது கணக்குழு ஆய்வில் அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, முன்னாள் டிஜிபி ஜார்ஜிக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வந்தன. சிறைக்குள் இருந்தபடியே கைதிகள் செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டி செயல்படுத்துவது, போலீசாருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக இருந்தது.

அதாவது, சிறைக்குள் செல்போன்கள் காய்கறிகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவதாகவும், மேலும் வெளியில் இருந்தும் சிறைக்குள் செல்போன்கள் வீசப்படுகின்றன என்றும், அவற்றை சிறைக்குள் கழிப்பறைகள், அறைகளின் மேற்கூரைப் பகுதிகள், மரங்களுக்கு அடியில் என பாதுகாப்பாக கைதிகள் மறைத்து வைத்து பேசுகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவ்வாறு கிடைக்கும் செல்போன்களுக்கு தொலைக்காட்சி பெட்டி, மின்விசிறி, மின்விளக்கு ஆகியவற்றின் மின் இணைப்புகளில் சார்ஜ் செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எனவே, சிறை வளாகத்திற்குள்ளாக கைதிகள் திருட்டுத்தனமாக செல்போனில் பேசுவதைத் தடுக்க ஜாமர் கருவிகளைப் பொருத்துவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க சிறைத்துறை முடிவு செய்தது.

அதன்படி, செல்போன் பேச்சை செயல் இழக்க வைத்து தடுக்கும் ஜாமர் கருவிகளை சிறைகளில் பொருத்தும் திட்டத்தை செல்படுத்த, கடந்த 2006ம் ஆண்டு அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. 9 மத்திய சிறைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.ஒன்றரை கோடி தான் செலவு பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்னை புழல் சிறைக்குள் தற்காலிகமாக ஜாமர் கருவிகளை பொருத்தி ஒத்திகையும் செய்து பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 9 மத்திய சிறைகளில் உள்ள 12 உயர் தொகுப்பு தொகுதிகளில் ரூ.5.40 கோடி செலவில் செல்போன் செயலிழக்க செய்யும் ஜாமர்கள் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புழல், பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி ஆகிய மத்திய சிறைகளிலும், புழல், வேலூர், திருச்சி, கோவை மற்றும் மதுரையில் உள்ள 5 பெண்கள் தனி சிறைகளிலும் கூடுதலாக 12 கருவிகள் ரூ.10.10 கோடி செலவில் அமைக்கப்பட்டதாக அன்றைய அதிமுக ஆட்சி காலத்தில், சிறைச்சாலைகள் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் 6 பேர் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சிறையின் பாதுகாப்பு மற்றும் நடைமுறைகள், கைதிகளுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும், செக்கு எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் கைதிகளின் பணி, நூலகம், கல்வி, தொழிற்பயிற்சி, மருத்துவ சிகிச்சைகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், கடந்த அதிமுக ஆட்சியில் சிறைத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கைதிகளுக்கு சிக்கன் வழங்கியது, முட்டை வழங்கியது, சிறை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நவீன கருவிகள் வாங்கியது உள்ளிட்டவைகளுக்கு ஒதுக்கிய நிதியில் பல்வேறு முறைகேடுகளை நடைபெற்றுள்ளதை ஆதாரத்துடன் இந்த ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒன்றுதான் கைதிகள் திருட்டுதனமாக செல்போனில் பேசுவதை தடுக்கக்கூடிய ஜாமர் கருவிகளை பொருத்துவதற்காக ஒதுக்கிய நிதியை சூறையாடியுள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

அதாவது, தற்போது சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவிகளால் 2ஜி மற்றும் 3ஜி சிக்னல்களை மட்டுமே தடுக்க முடியுமாம். 4ஜி சிக்னல்களை தடுக்க முடிவதில்லை. இதனால், உயர் அடுக்கு பாதுகாப்பு பிரிவுகளில் இருப்பவர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் 4ஜி சிம்கார்டை பயன்படுத்தி தாராளமாக பேசும் தகவலும் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுக்கு காரணம், அன்றைய காலகட்டத்தில் ஜாமர் கருவி பொருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கை வைத்ததும், அவற்றை முறையாக பொருத்தாததுமே காரணம் என்ற தகவலும் சிறைத் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. சிறைத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகள் அனைத்தும் அப்போதைய சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஜார்ஜ் (தற்போது ஓய்வு) காலகட்டத்தில் நடந்துள்ளது என்பதும் ஆய்வு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பவும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவரும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை கூறியதாவது: சிறைகளில் 30 மீட்டருக்கு ஒரு ஜாமர் வைக்க வேண்டும் என்ற விதிகளுடன், அரசு நிறுவனமான பெல் நிறுவனத்துக்கு ஜாமர் கருவி அமைப்பதற்கான ஆர்டர் கொடுக்க வேண்டும். இதுதான் நோட்டிபிகேஷசன். இதற்கான ஆர்டர் போட்டு 32 மாதங்களாக தாமதப்படுத்திக் கொண்டே இருந்துள்ளனர். இங்கே, அங்கே என இழுத்தடித்துள்ளனர். அப்போதைய காலகட்டத்தில் செல்போன்களில் 3ஜி தான் பயன்பாட்டில் இருந்தது. இறுதியாக 32 மாதங்கள் தாமதப்படுத்தி ஜாமர் கருவியை பொருத்துகின்றனர். அந்த ஜாமர் கருவி 30 மீட்டர் மட்டுமே வேலை செய்யும். ஆனால், சிறைகளில் உயர் பாதுகாப்பு பிரிவு எல்லாம் 90 மீட்டர் அளவில் உள்ளது. ஜாமர் கருவி பொருத்துவதற்கு 32 மாதம் கால தாமதம் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு தாமதப்படுத்தியதால் டெக்னாலஜி எல்லாம் மாறிவிட்டது. அதன்பிறகு 4ஜி காலம் வந்துவிட்டது.

4ஜி வந்ததால், 30 மீட்டருக்கு ஒரு ஜாமர் என்று பொருத்தப்பட்டது, 3ஜி அலைகளை மட்டுமே கட்டுப்படுத்தக்கூடியது. இதனால் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்துபவர்கள் 4ஜி மூலம் செல்போன்களை சிறைகளில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். முறையாக ஜாமர் கருவி பொருத்தப்படாததால், ஒரு பக்கம் பண விரயம், இன்னொரு பக்கம் கால தாமதம், இன்னொன்று அதை சரியாக 30 மீட்டர் உயரத்தில் போடவில்லை. அப்போது சிறைத்துறை டிஜிபியாக ஓய்வு பெற்ற ஜார்ஜ் தான் இருந்துள்ளார். இதனால் அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்து அதற்கான உத்தரவை போட்டுள்ளோம். மேலும் கைதிகளுக்கு சிக்கன், முட்டை வழங்கியதில் இருந்து கேன்டீன், வயர்லெஸ், சிசிடிவி காணாமல் போய்விட்டது வரை ஒவ்வொரு முறைகேடாக இனி ஆதாரத்துடன் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த அதிமுக ஆட்சியில் சிறைத்துறையில் மெகா ஊழல் கண்டுபிடிப்பு: ஜாமர் பொருத்தியதில் பலகோடி சுருட்டல்; சிக்கன் வாங்கியதில் கூட கமிஷன்; பொது கணக்கு குழு ஆய்வில் பகீர் தகவல்கள் அம்பலம்; முன்னாள் டிஜிபி ஜார்ஜுக்கு சம்மன் appeared first on Dinakaran.

Tags : Bakeer ,Public Accounts Committee ,TGB ,George ,Chennai ,Samman ,DGP ,Dinakaran ,
× RELATED செபி தலைவர் மாதவி புச்சுக்கு சம்மன்...