நன்றி குங்குமம் டாக்டர்
உங்கள் சிகிச்சை உங்கள் உரிமை
கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
நம் நாட்டில் மனிதர்களிடையே தங்கள் உடல் இயங்கும் விதம், நோய்களின் தன்மை, அவற்றின் காரணம், அவற்றிற்கான சிகிச்சை முறைகள், சிகிச்சைக்கு பின்னான நடைமுறைகள் இவை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் கண் மருத்துவம் அதிக விழிப்புணர்வு தேவைப்படும் துறையாகவே இருக்கிறது.
தற்சமயம் கூகிளின் புண்ணியத்தால் எல்லா நோய்களையும் பற்றி மக்கள் தங்கள் திறன்பேசியில் தட்டச்சு செய்து உடனே தெரிந்து கொள்கிறார்கள். நானும் கூட சில நோய்களைப் பற்றிய புகைப்படங்கள், காணொலிகளைக் காட்டி விளக்குவதற்கு திறன் பேசியை உபயோகிக்கிறேன். இருந்தும் பல சமயங்களில் நோய் குறித்த பதற்றத்தை இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள் அதிகரிக்கவே செய்கின்றன.
பிற நோய்களை விட, கண் நோய்களை அணுகுவதில் மக்களிடையே அதிக பயம் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு பெரியவரைப் பற்றிச் சொல்கிறேன். ஏற்கனவே மாரடைப்பு வந்து பைபாஸ் செய்து கொண்டவர் அவர். கண்புரை அறுவை சிகிச்சையும் செய்து இரண்டு கண்களிலும் லென்ஸ் பொருத்தியிருக்கிறார். இதய அறுவைசிகிச்சையைக் கூட எளிதாக எடுத்துக் கொண்டு காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டு வாழும் அவர், எப்போதும் கண் அறுவைசிகிச்சை குறித்த பாதுகாப்புணர்வுடனும் கவலையுடனுமே இருக்கிறார்.
கண் மருத்துவத்துடன் இணைந்து, பொது மருத்துவமும் பார்த்து வரும் என்னால் ஒப்பீட்டளவில் மக்களிடையே இருக்கும் கண் குறித்த பதட்டத்தை எளிதில் அவதானிக்க முடிகிறது. எந்த ஒரு உடல் பிரச்னைக்கும் கவனமும், பாதுகாப்பு உணர்வும் தேவை என்றாலும் அதீத பதற்றம் தேவையற்றது என்பதே என்னுடைய கருத்து.கண் என்பது மிகச் சிறிய உறுப்பு. அதன் உள்ளே ஒளிந்திருக்கும் விந்தைகளும் ஏராளம் என்பதால் கண் மருத்துவத்தில் புரிதல் குறைவாக இருக்கிறது. இதுவும் அதிக பயம் தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணம்.
எந்தத் திறனை இழந்தாலும் கண்பார்வைத் திறனை இழப்பதை எந்த மனிதனும் விரும்புவதில்லை. இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டவர், ‘என் ரத்த நாளத்தில் அடைப்பு. அதனால் கால்களில் இருந்து உபரி ரத்த நாளத்தை எடுத்து இதயத்தில் பொருத்தி சரி செய்தார்கள்’ என்று எளிதாக விளக்கிவிடுகிறார். ஆனால் கண்ணில் பலகட்ட அறுவை சிகிச்சை செய்து வந்த ஒருவருக்கு, தனக்கு என்ன சிகிச்சை செய்தார்கள் என்பதே தெரிவதில்லை.
பல நோயாளிகளின் கையில் அவர்களின் பழைய பரிசோதனை அறிக்கை இருப்பதில்லை (old records). நமக்கு என்ன சோதனை செய்யப்பட்டது, அதன் முடிவு என்ன என்பது குறித்த அறிக்கையை அவசியம் கையில் வைத்திருக்க வேண்டும். சளி, காய்ச்சல், வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளில் நோயாளியின் அறிகுறிகளையும், அவர்கள் கையில் வைத்திருக்கும் மாத்திரை மருந்துகளையும் பார்த்து மருத்துவரால் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். ஆனால் கண் பரிசோதனை சற்றே வித்தியாசமானது. பல கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னரே மருத்துவர் அந்த நோய் குறித்த இறுதி முடிவுக்கு வந்திருப்பார். அடுத்து தொடர் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் முந்தைய நோயறிதல் குறித்த அறிக்கை மிக முக்கியம்.
பல மருத்துவமனைகள் இன்று நோயாளி பரிசோதனை அறிக்கைகளை நோயாளியின் கையில் கொடுக்காமல் பத்திரமாக சேமித்து வைத்திருக்கின்றன. மீண்டும் அந்த நோயாளி அதே மருத்துவமனைக்கு செல்லும் பட்சத்தில் அவரால் எளிதில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். மருத்துவருக்கும் அதுவே வசதியானதாக இருக்கும். முன்பு பெரும்பாலான நோயாளிகள் தங்கள் முந்தைய காலப் பரிசோதனை அறிக்கைகளை பத்திரப்படுத்தி வைக்காமல் தொலைத்துவிடுவார்கள் என்பதால் இந்த நடைமுறை சரியானதாக இருந்தது. இப்போது நிலைமை அப்படி அல்ல. இன்றைய கணினி யுகத்தில் மருத்துவமனைக் கணினியில் நோயாளியின் அறிக்கையை சேமித்து வைக்கும் அதே தருணத்தில் நோயாளிக்கும் அச்சிடப்பட்ட தாளோ அல்லது மென்நகலோ (soft copy) தரலாம்.
கையில் பரிசோதனை அறிக்கை இல்லாததால் சிரமப்படும் பல நோயாளிகளை நான் அன்றாடம் சந்தித்து வருகிறேன்.என் தோழி ஒரு பிரபல மகப்பேறு மருத்துவர். அவருடைய தந்தை ஒரு பெரிய கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருக்கிறார். பின் அவர் தன்னுடைய மகன் வீட்டிற்கு அமெரிக்கா சென்று விட, அங்கு கண்ணில் அதிக வலியும், நீர் வடிதலும் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு சென்று பரிசோதித்த போது உங்கள் கண்ணில் கண் அழுத்தம் அதிகமாக உள்ளது என்று கூறி வேறு சில சிகிச்சைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த சிகிச்சைகளுக்காக அவர்கள் கொடுத்த அப்பாயின்ட்மென்ட் தேதி பல வாரங்கள் கழித்து அமைந்திருக்கிறது.
அதுவும் போக அவர் சுற்றுலா விசாவில் தான் அங்கு சென்றிருந்தார், அங்கு உள்ள குடிமக்களைப் போல் இன்சூரன்ஸ் திட்டம் துணைக்கு வராததால் மிக அதிகமான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக நமது ஊரில் சுமார் 2000 ரூபாயில் அந்த சிகிச்சையை முடித்துவிட முடியும் என்றால் அங்கே இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படும் அளவிற்கு கட்டண விகிதங்கள் அவர்களை பயமுறுத்தின. தோழிக்கும் தந்தையின் முழு பரிசோதனை விவரங்கள் தெரியவில்லை.
என்னைத் தொடர்பு கொண்டு அவர்கள் கேட்ட பொழுது நான் இந்தியாவில் இருந்த போது என்னென்ன அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றார்கள், என்னென்ன பரிசோதனை செய்யப்பட்டது, அந்தப் பரிசோதனைக்கு எவ்வளவு கட்டணம் வாங்கினார்கள், கண்களில் லேசர் வைத்தார்களா, ஒரு லென்ஸை கண்ணில் மாட்டி லைட் அடித்தார்களா, டக் டக் என்று சத்தம் வந்ததா, சுமார் நானூறு ரூபாய்க்கு ஒரு சொட்டு மருந்து கொடுத்தார்களா, அதை சரியாக போட்டீர்களா என்று சுமார் 30, 40 கேள்விகள் கேட்ட பிறகே அவருக்கு என்ன நோய் ஏற்பட்டிருந்தது என்பதை என்னால் உத்தேசமாக அறிந்துகொள்ள முடிந்தது.
பின் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று ஆலோசனை வழங்கினேன். ஆறு மாதப் பயணம் என்று திட்டமிட்டுக் கொண்டு மகனைப் பார்க்கச் சென்ற அந்தப் பெரியவர் இரண்டு மாதத்தில் திரும்பி வந்து விட்டார். அதன் பின் பழைய மருத்துவமனையிலேயே தன்னுடைய சிகிச்சையைத் தொடர்ந்து தற்போது நலமாக இருக்கிறார். அவரது முந்தைய பரிசோதனை அறிக்கைகள் அவரது கையில் இருந்திருந்தால் மிக எளிதாக இந்தச் சிக்கலைக் கடந்திருக்க முடியும்.
கண் மருத்துவத்தில் இருக்கும் இன்னொரு சவால் கண் என்பது மிகச் சிறிய உறுப்பாக இருப்பதால் அதன் உள்ளுறுப்புகளைக் கண்காணிக்க மிக நுணுக்கமான இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இவை அதிக விலையை உடையவையாகவும் இருக்கின்றன.சிறுநகரம் ஒன்றில் கண் மருத்துவம் பார்த்து வரும் நான் வாரத்திற்கு ஒரு முறையேனும் கூடுதல் பரிசோதனைகளுக்காக ஒரு நோயாளியைப் பெருநகரங்களுக்கு அனுப்ப நேர்கிறது. அப்படி அனுப்பும் நோயாளிகளிடம், ‘நீங்கள் எடுக்கும் ஸ்கேன் அல்லது டெஸ்ட் அறிக்கைகளைக் கேட்டு வாங்கி வாருங்கள், ஒரு கோப்பில் அவற்றைப் பத்திரப் படுத்துங்கள்’ என்று அறிவுறுத்துகிறேன்.
தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களில் முக்கியமானது கண் அழுத்த நோய். இதை சைலன்ட் கில்லர் என்று கூறுவார்கள் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இதில் செய்யப்படும் ஒரு முக்கிய பரிசோதனை automated perimetry. என்னிடம் வரும் நோயாளிகளில் ஒருவருக்குப் புதிதாகக் கண் அழுத்த நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அவருக்கு ஆப்டிக் நரம்பின் பாதிப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது, அதனால் பார்வை வட்டம் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை அறிய இந்தப் பரிசோதனை அவசியம்.
என்னுடைய அலைபேசி மூலமாக இணையத்திலிருந்து அறிக்கை ஒன்றை எடுத்துக்காட்டி, இது போன்றதொரு அறிக்கை தருவார்கள், உங்களுடைய பாதிப்புக்கு தகுந்தவாறு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ இந்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு ஆண்டின் அறிக்கையையும் ஒப்புநோக்கி உங்களுக்குத் தொடர்ந்து சொட்டு மருந்து தேவையா, அறுவை சிகிச்சை எப்போது தேவை என்பதை முடிவுசெய்வோம் என்று கூறி அனுப்புகிறேன்.
விழித்திரை தொடர்பான OCT, FFA பரிசோதனைகள், கருவிழி தொடர்பான topography இவற்றிற்கும் இதுவே பொருந்தும். மருத்துவக் கல்வியில் ஆரம்ப பாடங்களில் Medical ethics பற்றி சொல்லித் தருவார்கள். ஒரு நோயாளியிடம் சம்மதம் பெற்ற பின்னரே அவருக்கு சிகிச்சை தொடங்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கியமானபாலபாடம். அதாவது உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்று மருத்துவர் உங்களைக் கேட்டு நீங்கள் சம்மதித்து கையெழுத்திட்டால் தான் அவர் உங்களுக்கு அறுவை சிகிச்சையைத் தொடங்குவார்.
இதற்கு informed written consent என்று பெயர். அதே சமயம் நீங்கள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவர் சிரிஞ்சில் மருந்தை ஏற்றித் தயாராக இருக்கும்பொழுது உங்கள் சட்டையை உயர்த்தி கை புஜத்தைக் காட்டுகிறீர்கள் என்றால் அது நீங்கள் உங்கள் சம்மதத்தை குறிப்பால் உணர்த்துகிறீர்கள் என்று பொருள். இதை implied consent என்கிறோம். நீங்களாகவே நாக்கை நீட்டி, “எனக்குத் தொண்டையில் புண் இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொல்வது கூட implied consent தான்.
இப்படி ஒரு சிகிச்சை அளிப்பதற்கும், பரிசோதனை செய்வதற்கும் உங்கள் சம்மதம் மருத்துவருக்குத் தேவை. அது உங்கள் உரிமையும் கூட. அதேபோல, நீங்கள் பணம் செலுத்தி உங்கள் உடலைப் பரிசோதனை செய்துகொண்டாலும் சரி, இலவசமாகப் பரிசோதனை செய்து கொண்டாலும் சரி, அதை ஆவணப்படுத்தி உங்கள் கையிலே கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையும் மருத்துவருக்கு இருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் சிகிச்சை உங்கள் உரிமை!
The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே appeared first on Dinakaran.