×

நோய் நாடி நோய் முதல் நாடி

நன்றி குங்குமம் டாக்டர்

பொது நல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு

உடலும் உள்ளமும் நலம்தானா?

மருத்துவம் என்றாலே ஹிப்போகிரட்டீஸ், அரிஸ்டாட்டில் மற்றும் கலிலியோ இவர்களின் மூலம்தான், இன்றைய அலோபதி மருத்துவத்தின் வளர்ச்சியை நம்மால் அனுபவிக்க முடிகிறது என்று கூற வேண்டும். இன்றைக்கு பல மருத்துவர்கள் மருத்துவக் கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், உடலின் தனித்தனி பாகங்களின் நலன்களையும், விளைவுகளையும் புத்தகமாகக் கொண்டு வர முதல் காரணகர்த்தா ஹிப்போகிரட்டீஸ் என்பவரை நாம் என்றென்றைக்கும் மறக்கக் கூடாது. தமக்குப் பிறகு, தான் கற்ற மருத்துவ முறைகள் எதுவும் அழிந்து போய் விடக் கூடாது என்று, தன்னுடைய மருத்துவம் பற்றிய தகவலை முதல் முதலாக தொகுத்தவர் ஹிப்போகிரட்டீஸ் ஆவார்.என்ன இந்த பெயர்கள் அனைத்தும் வெளிநாட்டினவர்களாக இருக்கிறார்களே, நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் யாரும் நினைவில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.

அன்றும், இன்றும், என்றும் புத்தக வடிவில் காலம் காலமாக மக்களிடம் ஆரோக்கியம் பற்றிப் பேசுகின்ற நூல் என்றால் திருக்குறள்தான் என்று உறுதியாகக் கூறுவேன். திருக்குறளைப் படித்தால் போதும், மனிதர்கள் யுகம், யுகமாக காலநிலை மற்றும் வாழ்வியல் சூழ்நிலையால், உடலால், மனதால் பாதிக்கப்படும்போது உடலையும், மனதையும் என்றைக்கும் எந்த இக்கட்டான சூழலிலும் பாதுகாக்கப் போராடு என்பதை அவரது அனைத்து குறல்களும் நமக்குப் போதிக்கின்றன. அதனால் உடல் மற்றும் மனநலன் ஆரோக்கியத்திற்கு திருவள்ளுவரின் குறள்களை விட்டு நம்மால் அடுத்த புத்தகத்திற்கு நகர முடியாது.

நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் னிதனுக்கு ஏற்படும் நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோயைத் தீர்க்கும் வழி என்ன? இந்த மூன்றையும் வைத்து தான், ஒரு மருத்துவர் நோயைப் பற்றியும், நோயின் வீரியத்தை பற்றியும் புரிந்து, அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் கூறுகிறார்.மனிதர்களின் உடல் மற்றும் மனநல சிகிச்சையைப் பற்றி இன்னும் பரிணாம வளர்ச்சி ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், அதைதான் அலோபதி மருத்துவம் என்று அழைக்கிறார்கள்.

அலோபதி என்கிற வார்த்தை முதல் முறையாக ஹோமியோபதி நிறுவனர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் உருவாக்கப்பட்டது. உயிர் வேதியியல், உடற் கூறியியல், திசுக்கள், செல்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு இடையிலான தொடர்புகள் என்று அனைத்தையும் ஒரு சேர சரிபார்த்து, அதன் பிறகான சிகிச்சையை ஆரம்பிக்கும் முறையே அலோபதி மருத்துவமாகும். இந்த மருத்துவம் ஆங்கிலேய காலத்தில் இருந்து தான் இந்தியாவில் வேகமாக வளர ஆரம்பித்தது.

உதாரணத்திற்கு எங்க தாத்தா ரேடியோவில் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு பற்றி கேட்டு இருக்கலாம், எங்க அப்பா செய்திதாள்கள் வழியாக விழிப்புணர்வு பற்றி படித்து இருக்கலாம், நானோ காட்சி ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தொழிநுட்பம் மூலம் விழிப்புணர்வு பற்றி தெரிந்து கொள்கிறேன். இப்படியாக என்னுடைய மூன்று தலைமுறை மக்களும் மருத்துவம் மற்றும் மருத்துவ சிகிச்சை சார்ந்த விழிப்புணர்வை விதம் விதமாக தெரிந்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் ஏன் இன்னும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகள் தேவைப்படுகிறது என்ற கேள்வி நம்முன் எளிமையாக, ஆனால் சவாலாக நிற்கிறது.

எந்தவொரு உயிரும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தற்காத்துக் கொள்ள தான் முயற்சி செய்யும். அது நோயாக இருந்தாலும் சரி அல்லது பருவ நிலையால் ஏற்படும் பாதிப்பாக இருந்தாலும் சரி போரிட்டு பாதுகாத்துக் கொள்ள தான் முயற்சி செய்யும். உதாரணத்திற்கு, தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக் கூடுகளை எடுத்து தமிழரா, கறுப்பினத்தவரா, ஆங்கிலேயரா என்றெல்லாம் கூறுகிறார்கள். அவர்களைப் போல், மருத்துவ ஆய்வாளர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன் கிடைத்த எலும்புக் கூடுகளை ஆய்வு செய்து, அவர்களில் எத்தனை சதவீதம் பேர் உடலில் ஏற்பட்ட நோயினால் இறந்துள்ளார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனித உடலில் நோய் என்பது மனித இனம் ஆரம்பமானதிலிருந்து இருக்கிறது. நோய் இருக்கிறது என்றாலே, சிகிச்சையும் இருக்கிறது என்பதாக அர்த்தப்படுத்தப்படுகிறது. அந்த சிகிச்சை முறை தான் காலத்திற்கேற்றவாறு மாறிக் கொண்டே இருப்பதால், நாமும் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கவும், எழுதவும் வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு ஆடி கார் கம்பெனியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இந்த கார் கம்பெனியில் இருந்து, வரிசையாக 1000 கார்களை, ஒரே மாடலில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒரு காரில் சிறிய பிரச்னை என்றாலும், அதை சரிசெய்யும் டெக்னிக்கை கண்டுபிடித்துவிட்டால், மீதமுள்ள 999 காருக்கும் அந்த டெக்னிக்கை மெக்கானிக் ஒரு சேர பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு மருத்துவர், 1000 மனிதர்கள் காய்ச்சல் என்று வந்தால், ஒரே சிகிச்சையை ஆயிரம் பேருக்கும் செய்ய முடியாது. சிலருக்கு மருந்தின் வீரியம் மாறும், சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும், சிலருக்கு அதிக வீரியமான மருந்து மட்டுமே உடல் ஏற்றுக் கொள்ளும். அப்படி இருக்கும் போது, இங்கு ஒவ்வொரு மனித உடலும் ஒரு வகையான சிலபஸ் என்று தான் மருத்துவர்கள் எடுத்துக் கொள்வோம்.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் விஷயங்கள் பற்றி பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் பேசுகிறோம். உண்மையில் மனிதர்களின் உடல் இயல்பாகவே ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அதாவது தானியங்கி என்று சொல்லக்கூடிய முறையில் இயங்குகிறது. சமூகவியல் பாடத்தில் இந்த பூமியானது மூன்றில் இரண்டு பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் ஆனது என்று படித்திருக்கிறோம். அது போல் தான், நம்முடைய உடலும், அதன் எடையில் இரண்டு பங்கு நீரால் இருக்கும். அதனால் தான் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று அனைத்து ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

அடுத்தபடியாக, ஆட்டோ ரெகுலேஷன் அதாவது, உடலில் ஒரு இடத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்றால், ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் மற்ற பாகங்கள் பாதிக்கப்படாமல், தானாக அந்த பாதிக்கப்பட்ட இடத்தை மட்டும் சரி செய்து விடும். அடுத்தபடியாக மிகப்பெரிய உடல் உறுப்பு என்றால், தோல் என்று கூற வேண்டும். தோலில் ஏற்படும் அரிப்பு, தோல் சார்ந்த நோய்களை வைத்து, உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூற முடியும்.

அப்படி ஒரு நேர்த்தியான அமைப்புடன் இருக்கும் மனித உடலுக்குள் இன்றைக்கு விதம் விதமாக, நோய்களும், வாழ்வியல் முறைகளும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகின்றன என்று பல மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் மருத்துவத்துறை மக்களிடம் தெளிவான கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஏனென்றால், சின்ன கவுண்டர் படத்தை வைத்து ஒரு உதாரணம் சொல்கிறேன். சின்ன கவுண்டர் படத்தில் முதல் சீனில் நீதிபதியும், டிரைவரும் ஊருக்குள் செல்லும் போது, மக்கள் ஒரு இடத்தில் கூட்டமாக கூடியிருப்பார்கள். அதைப் பார்த்து நீதிபதி வண்டியை நிறுத்தச் சொல்லுவார். அந்த இடத்திற்கு வந்த நீதிபதி, விஜயகாந்த் அங்கு இருவருக்கு நடந்த சொத்துப் பிரச்னையை ஒரே ஒரு தடவை பேசி பிரச்னைக்கு முடிவு கூறி விடுவார். அதை பார்த்த நீதிபதி, டிரைவரிடம் கேட்பார், நம்ம கோர்ட்க்கு இந்த கேஸ் வந்தால், இந்த தீர்ப்பு வர எத்தனை மாதமாகும் என்று கேட்பார். அதற்கு டிரைவர் நக்கலாக வருஷக் கணக்காகும் என்பார்.

அதாவது முறையாக படித்த நீதிபதியும், அதற்கான தளமாக நீதிமன்றமும் தேவையற்றது என்று சொல்வது போல், ஒரு சில மக்களும், மருத்துவர்கள் இல்லாமல், தங்களுக்கு ஏற்படுகின்ற நோயை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.ஒருவர் உடலில் நோயோடு வந்தால், ஒரே ஒரு மாத்திரையில், அதுவும் தூங்கி எழுந்தவுடன் சரியாக வேண்டுமென்று எண்ணத்துடன் வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், அரசும், மருத்துவத் துறையும் மாறி மாறி ஒவ்வொரு நோயைப் பற்றியும், நோயின் தன்மையைப் பற்றியும், அரசு மருத்துமனையிலுள்ள சிகிச்சை சார்ந்த வசதிகள் பற்றியும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்த தொடர் முழுவதும் மனிதர்களின் உடலில் ஏற்படும் நோயின் தன்மையைப் பற்றியும், அதிலுள்ள சந்தேகங்கள் பற்றியும், உடல்நலன் சார்ந்து பேசப்படும் தவறான தகவல்களை எவ்வாறு கையாள்வது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் அனைத்தும் பேசப் போகிறோம். வாங்க, இனி சரியான தகவல்களை முறையாக தெரிந்துகொள்ளலாம்.

The post நோய் நாடி நோய் முதல் நாடி appeared first on Dinakaran.

Tags : Nadi Nadi Nadi ,Dr. ,Kungum ,T.M. ,Hippocrates ,Aristotle ,Galileo ,
× RELATED சிறந்ததை நோக்கிய பயணம்!