×

குமரி கடல் பகுதியில் 2.2 மீ உயரத்திற்கு பேரலைகள் சுற்றுலா பயணிகள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில், ஆக.6: குமரி மாவட்ட கடல் பகுதியில் 2.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சுற்றுலா பயணிகள், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென் தமிழக கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 2.1 மீட்டர் முதல் 2.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருக்கும். காற்றின் அளவு 35 கி.மீ முதல் 45 கி.மீ வரையிலும், சில நேரங்களில் மணிக்கு 55 கி.மீ வேகம் அதிகமாக இருக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுவித்துள்ளனர்.

அதன்படி கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் கட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும் என்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கும், மற்றும் கடலில் குளிக்கவும் செல்ல வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அந்த எச்சரிக்கை தொடருகின்ற நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை (7ம் தேதி) வரை இந்த நிலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் கண்காணிப்பு
கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத்துறை, லெமூர் பீச், குளச்சல், தேங்காப்பட்டணம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post குமரி கடல் பகுதியில் 2.2 மீ உயரத்திற்கு பேரலைகள் சுற்றுலா பயணிகள், மீனவர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumari Sea ,NAGARGO, AUG ,KUMARI DISTRICT SEA ,Arokipuram ,South Tamil Nadu ,Kumari Sea Region ,
× RELATED குமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்