×

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

குன்றத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 14.50 அடி உயரமும் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1441 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. மேலும், ஏரிக்கு தொடர்ந்து 577 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதாலும், ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக செம்பரம்பாக்கம் ஏரிகளின் மதகுகள் சீரமைக்கும் பணி நடந்து பெற்று வந்தது. இந்நிலையில், மழையின் காரணமாக அப்பணிகள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் ஏரியில் 22 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு லேசான மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், மாலை மேக மூட்டமாகவும் இருந்தது. இரவு 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஓரிக்கை ஆசிரியர் நகர், ஜெம் நகர் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீர் தேங்கியதால், பள்ளி மாணவ – மாணவிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கிளம்பி சென்றனர்.

The post இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,PWD ,Kunradthur ,Chennai ,Public Works Department ,Chennai, Chennai ,Sembarambakkam Lake ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்