×

₹26 கோடி செலவில் உப்பனாறு மேம்பாலப் பணிகளுக்கு புதிய டெண்டர்

*2 மாதங்களில் முடிக்க திட்டம்

*கவர்னர் அதிரடி

புதுச்சேரி : புதுச்சேரி உப்பனாறு மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித்துறை புதிதாக டெண்டர் கோரியுள்ளது. கிடப்பில் உள்ள பணிகளை ரூ.26 கோடி செலவில் 2 மாதங்களில் முடிக்க பொதுப்பணித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

உப்பனாறு மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2005ம் ஆண்டு துவங்கியது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், உப்பனாறு கால்வாய் மீது மேம்பாலம் அமைத்து காமராஜர் சாலையை மறைமலை அடிகள் சாலையுடன் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நிர்வாக குளறுபடிகள், ஒப்பந்ததாரருடன் ஏற்பட்ட பிணக்கு, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் நிறைவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்த மேம்பாலம் 732 மீட்டர் நீளத்துடன் இருவழிபாதைகளுடன் அப்போது, வடிவமைக்கப்பட்டது.

ஆனால் 632 மீட்டர் நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு திடீரென வேலைகள் நிறுத்தப்பட்டது. மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா அருகேயும், காமராஜர் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகிலும் மேம்பாலத்தினை இணைக்கும் 100 மீட்டர் பணிகள் நடைபெறவில்லை. அதேபோல் பாலத்தின் தடுப்பு கட்டைகள், நடைபாதைகள் என இதர பணிகளும் நிலுவையில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது மீதமுள்ள பணிகளை முடிக்க புதிதாக டெண்டர் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மீதமுள்ள பணிகளை முடிக்கவும், பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள பாலத்தினை மீண்டும் மறு கட்டுமானம் செய்யவும் டெண்டர் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காமராஜர் சாலையில் உள்ள பாலம் 60 ஆண்டுகள் பழமையானது என்பதால், கட்டமைப்பு ரீதியாக வலுவாக இல்லை, இதனுடன் உப்பனாறு மேம்பாலத்தை இணைத்தால் நிலை குலைந்து உடையும் வாய்ப்புகள் உள்ளது என, சென்னை வடிவமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. எனவே இதனை மறுகட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பணிகளையும் நிறைவு செய்ய தோராயமாக ரூ.26 கொடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பணிகளையும் முடிக்க குறைந்தது, இரண்டு மாதங்கள் ஆகலாம். அடுத்த ஆண்டு உப்பனாறு பாலப்பணிகள் உறுதியாக நிறைவு செய்யப்படும். இந்த மேம்பாலமானது, 7.5 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாகவும், இதில் 1.5 மீட்டர் அகலத்தில் இருபக்கங்களில் நடைபாதையும், அதன்கீழ் நீர் வெளியேற்றும் குழாய்கள் பதிக்கப்பட வேண்டும். பாலம் கட்டுமான பணியுடன், வடிகால் வசதி, பலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றனர்.

The post ₹26 கோடி செலவில் உப்பனாறு மேம்பாலப் பணிகளுக்கு புதிய டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Uppanaar ,Puducherry ,Public Works Department ,PWD ,Uppanar ,Dinakaran ,
× RELATED குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால்...