×
Saravana Stores

சங்கரர் போற்றும் ஜெகன் நாதன்

வளமும் நலமும் நிறைந்த உத்கல தேசம். அந்த தேசத்தின் அற்புதமான தலைநகரம் ஜஜனக்னா அதாவது இன்றைய ஜெய்பூர். கிட்டத்தட்ட கிமு ஐநூற்றி ஒன்பதாம் ஆண்டு. ஆதிசங்கரர் உத்கல தேசத்திற்கு விஜயம் செய்கிறார் என்று அறிந்ததும் மன்னன், மஹாபாபா குப்த ஜஜத்தி கேசரி நாட்டின் எல்லையிலேயே, ஞானத்தின் சிகரமான ஆச்சாரியரை வரவேற்க காத்திருந்தான். வரவேற்பும் மரியாதையும் தடபுடலாக நடந்தது. மன்னன் பக்தியை ஏற்ற சங்கரர், அவனுக்கு உள்ளம் உவக்க ஆசி வழங்கினார். பிறகு அங்கே ஓடும் புனித நதியான பைதரணி நதியில் நீராடி, நதிக்கரையில் கோயில் கொண்டு விளங்கிய பூவராக சுவாமியை வணங்கினார்.

பிறகு மன்னனை நோக்கி, ‘‘ஸ்கந்த புராணமும், ஏனைய மற்ற புராணங்களும் புகழும், ஸ்ரீக்ஷேத்ரம் எங்கே இருக்கிறது மன்னா?. மூவுலகும் உண்டு உமிழ்ந்த முதல்வன், ஜெகன் நாதன் என்ற திருநாமம் தாங்கி காட்சி தரும் திருத்தலம் எங்கே? மண்ணும் விண்ணும் அளந்த வள்ளல், மரத்திருமேனியோடு தாரு பிரம்மமாக காட்சி தரும் பூரி ஜெகன்னாதர் கோயில் எங்கே’’ என்று ஜெகன்நாதனை தரிசிக்கும் ஆவலில் கேள்விக்கணைகளை வரிசையாகத் தொடுத்தார்.

ஆனால் ஆச்சாரியார் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் தர முடியாமல், இன்னமும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஆச்சாரியார் என்ன கேட்கிறார் என்பதே புரியாமல் திருதிருவென விழித்தான் மன்னன். சட்டென சாங்கரரை பணிந்தான் மன்னன். ‘‘குரு தேவா நீங்கள் கேட்பதை பார்த்தால், அந்த திருத்தலம் மிகவும் மகிமை வாய்ந்த ஒன்றாக விளங்க வேண்டும். ஆனால் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில், இங்கு அப்படி இரு திவ்ய தேசம் இல்லை. தாங்கள் அந்த திவ்யதேசத்தைப் பற்றி குறிப்பு தந்தால் எனது சேவகர்களை கொண்டு அந்த திருத்தலத்தைத் தேட முற்படுவேன்’’ என்று பணிவாக சொன்னான் மன்னன்.

பூரி ஜெகன் நாதர் கோயில் இருக்கும் இடம் இல்லாமல் மறைந்து போய் விட்டது சங்கருக்கு பெரும் சங்கடமாக இருந்தது. ஆனாலும் தன்னைத் தேற்றிக் கொண்டு புனித தலமான பூரியை மீட்டு எடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். பிறகு சங்கரர் ஆணைப் படி நாலாபுறமும் மன்னனின் ஆட்கள், பூரி திவ்யதேசத்தை தேடி அலைந்தார்கள். இறுதியாக மன்னனின் ஆட்களில் சிலர், ஜெகன்நாதனைப் பற்றிய ஒரு தகவலோடு திரும்பி வந்தார்கள்.

நூற்றி நாற்பது வருடங்களுக்கு முன்னால் இருந்த பாரதத்தை, ஷோவன் தேவன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் இரண்டாவது ஆண்டில், ரக்தபாகு தலைமையிலான யவனர்கள், பாரதத்தை நோக்கி படை எடுத்து வந்தார்கள். வஞ்சக நெஞ்சம் கொண்ட அவர்களிடமிருந்து பூரியில் இருக்கும் இறைவன் திருமேனியை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார்கள், பூரி ஜெகன்நாதர் கோயில் அர்ச்சகர்கள்.

ஆகவே அவர் அருகில் இருந்த சோனேபூர் என்னுமிடத்தில், பூமியில் ஆழமாக குழி தோண்டி அதில் ஜெகன்நாதன் திருமேனியை புதைத்து அதற்கு மேல் ஒரு ஆலமரத்தையும் நட்டார். ஆலமரம் எளிதாக வளராது. அப்படியே வளர்ந்தாலும், விழுதுகள் பல விட்டு பெரும் மரமாக வளரும். ஆகவே ஆலமரத்தை ஜெகன்நாதன் இருக்கும் இடத்திற்கு குறியீடாக நட்டார் கோவில் அர்ச்சகர். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட படியால், பலர் ஜெகன் நாதனை மறந்தேவிட்டார்கள். ஆனால் சோனேபூரில் இருக்கும் மக்கள், ஜெகன் நாதர் புதைக்கப்பட்டு இருந்த இடத்தின் மேலே நடப்பட்டு இருந்த ஆலமரத்தை ஜெகன் நாதன் வடிவமாக வழிபட்டு வந்தார்கள்.

விஷயம் அறிந்ததும் மன்னனும், சங்கரரும் ஜெகன்நாதன் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றார்கள். மண்ணைத் தோண்டினார்கள். ஆனால் பூவுலகில் ஜெகன்நாதன் அடியவர்க்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, ஜெகன் நாதன் திருமேனி மொத்தமாக அழிந்துவிட்டு இருந்தது. ஜெகன் நாதன் திருமேனி மரத்தால் ஆன திருமேனி என்பதாலும், மண்ணில் பல ஆண்டுகள் புதை பட்டு இருந்ததாலும் ஜெகன் நாதன் திருமேனி மொத்தமாக அழிந்து விட்டது ஆனாலும் ஜெகன் நாதன் திருமேனியில் இருந்த பிரம்ம தாது என்று சொல்லப்படக் கூடிய ஜெகன் நாதனின் ஜீவ(உயிர்) கலை அப்படியே இருந்தது.

அதைக் கண்டு அதிசயித்து போனார்கள் மன்னரும் மக்களும். சங்கரரோ, பக்தி என்னும் உணர்ச்சிப் பெருக்கால், கண்களில் நீர் வடிய ‘‘ஜெகன் நாதா! ஜெகன் நாதா’’ என்று ஆனந்தக் கூத்தாடினார். ஒருவழியாக சம நிலைக்கு வந்த ஆச்சாரியார், சங்க க்ஷேத்திரத்தில் இருக்கும் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்பமரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த வேப்ப மரத்தில் இறைவனுக்கு புதிய திருமேனி செய்ய ஆணை பிறப்பித்தார். அந்த புதிய திருமேனியில், ஆதியில் இருந்த ஜெகன் நாதனின் ஜீவகலையை மந்திர பூர்வமாக சேர்த்தார்.

வேறு சிலர், ஜெகன் நாதனின் ஜீவ கலை மொத்தமாக தொலைந்து விட்டது என்றும், விஷயம் அறிந்த சங்கரர், ஒரு புதிய திருமேனியை செய்து, நேபாளத்தில் இருந்து புனித சாளக்கிராமக் கற்களைக் கொண்டு வந்து அதன் மூலமாக, புதிய திரு மேனிக்கு ஜீவ கலையை உண்டுபண்ணினார் என்று சொல்கிறார்கள். ஆச்சாரியார் மீது எல்லையற்ற பக்தி பூண்ட நேபாளத்து மன்னன், தானே கண்டகி நதியில் இருந்து உருவாகும் உயர்ந்த சாளக்கிராமக் கற்களைக் கொண்டு வந்ததாக சொல்கிறார்கள். அதனால் தான் இன்றும், பூரி ஜெகன்நாதர் கோயிலில் நேபாளத்தின் ராஜாக்களுக்கு தனி மரியாதை உண்டு.

இதனை தொடர்ந்து, பூரி ஜெகன் நாதர் கோயிலை மீண்டும் எடுத்துக் கட்டி, மூல ஸ்தானத்தில் ரத்தின வேதியில் ஜெகன் நாதனை எழுந்தருளச் செய்து, ஜென்மம் ஈடேறியது போல ஆனந்தக்
கூத்தாடினார் சங்கரர். பூரியில் கடற்கரையில், கோவர்த்தன மடத்தை நிறுவினார். அந்த மடத்திற்கு முழு முதற் கடவுளாக ஜெகன் நாதனையும், விமலா தேவியையும் வைத்தார். பூரியில் அன்ன பிரசாதம் வழங்கும் முறையை மீண்டும் கொண்டு வந்தார். பூரியில் இறைவன் அன்னத்தின் வடிவில் இருப்பதால், பூரி ஜெகன் நாதனுக்கு ‘‘அன்ன பிரம்மம்’’ என்றே பெயர். அதற்கு ஏற்ப, முன்பு இருந்து, பிறகு காணாமல் போன அன்ன பிரசாதம் வழங்கும் முறையை மீண்டும் கொண்டு வந்தார். தனது சீடர்கள் நால்வரில் பிரதானமான பத்ம பாதரை, கோவர்த்தன மடத்தின் முதல் ஆச்சாரியராக நியமித்தார். இதனால் ஆதிசங்கரருக்கு இன்னமும், பூரியில் பல விதமான மரியாதைகள் வழங்கப்படுகிறது.

‘‘ஸ்ரீ மந்திரம்’’ என்று அழைக்கப்படும் பூரி ஜெகன் நாதர் கோயிலில், ஆசன கிரகம், என்று ஒரு இடம் உண்டு. இதில் வேதம் சாஸ்திரம் புராணம் என அனைத்தையும் கற்று தேர்ந்த மகா ஞானியான சங்கரரை தவிர வேறு யாருக்கும் அமர அனுமதி இல்லை. அந்த நாட்டு மன்னனே வந்தாலும் அங்கே அமர முடியாது.ஸ்ரீ மந்திரத்தில் முக்தி மண்டபம் என்று ஒரு இடம் உண்டு. அங்கே வேதம், சாஸ்திரங்கள், புராணங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், என அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதர்களின் சபை நடக்கும். அந்த சபையின் நிரந்தரத் தலைவர் இன்றளவும்
ஆதிசங்கரர்தான்.

ஸ்ரீ மந்திரத்தில் ஆதிசங்கரர் ‘‘போக மண்டபத்தை’’ நிர்மாணித்தார். அதனால் இன்றுவரை, கேய் போகம் (ஒருவகை பிரசாதம்) பெறுவதற்கு கோவர்த்தன மடத்தை சேர்ந்த சங்கராச் சாரியார்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.அதேபோல ஸ்ரீமந்திரத்தில் செய்யப்படும் நித்திய பூஜைக்கும், உத்ஸவங்களுக்கும், கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் தான் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர். இந்த அதிகாரம் வேறு யாருக்கும் கிடையாது.இதைப் போல, தனது புனித தலத்தை மீட்டு எடுத்த சங்கரருக்கு இன்று வரை பல மரியாதைகள் செய்து அழகு பார்க்கிறான் பூரி ஜெகன் நாதன். நாமும் உடலாலோ அல்லது மனதாலோ பூரி ஜெகன் நாதர் கோயிலுக்குச் சென்று, அவனது திருவடி வணங்கி பெறுதற்கு அரிய
பேறுபெறுவோம்.

ஜி.மகேஷ்

The post சங்கரர் போற்றும் ஜெகன் நாதன் appeared first on Dinakaran.

Tags : Shankar ,Jagan Nathan ,Utgala ,Jajanagna ,Jaipur ,Mahababa Gupta ,Jajati Kesari ,Adi Shankara ,Shankara ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு...