×
Saravana Stores

8 மாதத்தில் முடிந்த கட்டுமான பணி சேலம் மினி டைடல் பார்க் விரைவில் திறப்பு: ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சேலம் முக்கிய இடம் வகிக்கிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக சேலம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான இன்ஜினியரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் முடித்து வெளியே வருகின்றனர்.

அவ்வாறு வரும் மாணவர்களுக்கு, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு உள்ளூரில் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளை முடிக்கும் இளைஞர்களுக்கு, தகுதிக்கேற்ற, சகல வசதியுடன் கூடிய ஐடி நிறுவனங்கள் இல்லை. இங்குள்ள ஒருசில நிறுவனங்கள் தரும் சொற்ப அளவிலான ஊதியம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு வேலைவாய்ப்பை தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அதேசமயம் முழு கல்வித்தகுதி இருந்தும், வெளியூர் செல்ல வேண்டும் என்பதால் பெண்கள் பலர் இன்னமும் ஐடி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை களைய, சேலத்தில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா (மினி டைடல் பார்க்) அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கருப்பூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி அருகே மினி டைடல் பார்க் அமைக்க 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அங்கு மினி டைடல் பார்க்க அமைக்க ரூ.30 கோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு மே மாதம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று, 8 மாதத்தில் கட்டுமானம் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 55 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாவது தளம் என மொத்தம் 4 தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடமாக உருவாகியுள்ளது.

வெளிப்புறம் முற்றிலும் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டு, கண்ணைக் கவரும் வகையில் மினி டைடல் பார்க் உருவாகியுள்ளது. இதன்மூலம், ஒரே வளாகத்தில் நேரடியாக 500க்கும் மேற்பட்டோர் பணிவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள் மட்டுமின்றி வங்கிகளும் இந்த மினி டைடல் பார்க்கில் தங்களது நிறுவனங்களை தொடங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி, சிசிடிவி கேமராக்கள், தீத்தடுப்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் இந்த மினி டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய சேலம் மினி டைடல் பார்க்கில், தொழில் நிறுவனங்களை தொடங்க நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுவரை 3 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் மினி டைடல் பார்க் திறப்பு விழா நடத்தப்பட்டு முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* பெரு நிறுவனங்கள் கிளைகளை தொடங்கும்
சேலத்தை சேர்ந்த மென்பொருள் நிறுவன பணியாளர்கள் கூறியதாவது: சேலத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நேரடி விமான சேவை இருந்து வருகிறது. நாட்டின் எந்த பகுதிக்கும் சேலத்திலிருந்து ரயிலில் செல்ல முடியும். உயர்தர தங்கும் விடுதி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் சேலத்தில் உள்ளன. இதனால், ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க சிறந்த இடமாக சேலம் உள்ளது. தற்போது பெருநகரங்களில் உள்ள நிறுவனங்கள் கூட, மினி ைடடல் பார்க்கில் தங்களது புதிய கிளையை தொடங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும்.

அவ்வாறு பெருநிறுவனங்கள் தொடங்கப்படும் போது, உள்ளூரிலேயே இளைஞர்கள் பெரிய நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். சேலம் மினி டைடல் பூங்காவிற்கு 15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது 55 சதுரடியில் மட்டுமே கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் புதிய கட்டிடங்களை எழுப்பி, எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிவதற்கான வாய்ப்பும் ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post 8 மாதத்தில் முடிந்த கட்டுமான பணி சேலம் மினி டைடல் பார்க் விரைவில் திறப்பு: ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Salem Mini Tidal Park ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வரும் 7ம்தேதி கடைசிநாள் ரேஷன் கடை...