×

10 ஊட்டச்சத்து குறைபாடுள்ள லட்சம் குழந்தைகளை மீட்டெடுத்த தமிழக அரசு: உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு


ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் ஆயிரம் நாட்களுக்குள் உண்ணும் மோசமான ஊட்டச்சத்து அவர்களுக்கு பல எதிர்மறை காரணங்களை ஏற்படுத்தும். இது குன்றிய வளர்ச்சி, அறிவாற்றல் திறன் மற்றும் பள்ளி செயல்திறன் குறைதல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் 68 சதவீதம் குழந்தைகள் 5 வயதிற்கு முன்பே இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்கிறோம் என்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தை மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற புதிய திட்டத்தினை 2022ம் ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத்தன்மை ஆகிய குறைபாடுகளை கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 99 லட்சத்து 5 ஆயிரத்து 289 குழந்தைகள் உள்ளனர்.

இதில் 10 லட்சம் குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இதை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை மூலமாக சிறப்பு வளர்ச்சி கண்காணிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவகுழுவினர் நேரடியாக குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது குறைபாடு உள்ள குழந்தைகள் குறித்து செயலியில் பதிவேற்றம் செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு எந்த மாதிரியான உடல் பாதிப்பு உள்ளது? அவர்களுக்கு என்ன சிகிச்சை அளிப்பது? மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிறவி கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத்தன்மை, இருதய பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்பு, மன பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேவைப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகள் மூலம் உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அதிகளவில் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவ சிகிச்சை முழுமையாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* குறைபாடு குழந்தைகளுக்கு நியூட்ரீஷியன் கிட்
பெரியவர்களை ஒப்பிடும் போது குழந்தைகளுக்கு அவ்வளவு விரைவாக எடை குறையாது அல்லது அதிகரிக்காது. ஆனால் உங்கள் குழந்தைக்கு மால்- நியூட்ரீஷியன் என்ற ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தை எடை குறைந்து மெலிந்து, சில ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருந்தால் உடல் பருமனாகவும், விரைவாக உடல் எடையும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது காய்ச்சல், சளி ஆகியயை தோன்றும்.

வளரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து செயல்படும் பொழுது உடல் ஒரு சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும். ஆனால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது என்றால் அவர்களால் நோய் பாதிப்பை எதிர்த்து போராடும் அளவுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று பொருள். இதை நிவர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு நியூட்ரீஷியன் கிட் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள உணவு பொருட்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவில் 68 சதவீதம் குழந்தைகள் 5 வயதிற்கு முன்பே இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

* தமிழகத்தில் மொத்தம் 99 லட்சத்து 5 ஆயிரத்து 289 குழந்தைகள் உள்ளனர். இதில் 10 லட்சம் குழந்தைகளுக்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.

* குழந்தைகளுக்கு பிறவி கோளாறு, ஊட்டச்சத்து குறைபாடு எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத்தன்மை, இருதய பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்பு, மன பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு உண்பதற்கு தயாராக உள்ள சிகிச்சை உணவு 8 வாரங்களுக்கு அளிக்க ரூ.18.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.8.68 கோடி செலவில் சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

* 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை
தமிழகத்தில் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் 6 வயது வரையுள்ள மிதமான மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 10.26 லட்சம் குழந்தைகள் ஆர்எஸ்பிகே குழுவினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் 2 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 43,200 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை உட்பட வெவ்வேறு மருத்துவச் சிகிச்சைகள் மாவட்ட மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு உண்பதற்கு தயாராக உள்ள சிகிச்சை உணவு 8 வாரங்களுக்கு அளிக்க ரூ.18.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினால் ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாதக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.8.68 கோடி செலவில் சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 6 மாதம் முதல் 6 வயதுடைய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 92,015 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு அளிக்கப்பட்டதில் 61,788 (66.6%) குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோன்று 0-6 மாதக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 14,901 குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் பிறப்பு கூடுதல் சத்து உட்கொண்டதினால் 13,319 (89.4%) குழந்தைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சியில் முன்னேற்றத்தினை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சியில் குறிப்பாக முதல் 6 மாதத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தினைப் பற்றி மிகுந்த விழிப்புணர்வினை உருவாக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் பிறவியிலேயே கண்டறியப்பட்ட இருதய நோய், பிறவியிலேயே கண்டறியப்பட்ட மூளை வளர்ச்சி குறைபாடு, பிறவி பார்வை குறைபாடு, பிறவி காது கேளாமை, பிறவி கால் ஊனம் போன்ற பிறவி குறைபாடுகளை உடைய 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்பொழுது அவர்கள் நலமாக உள்ளனர்.

The post 10 ஊட்டச்சத்து குறைபாடுள்ள லட்சம் குழந்தைகளை மீட்டெடுத்த தமிழக அரசு: உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,India… ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...