×

கடும் நெருக்கடி தரும் புதிய மோட்டார் வாகனச்சட்டம், விழிபிதுங்க வைக்கும் ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, கிடுகிடுவென உயரும் சுங்கக்கட்டணம், டீசல் விலை: முடங்கும் லாரி தொழில்

நாட்டில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்ல முக்கிய பங்காற்றுவது லாரி போக்குவரத்து என்றால் அது மிகையாகாது. உணவுப்பொருட்களில் துவங்கி, பெரிய இயந்திரங்கள் வரை எல்லா வகையான பொருட்களையும் கொண்டுசெல்ல லாரி தொழில் முக்கியமானதாக உள்ளது. இந்திய அளவில் 68 லட்சம் லாரிகள் இயங்குகிறது. இத்தொழிலில் 10 கோடிக்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. இங்கு 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு காலத்தில் மிக லாபகரமான தொழிலாக இருந்த லாரித்தொழில், தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் தொகை, ஜி.எஸ்.டி வரி, சுங்க கட்டணம், டீசல் விலை, விபத்து நஷ்டஈடு என பல வகையிலும் இத்தொழிலுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு பக்கம் சாலை போக்குவரத்து விதிகளில் திருத்தம் செய்ய, இன்னொரு பக்கம் லாரி தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி நிற்கிறது.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின்-தமிழ்நாடு தலைவர் தனராஜ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு லாரிக்கு கிளீனராக வருபவர்கள் படிப்படியாக லாரியை ஓட்ட கற்றுக்கொண்டு டிரைவராக பணியாற்றுவார்கள். தற்போது கிளீனருக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவருக்கு போதிய வருமானம் இல்லாமல் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். மற்ற தொழிலுக்கு வட மாநிலங்களில் இருந்து வருவார்கள். ஆனால், லாரி தொழிலுக்கு மட்டும் யாரும் வருவதில்லை. இதனால் லாரி இயக்குவதில் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சில நேரங்களில் லாரிக்கு லோடு கிடைத்தாலும், டிரைவர் இல்லாததால் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வரி மேல் வரி, அபராதம், டீசல், உதிரிபாகம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக இத்தொழிலில் கடுமையான தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. லாரி தொழிலை சார்ந்துள்ள லாரி புக்கிங் ஆபீஸ், டயர் வல்கனைசிங், பெயிண்டிங், ஒர்க்‌ஷாப், பஞ்சர் தொழில் என எல்லா உபதொழில்களும் முடங்கிவிட்டன. மிக முக்கியமாக தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் 71 ஆயிரத்து 389 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி மூலம் ரூ.34 ஆயிரத்து 525 கோடி கட்டணம் வசூலாகிறது. இதில் பாஸ்டேக் மூலம் மட்டும் ரூ.33 ஆயிரத்து 274 கோடி கட்டணம் கிடைக்கிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 63 இடங்களில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்ககட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய ெநடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்வு 5 முதல் 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இது தான் லாரித்தொழிலுக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது.
லாரி உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் அரசுக்கு செலுத்தி விடுகிறோம்.

அதனால் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கு செவிசாய்க்காமல் இருப்பது வேதனைக்குரியது. லாரி டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்கும்போது அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. புதிய மோட்டார் வாகனச்சட்டமும் கடும் நெருக்கடி தருவதால் லாரி தொழிலை நடத்த முடியவில்லை.
இவ்வாறு தனராஜ் கூறினார்.

* இந்திய அளவில் 68 லட்சம் லாரிகள் இயங்குகிறது.

* இத்தொழிலில் 10 கோடிக்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன.

* இங்கு 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

* ஓராண்டுக்கு இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி மூலம் ரூ.34 ஆயிரத்து 525 கோடி கட்டணம் வசூலாகிறது.

* பாஸ்டேக் மூலம் மட்டும் ரூ.33 ஆயிரத்து 274 கோடி கட்டணம் கிடைக்கிறது.

* நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 63 இடங்களில் உள்ளன.

* இந்த சுங்கச்சாவடிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்ககட்டணம் உயர்த்தப்படுகிறது.

* ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் 5 முதல் 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

* ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு
‘‘கச்சா எண்ணெய் விலை குறைந்தும், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வருவதில்லை. டீசல் விலையை குறைப்போம் என்று ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கும் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர். வெற்றி பெற்ற பின்பு அவற்றை பற்றி கண்டுக்கொள்வதில்லை. தமிழகத்தை காட்டிலும் பாண்டிச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ.9 முதல் ரூ.11 வரையும், கர்நாடகாவில் ரூ.6 முதல் ரூ.7 வரையும் விலை குறைவு.

அங்கு டீசல் விலை குறைவு காரணமாக பெரும்பாலான லாரிகள் பாண்டிச்சேரி, கர்நாடகாவுக்கு சென்று டீசல் நிரப்பி கொள்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைவிட இன்ஜின் ஆயில் விலை பலமடங்கு அதிகரித்து விட்டது. இதையும், கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்,’’ என்பதும் லாரி உரிமையாளர்கள் வைத்துள்ள கோரிக்கை.

* பாவம் ஒரு பக்கம் பழி மற்றொரு பக்கம்
லாரிகளை இயக்கும் டிரைவர்களில் பலர் மது குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவதாக புகார் எழுகிறது. இதற்காக போலீசார் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அபராதம் விதிக்கின்றனர். ஆனால், இந்த அபராத தொகையை லாரி டிரைவர்கள் செலுத்தாமல், லாரியை ஓரம் கட்டிவிட்டு, முதலாளி பார்த்துக்கொள்வார் எனக்கூறி சென்று விடுகின்றனர். கடைசியில், முதலாளிதான் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

இதுவும், இத்தொழிலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மது குடித்துவிட்டு, லாரிகளை இயக்கும் டிரைவர்களை போலீசார் பிடிக்கும்போது, அவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்க கூடாது. அவர்களது டிரைவிங் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 3 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே லாரி டிரைவர்களின் ஒழுங்கீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் போக்குவரத்து ஆர்வலர்கள்.

* நூதன திருட்டால் வருவாய் இழப்பு
டிரைவர்கள் நெடுந்தொலைவுக்கு லாரிகளை இயக்கிச் செல்லும்போது, முக்கிய திருப்பங்கள் அல்லது ஸ்பீடு பிரேக்குகளில் லாரிகளின் வேகம் குறையும். அப்போது, திருடர்கள் பின்பக்கமாக லாரி மீது ஏறி விடுகின்றனர். பார்சல் பொருட்களை திருடி, கீழே தள்ளிவிடுகின்றனர். பின்னால் வேறு வாகனங்களில் தொடர்ந்து வரும் இவர்களது ஆட்கள் அந்த பொருட்களை அதில் ஏற்றிக்கொண்டு தப்பிவிடுகின்றனர்.

இன்னொரு ஸ்பீடு பிரேக் வரும்போது, அந்த திருடன் மேலே இருந்து கீழே குதித்து தப்பி விடுகிறான். இதுபோன்ற திருட்டு அவினாசிபாளையம், குண்டடம், வேடசந்தூர் போன்ற பகுதிகளில் நடக்கிறது. இதனால் ஏற்படும் இழப்புகளையும் லாரி உரிமையாளர்கள்தான் செலுத்த வேண்டியுள்ளது. இது, எங்களுக்கு பெருத்த அடியாக உள்ளது. இதை நினைத்து நாங்கள் அன்றாடம் ரத்தக்கண்ணீர் விடுகிறோம் என்பதும் லாரி உரிமையாளர்களின் குமுறல்.

* அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
‘‘லாரி போக்குவரத்து நல்லமுறையில் இயங்கினால்தான், பல்வேறு வகையான பொருட்களை, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும். அப்பொருட்களின் விலையும் குறையும். இல்லையேல், அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், ஏழை, அடித்தட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இதை உணர்ந்து, இத்துறையில் உள்ள நெருக்கடியை போக்க, ஒன்றிய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

* சாலை பணி நடக்கும் இடத்திலும் கட்டண வசூல்
சாலையில் எவ்வித போக்குவரத்து பாதிப்பும் இல்லாமல் செல்வதற்காக தான் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல சாலைகளில் மேம்பாலம் கட்டும் பணி, சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலம்-உளுந்தூர்பேட்டை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை என பல்வேறு சாலைகளில் 4 வழிச்சாலையாக மாற்றும்பணி மற்றும் மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் செல்லமுடியவில்லை. ஊர்ந்து தான் செல்ல வேண்டியுள்ளது. சாலை பணி நடக்கும் சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

* ஜிபிஎஸ் தொழில்நுட்பம் சிரமத்தை ஏற்படுத்திவிடும்
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் சுங்கக்சாவடிகளில் காலவிரயம் ஏற்பட்டது. அதை போக்க ‘பாஸ்டேக்’ முறை அமலுக்கு வந்தது. தற்போது செயற்கைகோள் அடிப்படையிலான ‘குளோபல் நேவிகேஷன் சாட்லைட் சிஸ்டம் (ஜிஎன்எஸ்எஸ்) என்ற முறையில் பயண தூர அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டப்படி வாகனங்களில் செயற்கை கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓபியு கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும். ஓபியு கருவி வாயிலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் செயற்கைகோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் கணக்கிட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தில் ஒரு வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்தும் சாலையை தொட்டாலே கட்டணம் வசூலிக்கும். அதனால் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என்பது மேலும் சிரமங்களை உருவாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

* ஆன்லைன் அபராதம் விதிப்பது அதிகரிப்பு
சமீப காலமாக ஆன்லைனில் அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளது. சாலையில் வாகனம் நின்று கொண்டு இருந்தாலே அபராதம் விதிக்கப்படுகிறது. லோடு ஏற்ற நின்றாலும் அபராதம் போடப்படுகிறது. லாரியில் ஏதாவது குறைபாட்டை கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும். தற்போது பெரிய அளவில் லாரிகளை வைத்து தொழில் செய்பவர்கள் ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர்.

ஆனால், ஒன்று அல்லது இரண்டு லாரிகளை வைத்து தொழில் செய்பவர்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். டீசல், லாரிகளுக்கு உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பாதித்துள்ளனர். இதில் ஒரு சிலர் லாரியை விற்றுவிட்டு மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். சிலர் தாங்களே லாரி டிரைவராக பணியாற்றி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மீதமுள்ள பாதி பேரும் மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

* லைசென்ஸ் புதுப்பிக்காவிட்டால் புதுசுதான் எடுக்கணும்…
முன்பெல்லாம் லாரி டிரைவர் தனது டிரைவிங் லைசென்சை புதுப்பிக்காமல் விட்டுவிட்டால், அபராத தொகையை செலுத்தி, புதுப்பித்துக்கொள்ளும் வசதி இருந்தது. ஆனால், தற்போது புதிய வாகன மோட்டார் சட்டத்தால் அந்த நடைமுறை மாற்றப்பட்டு, புதியதாக டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டியுள்ளது. இதற்கு பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. இதனால், ஏராளமான லாரி டிரைவர்கள், லைசென்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* பதிவு கட்டணம் ரூ.1.50 லட்சமாக அதிகரிப்பு
முந்தைய காலங்களில், புதியதாக லாரி வாங்கி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, பதிவு கட்டணமாக ரூ.800 மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. இன்சூரன்ஸ் தொகை, வாகன மதிப்புக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் என இருந்தது. ஆனால், தற்போது ரூ.1.50 லட்சம் வரை அதிகரித்து விட்டது. வாகன பதிவின்போது, சாலைவரி ரூ.1 லட்சம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது.

* ஒரு டயர் ரூ.43,000
லாரி டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் வாங்கும்போது அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த நெருக்கடி காரணமாக, லாரி பராமரிப்பு என்பது பெரும் சுமையாகிவிட்டது. உதாரணமாக ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கிய ஒரு லாரி டயரை, தற்போது ரூ.43 ஆயிரம் என விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

* கை துடைக்கும் வேஸ்ட்டுகளுக்கும் ஜிஎஸ்டி வசூல்
லாரி ஒர்க்‌ ஷாப்பில் கை துடைக்க பயன்படுத்தும் வேஸ்ட் துணிகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்படுகிறது. டீசல் விலை நாள்தோறும் அதிகரிக்கிறது. அதிகபாரம் எனக்கூறி அபராதம் பல மடங்கு விதிக்கப்படுகிறது. இதனால் லாரி தொழிலை நடத்த முடியாமல் உரிமையாளர்கள் பலர் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

The post கடும் நெருக்கடி தரும் புதிய மோட்டார் வாகனச்சட்டம், விழிபிதுங்க வைக்கும் ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, கிடுகிடுவென உயரும் சுங்கக்கட்டணம், டீசல் விலை: முடங்கும் லாரி தொழில் appeared first on Dinakaran.

Tags : EU government ,Dinakaran ,
× RELATED வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக...