×
Saravana Stores

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல்முறையீடு?

பாட்னா: கல்வி, வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய லோக்ஜன சக்தி (ராம்விலாஸ் பஸ்வான்) கட்சி முடிவு செய்துள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின (எஸ்சி, எஸ்டி) பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 1ம் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரி மேல்முறையீடு செய்ய லோக்ஜன சக்தி(ராம் விலாஸ் பஸ்வான்) கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சரும், லோக்ஜன சக்தி (ராம் விலாஸ் பஸ்வான்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவாக இருக்கிறோம். இதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பலமாக குரலெழுப்பி வருகிறார்.

ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பொதுவில் வௌியிடக் கூடாது. இதுதொடர்பான தரவுகள் கொள்கைகளை வடிவமைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சிராக் பஸ்வான், “எஸ்சி கோட்டாவில் கிரிமீலேயரை அனுமதிக்க முடியாது. எஸ்சி ஒதுக்கீட்டுக்குள் உள்ஒதுக்கீட்டை அனுமதிப்பது, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்று தெரிவித்தார்.

The post எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல்முறையீடு? appeared first on Dinakaran.

Tags : Chirag Paswan ,Supreme Court ,Patna ,Lokjana Shakti ,Ram Vilas Paswan ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...