- இடதுசாரிகள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளூர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மார்க்சிச லெனினிஸ்ட் கட்சி
- தின மலர்
திருவள்ளூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், மக்கள் மீது விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பை கண்டித்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகை வழங்கி, ஏழை மக்களுக்கு வரி சுமையை ஏற்றுவதை கண்டித்தும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் ஸ்டேட் பாங்க் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் வி.சரவணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், வட்ட செயலாளர் தமிழரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்பு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் இடதுசாரிகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி இரா.அழகேசன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 150 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை விடுவிக்கப்பட்டனர்.
திருத்தணி: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பு செய்த ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் திருத்தணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் அந்தோணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமது உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சித்தூர் சாலையிலிருந்து ரயில் நிலையம் அருகில் அஞ்சல் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று மறியல் பேராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி 75 பேரை கைது செய்தனர். பின்னர் போலீசார் தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.
* மோடியின் பாக்கெட்டில் ஒன்றும் இல்லாதது போல் பேனர்
பொன்னேரியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒன்றிய பட்ஜெட் குறித்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிக்குறைப்பு செய்து தமிழகத்திற்கு பட்ஜெட் புறக்கணிப்பு செய்ததை கண்டித்தும் பொன்னேரியில் வைக்கப்பட்ட பேனரில் பாரத பிரதமர் மோடி பாக்கெட்டில் ஒன்றும் இல்லை என்பது போல் படம் பொறிக்கப்பட்டு முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து நேற்று பாஜ சார்பில் பொன்னேரி சப்-கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் தடப்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் பாரதப் பிரதமர் மோடியின் படத்தை பெயின்ட் அடித்து பொன்னேரி காவல்துறையினரின் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் மறைத்தனர்.
The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடதுசாரிகள் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.