- வேலூர்
- பெங்களூரு
- வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- கோவிந்தன்
- அரவத்லா மலை
- பெரணம்பட்டு, வேலூர் மாவட்டம்
- வேலூர் மருத்துவமனை
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை பெங்களூருவில் நேற்று அதிகாலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி சின்னு(20). இவருக்கு கடந்த 27ம் தேதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், கட்டைபையில் குழந்தையை போட்டு கடத்தி சென்றார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்திய பெண் வேலூர் இடையன்சாத்து பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா(38) என்பது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் இரவே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த தகவலின்படி தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று, குழந்தையை மீட்டு 7 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் நேற்று மாலை குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டதுடன் கடத்தியவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துள்ளார்.
அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அஜய்குமார், ஐஸ்வர்யா தம்பதிக்கு குழந்தை இல்லையாம். எனவே வீட்டின் உரிமையாளர் லீலாவதி, தம்பதியிடம் ரூ.7 லட்சத்தை பெற்றுக் கொண்டு, வைஜெயந்திமாலாவை குழந்தையை கடத்தி வர சொல்லியுள்ளார். இதையடுத்து, வைஜெயந்திமாலா, வேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையை கடத்தி, அடுக்கம்பாறையில் இருந்து பாகாயம் வரை ஆட்டோவிலும், அங்கிருந்து மற்றொரு ஆட்டோவில் தொரப்பாடி வரை வந்துள்ளார்.
பின்னர் அங்கு காரில் இருந்த பெங்களூரு சிக்பல்லபூரை சேர்ந்த 3 பேரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் குழந்தையுடன் பெங்களூருக்கு காரில் சென்றுவிட்டனர். குழந்தை கடத்தல் வழக்கில் வேலூர் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த வைஜெயந்திமாலா(38), செல்லதுரை(55), அம்மு என்கிற ஞானமனி(43), கிருஷ்ணகிரியை சேர்ந்த பிரவின்செல்வன்(26), சிக்பல்லபூரை சேர்ந்த லீலாவதி(35), அஜய்குமார்(37), ஐஸ்வர்யா(33) ஆகிய 7 பேரை கைது செய்து உள்ளோம். குழந்தையை ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வேலூர் ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பெங்களூருவில் மீட்பு: ரூ.7 லட்சத்துக்கு விற்க முயன்ற பெண்கள் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.