- ஒலிம்பிக் விளையாட்டுகள் 2024
- இந்தியா
- ஸ்ரீஜா அகுல
- ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள்
- அகுலா
- ஸ்வீடன்
- கிறிஸ்டினா கார்பெர்க்
- ஒலிம்பிக் திருவிழா 2024
- தின மலர்
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா (26 வயது) காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். தனது முதல் சுற்றில் சுவீடன் வீராங்கனை கிறிஸ்டினா கார்பெர்கை 4-0 என்ற செட்களில் வீழ்த்திய அகுலா, தொடர்ந்து நேற்று நடந்த 2வது சுற்றில் சிங்கப்பூரின் ஜியான் ஜெங் உடன் மோதினார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் வேகம் காட்டிய ஸ்ரீஜா 4-2 என்ற செட்களில் (9-11, 12-10, 11-4, 11-5, 10-12, 12-10) வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீஜாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மனிகா பத்ராவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் ஜப்பான் வீராங்கனை மியு ஹிரானோவை எதிர்கொள்ளும் நிலையில், அகுலா சீனாவின் யிங்சா சன் உடன் மோதுகிறார். இன்று மாலை நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் களமிறங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
* 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பைனலில் குசாலே
ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதல் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவு பைனலில் விளையாட இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் அவர் 7வது இடம் பிடித்து (590-38X) இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், சக வீரர் தோமர் 11வது இடம் பிடித்து (589-33X) ஏமாற்றத்துடன் வெளியேறினார். தகுதிச் சுற்றில் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும்.
* பாக்சிங் காலிறுதியில் லவ்லினா
மகளிர் மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் லவ்லினா போர்கோகைன் நேற்று களமிறங்கினார். நார்வே வீராங்கனை சுன்னிவா ஹொஃப்டாட் உடன் மோதிய லவ்லினா, துடிப்புடன் செயல்பட்டு எதிராளிக்கு வாய்ப்புகள் தராமல் புள்ளிகளை குவித்தார். இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆக.4ம் தேதி நடைபெறும் காலிறுதியில் சீன வீராங்கனை லீ க்யூயன் உடன் மோதுகிறார்.
* வில்வித்தையில் தீபிகா வெற்றி
மகளிர் வில்வித்தை தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். அவர் நேற்று நடந்த முதல் சுற்றில் எஸ்டோனியாவின் ரீனா பர்னத்தை 6-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து மாலையில் நடந்த 2வது சுற்றில் நெதர்லாந்து வீராங்கனை ரோஃபென் குயின்டி உடன் மோதினார். அதிலும் 4-2 என்ற கணக்கில் வென்ற தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். ஆகஸ்ட் 3 பிற்பகல் 1.52க்கு நடக்கும் இந்த போட்டியில் அவர் ஜெர்மனியின் மிஷெல் குரோப்பென் சவாலை சந்திக்கிறார். சக இந்திய வீராங்கனை பஜன் கவுரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான தியானந்தா சோய்ருனிசாவுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
* குதிரையேற்றத்தில் அனுஷ் ஏமாற்றம்
ஒலிம்பிக் குதிரையேற்றம் (ஈக்வஸ்ட்ரியன்) டிரெஸ்ஸேஜ் தனிநபர் கிராண்ட் பிரீ பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் அனுஷ் அகர்வல்லா (24 வயது) 66.444% புள்ளிகளை மட்டுமே பதிவு செய்ததால் இ பிரிவில் 9வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார். பாரிஸ் ஒலிம்பிக் குதிரையேற்ற போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் அனுஷ் மட்டுமே.
The post ஒலிம்பிக் திருவிழா 2024: டேபிள் டென்னிசில் அகுலா அமர்க்களம் appeared first on Dinakaran.