பெரியகுளம்: தாமரைக்குளம் கண்மாய் நீர் முழுவதிலும் பரவி வரும் புதிய வகை தாவரத்தால் விவசாயம் மற்றும் மீன் வளர்ப்பு பாதிக்கப்படுள்ளது. ஆகையால் கண்மாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், மீன் வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 38 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த கண்மாய்களில் மீன் வளர்ப்பதன் மூலம் அரசுக்கு வருவாயும் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் தாமரைக்குளம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தாமரைக்குளம் கண்மாய் நீர் நிலைகள் முழுவதிலும் புதுவகை நீர் நிலை தாவரம் வளரத் தொடங்கிய நிலையில், கடந்து எட்டு மாதங்களாக இந்த தாவரம் பரவி, கண்மாய் நீர் முழுவதும் வளர்ந்துள்ளது. இதனால் கண்மாய் நீர் இல்லாதது போல் காட்சியளிப்பதோடு, கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதயும் நிலை ஏற்பட்டு மீன் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தும் வருகின்றனர். இதனிடையே பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கண்மாயில் இந்த புதிய வகை தாவரம் பரவி விவசாயம் பாதித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கண்மாயில் முழுமையாக பரவியிருந்த புதிய வகை தாவரத்தை அகற்றி தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டனர். அதே போன்று தாமரைக்குளம் கண்மாயிலும் பரவியுள்ள புதிய வகை தாவரத்தை அகற்றி விவசாயிகளுக்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாசன விவசாயிகளும் மீன் வளர்ப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தாமரைக்குளம் கண்மாயில் புதியவகை தாவரத்தால் விவசாயம், மீன் வளர்ப்பு பாதிப்பு: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.