×

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் முறை நாளை மறுநாள் முதல் புதிய ‘ஃபாஸ்டாக்’ விதிகள் அமல்: வாகனம் புதுப்பிக்கப்படாவிட்டால் ‘தடுப்பு பட்டியலில்’ சேர்க்கப்படும்

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் முறையான ‘ஃபாஸ்டாக்’-யில் புதிய விதிகள் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி வாகனத்தை புதுப்பிக்கப்படாவிட்டால் ‘தடுப்பு பட்டியலில்’ சேர்க்கப்படும். வங்கிக் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, ​​1,000 அல்லது அதற்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள், சுமார் 45,000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளுக்கு சுங்கவரி வசூலிக்கின்றன. எட்டு கோடிக்கும் அதிகமான பயனர்கள் ‘ஃபாஸ்டாக்’ முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். விரைவில் ஐந்து முதல் 10 நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் முறையை கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முறையின் கீழ், சாலை பயணத்தின்போது கட்டணம் வசூலிக்கப்படும்; பிரத்யேக சுங்கச்சாவடிகளின் தேவை முடிவுக்கு வரும். இந்நிலையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1) முதல் ஃபாஸ்டாக் தொடர்பான சேவைகளில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி புதிய வாகனம் வாங்குவோர் தங்களது வாகனப் பதிவு எண்ணை 90 நாட்களுக்குள் ஃபாஸ்டாக் எண்ணில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட காலகெடுவிற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால், அந்த வாகனம் ‘ஹாட்லிஸ்ட்டில்’ சேர்க்கப்படும். அதன் பிறகு, 30 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். அப்போதும் வாகன எண் புதுப்பிக்கப்படாவிட்டால், ‘ஃபாஸ்டாக்’ தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். முன்னதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கடந்த ஜூன் மாதம் ‘ஃபாஸ்டாக்’ தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் ‘ஃபாஸ்டாக்’ சேவை வழங்கும் நிறுவனங்களின் புதிய செயல்முறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய ஃபாஸ்டாக், ரீ-ஃபாஸ்டாக் வழங்குவது தொடர்பான கட்டணங்கள், பாதுகாப்பு டெபாசிட் மற்றும் குறைந்தபட்ச ரீசார்ஜ் ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம். புதிய வாகனம் வாங்குபவர்கள் அல்லது பழைய ஃபாஸ்டாக் வாகனம் வாங்குபவர்கள், இந்த புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் ஐந்து வருட பழைய ‘ஃபாஸ்டாக்’-ஐ மாற்ற வேண்டும். மூன்று வருட பழைய ‘ஃபாஸ்டாக்’-ஐ மீண்டும் செயல்படுத்த வேண்டும். வாகன பதிவு எண், சேஸ் எண் ஆகியவை ‘ஃபாஸ்டாக்’ உடன் இணைக்கப்பட வேண்டும்.

புதிய வாகனத்தை வாங்கிய பிறகு, அதன் பதிவு எண்ணை 90 நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும். ஃபாஸ்டாக் சேவை வழங்கும் நிறுவனங்களால், வாகன தரவுத்தளத்தை சரிபார்க்க வேண்டும். ​​வாகனத்தின் முன் மற்றும் பக்கத்தில் ‘ஃபாஸ்டாக்’ புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டும். ஃபாஸ்டாக்-ஐ செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும். வாட்ஸ்அப் மற்றும் இணைய போர்டல் போன்ற சேவைகள் கிடைக்கும். வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய விதிகளை நிறைவேற்ற வேண்டும். ஃபாஸ்டாக் சேவை அளிக்கும் வங்கிகள், ஸ்டென்ட்மென்ட் ஒன்றுக்கு 25 ரூபாய்; ஃபாஸ்டாக் கணக்கை மூடுவதற்கு ரூ. 100; டேக் மேனேஜ்மென்ட் ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ. 25 வசூலிக்கப்படும். மூன்று மாதங்களுக்கு ‘ஃபாஸ்டாக்’-ஐ மூலம் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், ‘ஃபாஸ்டாக்’ கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியானது குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிக்கலை உருவாக்கப் போகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் முறை நாளை மறுநாள் முதல் புதிய ‘ஃபாஸ்டாக்’ விதிகள் அமல்: வாகனம் புதுப்பிக்கப்படாவிட்டால் ‘தடுப்பு பட்டியலில்’ சேர்க்கப்படும் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,FASTOCK ,NATIONAL HIGHWAY CUSTOMS ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...