பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், திருமண தடை நீங்குதல் ரியல் எஸ்டேட், அரசியல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற நெய் தீபம் ஏற்றி வழிப்படுவது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஆடி கிருத்திகை என்பதால் அதிகாலை முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், வைஷ்ணவி அம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் சிவன் கோயில் வழியாக அரோகரா முழக்கத்துடனும், காவடியாட்டத்துடன், தலையில் பால் குடங்களை சுமந்தபடி திருவீதி உலா வந்த பக்தர்கள் கோயிலில் வீற்றிருக்கும் உற்சவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். மேலும், கோயிக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம், குடிநீர், உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செய்திருந்தார்.
புழல்: ஆடி கிருத்திகை திருவிழா முன்னிட்டு நேற்று காலையில் 1008 பால்குடம் ஏந்தி பெண் பக்தர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி பிரதான சாலை, ஒற்றை வாடை தெருவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பால் அபிஷேகம் அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மூலவருக்கு ராஜா அலங்காரம் தரிசனமும் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இரவு உற்சவர் சாமி ஊர்வலம் திருக்கோயில் உள் புறப்பாடு புறப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் குமரன் அறங்காவலர் குழு தலைவர் ஜெ.ரவி, ப.குணசேகரன், லட்சுமி நீதி ராஜன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம் appeared first on Dinakaran.