×
Saravana Stores

யாமிருக்க பயமேன்…

♦ சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முனிசிரேஷ்டர், நரசிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர்.

♦ பன்னிரண்டு ஆண்டுகள் முருகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர், சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.

♦ முருகப் பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர், முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய்தருளினான்.

♦ பழநி முருகன், சிவகிரி மேல் வீற்றிருப்பதைக் கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.

♦ பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என குமரக் கடவுள் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்தான் முருகன்.

♦ ஆதிசங்கரருக்கு, காசநோய் தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில் கொண்டுள்ள செந்திலாண்டவனை அவர் சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை விபூதியைத் தரித்த உடனேயே முருகப் பெருமானின் திருவருளால் அவர் நோய் நீங்கியது.

♦ திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று இன்றும் போற்றப்படுகிறார்.

♦ ராமலிங்கவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து ஆட்கொண்டார். இதை ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள்’ எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.

♦ திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த்தனையைப் பாட வைத்தவர்.

♦ பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து, உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.

♦ மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின்முருகப்பெருமான் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.

♦ மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார். பிராகார வலம் வரும்போது சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரத்தைக் காணலாம். இது முருகப்பெருமானுக்கு இணையாக வழிபடப்படுகிறது.

♦ திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகப்பெருமானின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர். அந்த பொங்கியே திருமுல்லைவாயிலில் வைஷ்ணவியாக திருவருள் புரிகிறாள்.

♦ வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமான் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகப்பெருமான் மேல் இயற்றியவர். கௌமார மடத்தை நிறுவியவர்.

♦ பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.

♦ முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று முருக நாமமே பேச்சாக, சுவாசமாக வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.

The post யாமிருக்க பயமேன்… appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,Agathiyar ,Arunagiri Nadhar ,Muruganar ,Devadevar ,Munisireshtar ,Narasireshtar ,Lord ,Muruga ,Sage Narada ,Saptarishis ,Muruga… ,Yamiruka Payaman… ,
× RELATED அன்னாபிஷேகம்