×

ஜனநாயகத்தை காப்பாற்ற புதிய தலைமுறைக்கு வழி விடுவதே சிறந்த முடிவு: அதிபர் தேர்தல் விலகல் பற்றி பைடன் விளக்கம்

வாஷிங்டன்: புதிய தலைமுறைக்கு வழி விடுவதே சிறந்த முடிவு என்பதால் அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு, அவர் பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.

ஆனால் டிரம்ப்புடன், பைடன் நடத்திய நேரடி விவாதத்தில் தடுமாற்றம், கொரானா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பைடன் அதிபர் வேட்பாளராக நீடிக்க எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதிபர் தேர்தல் இறுதிப்போட்டியில் இருந்து விலகுவதாக கடந்த 21ம் தேதி பைடன் அறிவித்தார். மேலும் ஜனநாயக வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் எனவும் பைடன் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிபர் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்பதை பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நேற்று பேசிய ஜோ பைடன், “அமெரிக்க அதிபராக என் செயல்பாடு உலகளவில் தலைமைத்துவம் மற்றும் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த என் பார்வை போன்றவற்றை எடுத்து கொண்டால் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தகுதியானவன். அமெரிக்க அதிபராக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன்.

ஆனால் அமெரிக்க ஜனநாயகத்தை தற்போது ஆபத்து சூழ்ந்துள்ளது. ஜனநாயகத்தை காப்பது பதவியை விட முக்கியமானது. ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற புதிய தலைமுறைக்கு வழிவிடுவதே சிறந்த வழி. அதற்காகவே அதிபர் போட்டியில் இருந்து விலகினேன்.

கமலா ஹாரிஸ் மிகவும் திறமையானவர். தேசத்தை வழி நடத்துவதில் துணை அதிபராக சிறந்த பங்காற்றியவர். இன்னும் சில தினங்களில் அமெரிக்காவின் எதிர்காலத்தை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்றுவது மக்கள் பொறுப்பு” என்று விளக்கம் அளித்துள்ளார்.

* கமலா தீவிர இடதுசாரி பைத்தியம் – டிரம்ப்
இதனிடையே வடகரோலினா மாகாணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பைடன் அமெரிக்க அதிபராக கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டுக்கு என்ன செய்தார்? பைடன் செய்த நினைத்து பார்க்க முடியாத பேரழிவுகளின் பின்னணியில் உந்து சக்தியாக செயல்பட்டவர் கமலா ஹரரிஸ். தீவிர இடதுசாரி பைத்தியமான கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றில் தீவிர தாராளவாத மனப்பான்மை கொண்டவர். அவர் அதிபரானால் நாட்டையே அழித்து விடுவார். அதை நடக்க நாங்கள் விட மாட்டோம்” என கடுமையாக தாக்கி பேசினார்.

The post ஜனநாயகத்தை காப்பாற்ற புதிய தலைமுறைக்கு வழி விடுவதே சிறந்த முடிவு: அதிபர் தேர்தல் விலகல் பற்றி பைடன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Biden ,Washington ,US ,President ,Joe Biden ,United States ,Republican Party ,Dinakaran ,
× RELATED பைடன், டிரம்ப் நிர்வாகத்திலும் ஈரான்...