×

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“ஒருவரை வாழ்த்துகிலேன்’’

உபாசனையில் மோட்சத்தை அடைவதே மிகச் சிறந்த பயனைத் தரும். மோட்சத்திற்காக பிரார்த்திக்கும்போது இடை நிலையில் சில சித்துகள் உபாசனையில் தோன்றும். அதை கொண்டு சொந்தத்திற்கு மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்தவருக்கும் துன்புறுவோர்க்கும் இரக்கப்பட்டு அவர்களுக்காக பிரார்த்திப்பது அவர்கள் வேண்டியதை உமையம்மை இடம் கேட்டு பெற்றுத் தருதல் போன்ற பண்புகள் சாத்தியமாக இருந்தாலும் மிக உயர்ந்த நிலையில் அது விரும்பப்படுவதில்லை.

அதையே “ஒருவரை வாழ்த்துகிலேன்’’ என்று குறிப்பிடுகின்றார். இந்த சித்துகள் த்ரிகோணம் மண்டலம் என்று ஸ்ரீசக்கரத்தில் அழைக்கப்படும் நாற்பத்தி மூன்று முக்கோணங்களை மட்டும் தனித்து ஆராதிப்பதனால் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈசத்துவம், வசித்துவம், மோகனம், ஸ்தம்பனம், மாறனம், வேதனம் போன்ற சித்துக்களை அடையலாம். இதையே ‘சித்தியும் சித்தி தரும் தெய்வம்’ (29) என்ற வாக்கினால் தெளிவாக அறியலாம். மோட்சத்தை அடையும் பாதையில் நமக்குத்தோன்றும் இந்த சித்துக்கள், விரும்பத்தக்கதல்ல.

பிறருக்கு உதவுவது, உதவினாலும் சில நன்மைகள் தோன்றும் என்றாலும் சில நேரங்களில் உபாசகனுக்கு ஆணவமலத்தை தோற்றுவிக்கும். மக்கள் அறியாமையினால் கேட்டு ஆசைகளை நிறைவு செய்வதனால் சில பாவ விளைவுகளும் தோன்றும். மேலும், ஒரு ஆசையை நிறைவு செய்வதனால் அது நிறைவு பெறாது. இன்னும் ஒரு ஆசையை தூண்டும் அதை ‘ஆசைக்கடலில் அகப்பட்டு’ (32) என்பதனால் அது துன்பமே என்று சுட்டுகிறார். அந்த துன்பத்திற்கு வழி வகுத்தல் கூடாது என்பதனாலேயே ‘`ஒருவரை வாழ்த்துகிலேன்’’ என்கிறார்.

“நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்’’

உபாசனை நெறியில் பொய் சொல்லுபவர்களையும் உள்ளொன்று நினைத்து புறம் ஒன்று பேசுபவர்களையும் உமையம்மையின் அருள் சக்தியானது உபாசகனை சென்று அடையாது. ஆகையால் சித்தி அடைய விரும்புபவர்கள் ‘`நெஞ்சில்’’ உள்ள‘`வஞ்சனை’’ பண்பை விட்டுவிட வேண்டும். அது உபாசகனை சறுக்கிவிட செய்யும் எதிர் பண்பு என்று எச்சரிக்கின்றார். ‘வஞ்சகர் நெஞ்சடையாளை’ (84) என்பதனால் அறியலாம். மேலும், பொய்யை மிகுதியாக பேசுகின்ற பண்பையும், ஆசையினால் மிகுதியாக பொய் சொல்பவர்களையும், பெண் ஆசையினால் பொய் சொல்லுபவர்களையும் உமையம்மையினுடைய அருளானது அவர்களை சென்றடையாது என்பதை ‘விரகர் தங்கள் பொய்வந்த நெஞ்சில்’ (98) என்பதினாலும் நன்கு அறியலாம்.

‘`வஞ்சனை’’ என்ற சொல்லை அபிராமிபட்டர் ஐந்து இடங்களில் வெவ்வேறு விதமாய் பயன்படுத்துகிறார். உலகியல் பொருள்களை அனுபவிப்பதால் நமக்கு இன்பம் ஏற்படும்.
இன்ப மயக்கத்தில் ஏற்படும் அறியாமையால் உண்மையை உணராமல் பொய்யை மெய்யாகவே நம்பும் பண்பைத்தான் ‘என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி’ (36) என்று குறிப்பிடுகிறார். மனதிலே ஒன்றை வைத்துக் கொண்டு வாக்கினிலே வேறு ஒன்றை பேசுகின்ற பொய்யான பண்பையே ‘`வஞ்சனை’’ என்கிறார்.

அத்தகையவரை நானே விலக்கிவிடுவேன். நீங்களும் விலக்கிவிடுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். வஞ்சக நெஞ்சம் கொண்டவரோடு பழகுவதனால் தனக்கும் அப்பண்பு வரும் என்று அஞ்சி விலகுவதையே ‘`நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்’’ என்கிறார்.

“எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும் பிணங்கேன்’’

உபாசனையில் யோக நெறியில் இருப்பவர்கள் எட்டு விதமான குணங்களை சிறப்பாக பின்பற்றுவார்கள். எட்டு விதமான குணங்களை நீக்கிவிடுவார்கள். மறந்தும்கூட சில குணங்களை பின்பற்ற மாட்டார்கள். அந்த குணங்களில் ஒன்றே எனது உனது என்று குறிப்பிடுகிறார். துன்புறுதல் [அஹிம்சா], புலனடக்கம் [இந்திரியா நிக்கிரஹம்] பொறுமை [க்ஷமா] உயிரைப் பற்றி ஆய்வுசெய்வது [ஞானம்] கொண்ட கொள்கையில் வழுவாமை [தபஸ்] உண்மை [சத்தியம்] இருந்தல் இயல்பு [பாவம்] ப்ரம்மச்சரிய விரதம் போன்ற எட்டு குணங்களும் உபாசகர்களால் பின்பற்றப்பட வேண்டியதை ‘சத்தியமாய்’ என்று பதிகத்தில் இக் குணத்தைப்பதிவு செய்து இருக்கிறார்.

தள்ள வேண்டிய குணங்களான பொய் கூறுதல், இறைவன் பேரில் கோழி, ஆடு போன்ற மிருகங்களை வதைத்து வழிபடுதல், வஞ்சனையுடன், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது, அதிகமாக ஆசைப்படுவது, செல்வத்தையே முதன்மையாக கருதுவது, தனது பாதுகாப்பையே முதன்மையாக கருதுவது, தான்கொண்ட கொள்கையில் நழுவுவது, மனத்தளர்வு அடைவது இந்த எட்டுக்குணங்களையும் விலக்கிவிடுவார்கள். ‘பொய்யும்’ (57) ‘பலி கவர்’ (64), ‘வஞ்சகரோடு இணங்கேன்’ (81), ‘ஆசைக்கடலில்’ (32), ‘அரணம் பொருள்’ (51), ‘தளர்வறியா மனம்’ (69) என்பதனால் உபாசனைக்கு உதவாத குணங்களை வரையறுக்கிறார்.

அதிலே ஆசை பாதுகாப்பின் காரணமாக எனது உனது என்று சண்டையிட்டு கொள்பவருடன் எந்தவிதமான தொடர்பையும் நான் வைத்துக் கொள்வதில்லை. அவரை இழித்துப்பேசுவதில்லை. யாருடனும் பகை கொள்ளுவதில்லை என்கின்ற பண்பையே “எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன்’’ என்கிறார்.“அறிவொன்றிலேன்’’என்பதனால் உலகியல் செல்வங்களை பெற்று தன்னை காத்துக்கொள்கின்ற அறிவு இல்லாதவன் என்றும், பொருள் பற்று இல்லாதவர் என்றும் நமக்கு மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

ஆறு அறிவைப்பெற்ற மனிதன் மிகுந்த உணர்வுகளால் தாக்கப்படுகின்ற போது ஆறு அறிவில் ஒன்று நீங்கிய விலங்காக ஆகிறான் என்று தன்னை குறிப்பிடுவது பிறருக்கு அறிவுறுத்துவதற்காகவே ‘`அறிவொன்றிலேன்’’ ‘நாயேனையும்’ (61) என்கிறார். இந்த உலகம் அதைப்பற்றிய அறிவு அவருக்கு இல்லாமல் `பார்க்கும் திசைதொறும்’ (85) என்ற பாடலின் வழி பார்க்கின்ற யாவற்றிலும் உமையம்மையே தெரிகிறாள். இந்த உலகம் தெரியவில்லை என்பதை நமக்கு சூட்டுகிறார்.

உமையம்மையின் சத்ய தரிசனத்தை கண்டவர்களுக்கு மட்டும் ஏற்படும் பண்பு இது. மேலும் உமையம்மையிடத்து மிகுந்த அன்புகொண்டதால் ‘விழி நீர்மல்கி மெய்ப்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி’ (94) பக்தி உணர்வால் அறிவிழந்து என்பதனால் ‘`அறிவொன்றிலேன்’’ என்கிறார். உலகில் உள்ளவர்கள் போல் தன் காரியத்தை செவ்வனே செய்து தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் அறிவு எனக்கு இல்லை என்பதை ‘வல்லபம் ஒன்றறியேன்’ (66) என்று ‘`அறிவொன்றிலேன்’’ என்கிறார்.

“என்கண் நீவைத்த பேரளியே’’ என்பதனால் உமையம்மையானவள் தன்னிடத்தில் வைத்த பெருங்கருணையையே குறிப்பிடுகிறார். “பேரளியே’’ என்கின்ற வார்த்தையால் கருணைக்கும் பெரும் கருணைக்கும் உள்ள வித்தியாசத்தை தண்ணளிக்கு (15) என்று உணர்த்துகிறார். ‘ஆசைக்கடலில்’ (32) அகப்பட்டவனும், அறிவொன்று இல்லாதவனும், பேய் போன்று தன்னையே முதன்மைப்படுத்தும் பண்புடையவனும் ‘பேயேன்’ (61) வல்லபம் ஒன்று அறியாத சிறியவனும் ‘மிண்டு (45)’ செய்பவனும் ‘வெறுக்கும் தகைமைகள்’ (46) கொண்டவனும் ‘கைதவம்’ (45) (பொய்தவம்) செய்தவனும் ‘இழைக்கும் வினைவழியே’ (33) வாழ்பவனும் ‘என் மனத்து வஞ்சத்து இருள்’ (36) பெற்றவனும் ‘மறுக்கும் தகைமைகள்’ (46) செய்பவனுமாகிய தன்னிடத்தில் அனைத்து குறைபாடுகள் இருந்தபோதும் ‘முடை’ (60) நாற்றம் கொண்ட யாரும் கண்டு வெறுக்கத்தக்க தன் தலையின் மீது ‘பஞ்சு அஞ்சும்’ (59) என்கின்ற பாதத்தைக்கொண்டவளும், மெய் பீடத்தில் பாதம் வைத்து அருள்பவளுமாகிய உமையம்மை தன் ‘தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட’ (32) என்பதால் தன் இழிவையும், இயல்பையும் வெளிப்படுத்தி உமையம்மையின் கருணையையும் எளிமையையும் எடுத்து இயம்பவே ‘`என்கண் நீவைத்த பேரளியே’’ என்கிறார்.

“அந்தமாக”‘`அணங்கே’’ என்பதனால் அபிராமியையும், ‘`அணங்குகள் நின் பரிவாரங்கள்’’ என்று ஸ்ரீசக்கரத்தில் எழுந்தருளியுள்ள தேவதை களையும், ‘`ஆகையினால் வணங்கேன்’’ என்பதனால் படிநிலை முக்தியைப்பற்றியகுறிப்பையும், ‘`ஒருவரை வாழ்த்துகிலேன்’’ என்பதனால் உபாசகனுக்கு கிடைக்கும் சிலதெய்வீக ஆற்றல்களையும்,‘`நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்’’ என்பதனால் உபாசனைக்குத் தடைசெய்யும் பண்பையும், ‘`எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரோடும் பிணங்கேன்’’ என்பதனால் ஒருவருடனும் சண்டையிடாமல் இருக்கும் பொறுமை உணர்வையும், ‘`அறிவொன்றிலேன்’’ என்பதனால் தன்னைப்பற்றிய, உலகைப்பற்றிய, உமையம்மை பற்றிய அறிவில்லாதவன் என்றும்,‘`என்கண் நீவைத்த பேரளியே’’ என்பதனால் தகுதியில்லாத போதும் தன்மீது வலிய வந்து கருணைசெய்த பெருமையையும் குறிப்பிடுகிறார். அதை பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருச்செந்தூரின் கடலோரத்தில்…