×

பூமியைக் காத்த புண்ணியனே பூவராகப் பெருமானே

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருதாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

தானே தோன்றிய மூர்த்தி

இது மனிதர்களால் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று. இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள். அப்படி எட்டு தலங்களைக் குறிப்பிடுகிறது வைஷ்ணவம். அதில் ஒன்று ஸ்ரீமுஷ்ணம். மற்றவை திருவரங்கம், திருவேங்கடம், அகோபிலம், பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், புருஷோத்தமன், தோத்தாத்திரி. அதில் இன்று 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தைச் சேவிக்க இருக்கிறோம். விண்ணை முட்டும் கம்பீரமான கோபுரம் ஏழு நிலையுடன் பார்க்கப் பரவசம் தரும். நீண்ட சந்நதி தெரு. கோபுரத்துக்கு முன்னால் உயர்ந்த பீடத்துடன் கூடிய கருடக் கொடி மரம். மேலே அம்பாரியில் அமர்ந்த நிலையில் கருடாழ்வார். உள்ளே அழகிய சிறிய நான்கு கால் மண்டபம். இடது புறத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு தனிச் சந்நதி. உள்ளே முதலில் நூற்றுக்கால் மண்டபம். அகன்ற பெரிய மண்டபம்.

கோபுரத்தின் முதல் நிலையை கோஷ்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளின் திருவடியைப் பார்க்கலாம். திருவடிகளைச் சேவித்த பின்னர்தான் வராகப் பெருமாளை வணங்கிச் செல்வது வழக்கம். இந்தத் தலத்திற்கும், திருமலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. திருமலை முதலில் வராகரின் திருக்கோயிலாகவே இருந்தது. அங்கே இருக்கக்கூடிய புஷ்கரணிக்கு சுவாமி புஷ்கரணி என்று பெயர். அதன் கரைமேல் ஆதிவராக சுவாமி கோயில் உள்ளது. இப்பொழுதும் முதல் பூஜை வராகருக்குத்தான். அவரை சேவித்துவிட்டுத்தான் ஸ்ரீநிவாசப் பெருமாளைச் சேவிக்க வேண்டும். இங்கே (ஸ்ரீமுஷ்ணத்தில்) ஸ்ரீநிவாசப் பெருமாளை முதல் வணக்கம் செய்து, பின் வராகரைத் தரிசிக்க வேண்டும். அடுத்து, நூற்றுக்கால் மண்டபத்தின் வலப்புறம் நம்மாழ்வார் சந்நதி. கொடிமரம், பலிபீடம், வேலைப்பாடமைந்த கருடாழ்வார் சந்நதி.

புருஷ சூக்த மண்டபம்

இதைக் கடந்து சென்றால் மிக அற்புதமான புருஷசூக்த மண்டபத்தை நாம் காணலாம். முழுக்க முழுக்க கலைப் பொக்கிஷமாக சிற்பக்கூடமாக அமைந்திருக்கும் எழிலான மண்டபம் புருஷசூக்த மண்டபம். அங்கே உயிர் ஓவியங்களாக கண்ணில் நிலைபெற்று நின்றிருக்கும் பல சிற்பங்களை நாம் காணலாம். அதையும் தாண்டி உள்ளே சென்றால் விசாலமான மகாமண்டபம். அதற்குள் மிக அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய திருஉண்ணாழியும் அர்த்த மண்டபமும் காணலாம். இதற்கு உள்ளேதான் ஸ்ரீ வராகப் பெருமாள் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார். அவரின் தோற்றம் கொள்ளை அழகு.

மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார். மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

முத்தக்காசு

முஸ்தா சூர்ணம் என்ற பிரசாதம் ஸ்ரீ பூவராஹனுக்கு தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) ஆனவுடன் அமுது செய்து க்ஷேத்ரப்பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றது. அது என்ன முஸ்தா சூரணம்? கோரைக் கிழங்கு என்பது கோரைப்புல்லிருந்து கிடைக்கும் கிழங்கு. இதையே முஸ்தா என்று வடமொழில் கூறுவர். முஸ்தா என்ற சொல்லுக்கு ஒன்றுசேர்ந்திருத்தல் என்ற பொருள். ஒரு கொத்தில் பல கிழங்குகள் ஒன்றுசேர்ந்துள்ளதால் (கோரைக்கிழங்கு) முஸ்தா என்ற பெயர் வந்தது. கபம், பித்தம், ஜுரம் போன்ற வியாதிகளை போக்க வல்லது என்று “பாவப்ரகாசம்’’ என்ற நூல் தெரிவிக்கின்றதுவிடங்கப் பட்டையுடனும், நெல்லிக்கனியுடனும் சேர்த்து சாப்பிட-பேதி, பாண்டுரோகம், க்ஷயம், குஷ்டம் ஆகிய வியாதிகளை போக்க வல்லது என்று “ஸப்த கல்பத்ருமம்” என்ற நூல் தெரிவிக்கின்றது.

தண்ணீர் நிறைந்துள்ள கசப்பு நிலங்களில் உண்டாகும் கிழங்கு சிறந்தது. அதனிலும் சிறந்தது நாகர முஸ்தகம் என்னும் வகை. முஸ்தா சூர்ணம் வாயுவைத் தணிக்க வல்லது என்று “ராஜவல்லபம்” என்ற நூல் கூறுகின்றது.கோரைக் கிழங்கின் சூரணம் பலவிதமான சரீர வியாதிகளை போக்க வல்லது. கோரை கிழங்கு கசப்பும், காரமும் உடையதால் அதனை நன்றாக இடித்து, வஸ்த்ர காயம் செய்து, சலித்து, கொழவு ஜீனி (நாட்டுச் சர்க்கரை), நெய்யுடன் கலந்து ஸ்ரீ பூவராஹ பெருமாளுக்கு கண்டருளச் செய்வார்கள். வைணவ உரைகளில் “முத்தக்காசு’’ என்று குறிப்பிடப்படுகிறது.

இனி, உற்சவரைச் சேவிப்போம்

பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றி யதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். ஸ்ரீதேவி பூதேவியுடன் அத்தனை அழகுடன் காட்சி தருகிறார். ஸ்ரீமுஷ்ணம் கல்வெட்டுகளில் இவர் “ஆதி வராக நாயனார்” என்றே குறிப்பிடுகிறார். அருகே சந்தான கோபாலனையும் காணலாம். பற்பல உற்சவத் திருமேனிகளும்
இங்கு உள்ளன.

குழந்தை அம்மன் சந்நதி

மூலவரையும் உற்சவரையும் வணங்கிவிட்டு திருவலமாக வந்தால் குழந்தை அம்மன் சந்நதி என்றும் வழங்கப்பெறும் தாய்மார் எழுவரின் திருவுருவங்களைக் காணலாம். இங்குள்ள அம்புஜவல்லி தாயாரின் தோழிகள் என இவ்வெழுவரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். குழந்தை இல்லாத வர்களும், திருமணத்தடை இருப்பவர்களும் இந்த சப்த கன்னிகைகளை வணங்குகின்றனர். இதனையடுத்து தெற்கு நோக்கிய அழகான விஷ்வக் சேன மூர்த்தி சந்நதி. வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள யாகசாலை. தொடர்ந்து வேதாந்த தேசிகர், திருமங்கை ஆழ்வார், மணவாளமாமுனிகள், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சந்நதிகள். தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி இடம் பெற்றுள்ளது.

தாயார் சந்நதி

இவற்றைச் சேவித்துக் கொண்டு வந்தால், தாயார் சந்நதியை அடையலாம். இரு கரங்களிலும் மலர் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்துள்ள அம்புஜவல்லித் தாயாருக்கு, ஊஞ்சல் மண்டபமும், அர்த்தமண்டபமும் மகாமண்டபமும் கொண்ட தனிக்கோயில் அமைப்பிலேயே சந்நதி உள்ளது.

“கோல மலர்ப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய் நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ?’’

என்று வராகப் பெருமானை நம்மாழ்வார் வர்ணிக்கும் வர்ணனை அப்படியே ஸ்ரீமுஷ்ணம் வராகருக்குப் பொருந்தும்.இரண்டு பிறையைக் கவ்விக்கொண்டு அஞ்சனமலை நிமிர்ந்தாற்போலே கோலவராகமாகி நிலத்தை எயிற்றிடையிலே கொண்ட பெருமானே என்கிறார் ஆழ்வார். பூமியைத் தூக்கி நிறுத்தியது போல சம்சாரக் கடலில் தத்தளிக்கும் என்னையும் தூக்கி நிறுத்துவதற்காக வந்த உன்னை விடுவேனா… என்கிறார் ஆழ்வார். கோலம் என்றால் அழகு என்று பொருள். இந்த அழகைத்தான் மஹாலட்சுமி விரும்பினாளாம்.

அது ஒரு சுவையான கதை

இந்த பகுதிக்கு ஜில்லிகா வனம் என்று பெயர். குருவின் சாபம் பெற்ற காத்யாயன முனிவர் என்பவர், தம்முடைய சாபம் நீங்கவேண்டி பூவராகப் பெருமாளை பிரார்த்தித்து தவம் புரிந்தார். அவருடைய தவத்துக்கு இரங்கி, பகவான் அவருக்குக் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார். முனிவரிடம், வேறு வரம் வேண்டுமா என்று கேட்க, மகாலட்சுமித் தாயாரே தமக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று வரம் கேட்டார்.

புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் மகாலட்சுமியை மகளாகப் பெறலாம் என்று வழி சொன்னார் பெருமாள். அதன்படி, காத்யாயன முனிவர் புத்திர காமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார். யாகத்தின் நிறைவில் மகாலட்சுமித் தாயார் அழகிய குழந்தையாக முனிவர் முன் அவதரித்தாள். அம்புஜவல்லி என்று பெயரிட்டார்.சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த அம்புஜ வல்லித் தாயார், தன் தந்தையின் இறைப் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டாள்.

ஒருநாள், அங்கே தோன்றிய பூவராகப் பெருமாள், அம்புஜவல்லியைக் கண்டதும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பெண் கேட்டு பிரம்ம தேவரை காத்யாயன முனிவரிடம் அனுப்பினார். அம்புஜவல்லி பூவராக பெருமாளையே மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறவே, அவளைப் பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தார் முனிவர். அழகான தனிச் சந்நதியில் அதி அற்புத அழகோடு திருக்காட்சி தரும் தாயாரை தரிசிக்கலாம்.

திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் தாயார் சந்நதி போலவே, ஆண்டாளுக்கும் தனிச் சந்நதி உண்டு. இதனை ஒட்டி ராமானுஜருக்குச் சந்நதி உள்ளது. அதனை அடுத்து உடையார் மண்டபம் என்று வழங்கப்பெறும் விழா மண்டபம். அதில் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தது மிக அழகான முறையில் காட்சிதரும் வேணுகோபாலன் சந்நதியும், அதனை ஒட்டி வடபுறப் கோபுரவாசல் சொர்க்க வாசலாகவும் அமைந்துள்ளது.

தெப்போற்சவம்

இவை அனைத்தையும், வணங்கிவிட்டு வெளியே வந்தால், திருமதில் கோபுரத்துக்குத் தென்கிழக்கில் “நித்ய புஷ்கரணி” என்று வழங்கப்படும் திருக்குளமும், அதன் கரையில் லட்சுமி நாராயணர் சந்நதியும், அஸ்வத்த நாராயணன் என்று வழங்கப்பெறும் அரசமரமும், அதன் கரையிலே 3 அனுமன் சந்நதிகளும் இடம்பெற்றுள்ளன. பூமியை நிலை நிறுத்திய பெருமாள் தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரசமரம்) துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்ய புஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தினார் என்பது தல வரலாறு. இந்த புஷ்கரணியில்தான் சித்திரை மாதம் தெப்போற்சவம் நடைபெறும். இதுதவிர சந்நதிக்கு நேர் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நதி தெருவில் திருவடிக் கோயில் என்று அனுமனுக்கு தனிச் சந்நதி உள்ளது. இத்திருக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் இருக்கின்றன.அத்வைத, விசிஷ்டாத்வைத, மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களின் மடங்களும் இங்கே உள்ளன.

கிள்ளைப் பெருமாள் உற்சவம்

அனந்தபுரம் மாவட்டம் முப்புரி என்ற ஊரைச் சேர்ந்தவர் உப்பு வெங்கட்ராயர். அவர் தமிழகத்தில் வங்கக் கடற்கரை ஓரம் கிள்ளை என்கிற ஊரிலே தாசில்தாராகப் பணிபுரிந்தார். அவர் ஸ்ரீமுஷ்ணம் வராகப் பெருமானிடம் மிகுந்த பக்தி மிகுந்தவர். வராகப்பெருமாள் மாசிமகத்தில் கிள்ளைக்குக் கடலாடுவதற்காக வருகின்ற பொழுது பக்தர்கள் தங்கும் வசதிகளும், அன்னதானம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தார். கிள்ளைக்கு வருகின்ற பெருமாள் உற்சவம் காணவும் அபிஷேக ஆராதனைகள் ஏற்கவும் திருநாள் தோப்பு எனுமிடத்தில் 175 ஆண்டுகளுக்கு முன்னரே மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சையத்ஷா குலாம் முகைதீன் ஷூத்தாரி என்கிற முகலாய ஜமீன்தார் உப்பு வெங்கட்ராயருடன் நட்பு கொண்டிருந்தார். அந்த நட்பின் காரணமாக 16 காலனி நஞ்சை நிலம் சுத்த தானமாகவும் ஆறுகாணி சாசுவத தானமாகவும் நிலம் அளித்தார். இந்த சையத்ஷா என்பவர் 250 ஆண்டுகளுக்கு முன்னரே கிள்ளை தர்காவில் அடக்கமாயுள்ள ஹஜரத் சையத் ரகமத்துல்லா ஷூத்தாரி என்பவரின் பேரன் ஆவார்.

உப்பு வெங்கட்ராமையர் கிள்ளை ஜமீன்தார் தந்த கொடையில், பரம்பரையாக ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீ வராக சந்நதியில் அகண்டம், கிள்ளை மாசிமக மண்டகப்படி, கிள்ளை ஆஞ்சநேயர் கோயில் பூஜைகள் ஆகியவற்றை நடத்தி வருகின்ற ஏற்பாட்டை செய்தார். மாசிமக உற்சவத்தின்போது கிள்ளையில் இஸ்லாமியர்கள் வசிக்கும் தைக்கால் இடத்திற்குச் செல்லுதல், அவர்கள் வழிபாட்டினையும் மரியாதை களையும் ஏற்றல், ஹாஜியார் பதில் மரியாதை செய்தல் ஆகிய நடைமுறைகள் உடையார்பாளையம் ஜமீன்தார் காலம் முதல் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.

அதைப் போலவே ஐரோப்பியர்கள் குறிப்பாக தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக 1826 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஹைட் என்பவர் சில அணி கலன்களையும் தேர்த் திருவிழாவிற்கு தேர்வடம் ஆக இரும்புச் சங்கிலியும் இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இக்கோயிலில் பல வாகனங்கள் இருப்பினும் ஓவியங்கள் தீட்டப் பெற்ற பல்லக்கு ஒன்று இங்கு உள்ளது. அதில் தல புராணக் காட்சிகள், லட்சுமி வராகர், ஸ்ரீ யஞ்ஜ வராகர், உற்சவமூர்த்திகள், இசை, நடனம் ஆகியவை ஓவியமாகத் தீட்டப் பெற்ற இந்த பல்லக்கு அற்புதமான கலைக் கருவூலமாகவும் திகழ்கிறது.

வருடம் முழுக்க உற்சவங்கள்

சித்திரை பிரம்மோற்சவ விழாவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஒன்பது நாட்கள் பகல், இரவு பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒன்பதாவது நாள் மட்டையடி உற்சவம் விசேஷமானது. சித்ரா பௌர்ணமி அன்று நண்பகலுக்கு மேல்புஷ்கரணியில் தீர்த்தவாரி. இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள், பவுர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு இந்த நாட்களில் யோகநரசிம்மசுவாமி பிரகாரத்தில் எழுந்தருள்கிறார்.

அவதார தினமாகிய சித்திரை மாத ரேவதியில் பூவராகன் எழுந்தருள்கிறார். வைகாசி விசாகம் – உற்சவர் கருடவாகனம், ஆடிப்பூரம் – ஆண்டாள் உற்சவம், ஆவணி – பத்துநாள் ஸ்ரீஜெயந்தி, உறியடி. புரட்டாசி – பெருமாள் தாயார் நவராத்திரி கொலு, ஐப்பசி – தீபாவளி உற்சவம், கார்த்திகை – திருக்கார்த்திகை சொக்கப்பனை, மார்கழி – பகல்பத்து ராப்பத்து மற்றும் ஆண்டாள் நீராட்டு, வைகுண்ட ஏகாதசி – யக்ஞவராகன் வீதி உற்சவம் மற்றும் கருடசேவை, தை சங்கராந்தி – யக்ஞவராகனுக்கும் ஆண்டாளுக்கும் திருக் கல்யாணம், மாட்டுப்பொங்கல் – பாரிவேட்டை, தைப்பூசம் – தீர்த்த உற்சவம், பங்குனி உத்திரம் – பெருமாள்தாயார் திருக்கல்யாணம், திரு ஊரல் உற்சவம். இப்படி வருடம் முழுக்க உற்சவங்கள்தான் வராகருக்கு.

பிரார்த்தனைகள்

ஸ்ரீ வராகப் பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள்இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும்.

தவிர, புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர்செய்த பின்பு, இங்கு ஓட்டி வந்து பூவராகபெருமாளிடம் வழிபட்ட பின்னர், ஓட்டுகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறப் பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள். வாருங்கள், நாமும் ஒருமுறை வராகப் பெருமாளை சேவித்து, வற்றாத நல்வாழ்வு பெறுவோம்.

1. இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும். அதாவது இந்த விமானத்தை தரிசித்தாலே பாவங்கள்
அழியும். புண்ணியங்கள் சேரும்.

2. விருத்தாச்சலத்தில் இருந்து 22 கி.மீ.தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளது. இரு ஊர்களில் இருந்தும் ஸ்ரீமுஷ்ணத்துக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

3. குழந்தை இல்லாத திருமணமான தம்பதிகள் நித்ய புஷ்கரணியில் நீராடி, சுமார் 12 முறை அரசமர பிரதட்சிணம் செய்து, குழந்தைகளுக்கு உணவளித்து, வராஹ கவசம் (வராஹ கவசம்) ஓதி, பெருமானுக்குச் சிறப்பு அர்ச்சனை செய்து, பால் நிவேதனம் அருந்த வேண்டும். (சொல்லி வைத்தால் தருவார்கள்). நிச்சயம் புத்திர தோஷம் மறைந்து, குழந்தை வரம் கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு தடை நீங்கி நல்லபடியாக திருமணம் நடக்கும். அமாவாசை அன்று இங்கு விசேஷம். அன்று பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சோம அமா பிரதட்சணம் செய்வார்கள்.

4. காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

 

 

The post பூமியைக் காத்த புண்ணியனே பூவராகப் பெருமானே appeared first on Dinakaran.

Tags : earth ,Srimushnam ,Mannarkudi forest ,Cuddalore district ,Vrudhachalam ,Jayangonda ,Chidambaram ,
× RELATED அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில்...