கிருஷ்ணராயபுரம், ஜூலை 24: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க வந்து நீரில் மூழ்கிய வாலிபரை தீயணைப்பு துறையினர் 3வது நாளான நேற்று சடலமாக மீட்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பால்ராஜபுரம் ஊராட்சி உள்வீரராக்கியம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ராகவா ஆனந்த்(24). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர்.
மாயனூர் தடுப்பணை தென்கரையில் கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது, குளித்து விட்டு ராகவா ஆனந்த் தவிர்த்து மற்ற 2 இளைஞர்கள் மட்டும் கரையேறியுள்ளனர். ராகவா ஆனந்த்தை தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள மாயனூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
தகவலறிந்த கரூர் தீயணைப்பு துறையி மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கடந்த மூன்று நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று காலை மாயனூர் காவிரி கதவணையிலிருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்காலில் ராகவா ஆனந்த் உயிரிழந்த நிலையில் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கிருஷ்ணராயபுரம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.