×
Saravana Stores

ராயப்பேட்டை துர்கை அம்மன் கோயில் முன்பு அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலை வேறு இடத்திற்கு மாற்ற நிபுணர் குழு: ஐகோர்ட்டில் மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, ஜூலை 24: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆலயம் காப்போம் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ரத்தின விநாயகர் மற்றும் துர்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, மெட்ரோ ரயில் திட்டத்தை மாற்றி அமைக்க கோரி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநரிடமும், தமிழக அரசுக்கும் கடந்த ஜூன் 14ம் தேதி மனு கொடுத்தோம். எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதிலும் தரப்படவில்லை. எனவே, எங்கள் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கனவே பொறுப்பு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயிலை இடிக்கவில்லை. 10 அடிக்கு கோயில் ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகர்த்தி வைக்க உள்ளோம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ரயில் நிலைய நுழைவாயிலை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இடைவிடாமல் டிரில்லிங் மற்றும் தோண்டும் பணிகள் கோயிலை சுற்றி நடைபெறுகிறது, என்றார்.

அதற்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கோயில் முன்பு அமைய உள்ள ரயில் நிலையத்தின் நுழைவாயிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மாற்று வழிகளை ஆராய்ந்து சமர்ப்பிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம், என்றார். இதையடுத்து நீதிபதிகள், நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி விசாரணையை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

The post ராயப்பேட்டை துர்கை அம்மன் கோயில் முன்பு அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலை வேறு இடத்திற்கு மாற்ற நிபுணர் குழு: ஐகோர்ட்டில் மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rayapetta Durgai Amman Temple ,Icourt ,CHENNAI ,Chennai High Court ,Ayalam Kappom Trust ,Rathina Vinayagar ,Durga Amman Temple ,White's Road, Rayapetta, Chennai ,Rayapetta ,Durgai Amman temple ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...