வேலூர், ஜூலை 24: ஆன்லைனில் பார்ட் ஜாப் உள்ளதாக பேஸ்புக்கில் லிங்க் அனுப்பி நர்சிடம் ₹4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகாரின்பேரில், வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை நர்சாக வேலை செய்து வருகிறார். இவரது பேஸ்புக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை தொட்டபோது, டெலிகிராம் குரூப்பில் இணைப்பு கிடைத்துள்ளது. பின்னர் அதனை லைக் செய்து அதில் உள்ள வீடியோவில் வருவதுபோல், ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் வங்கி கணக்கிற்கு பணம் வரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய நர்ஸ், லிங்க் மூலம் இணைந்து அவர்கள் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்கள் கூறியபடி இவரது வங்கி கணக்கிற்கு சிறிது பணம் வந்துள்ளது. பின்னர் அந்த லிங்க்கில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை ₹4 லட்சத்து 16 ஆயிரத்து 167ஐ பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார். ஆனால் அதில் குறிப்பிட்டபடி பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். இப்புகாரின் மீது சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரைண நடத்தி வருகிறார். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘இதுபோன்று வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் முதலீடு, ஆன்லைன் டாஸ்க், பார்ட்டைம் ஜாப் தொடர்பாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மக்கள் யாரும் ஏமாற வேண்டாம். பண இழப்பு ஏற்பட்டால், உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் பதிவு செய்யலாம்’ என்றனர்.
The post பேஸ்புக்கில் லிங்க் அனுப்பி நர்சிடம் ₹4 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை ஆன்லைனில் பார்ட் ஜாப் உள்ளதாக appeared first on Dinakaran.