×

கேப்டன் பதவிக்கு சூரியகுமார் ப்பர் சாய்ஸ்…

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளது மிகப் பொறுத்தமான தேர்வு என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக, சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி வீரர்கள் நேற்று மும்பையில் இருந்து கொழும்பு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அகர்கர் கூறியதாவது: ஒருநாள், டி20, டெஸ்ட் என எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாடக் கூடிய கேப்டனைத் தான் நீங்கள் விரும்புவீர்கள். அதற்கு சூரியகுமார் தான் தகுதியானவர் என்று நினைக்கிறோம். வருங்காலத்தில் அப்படி உருவாகப் போவதை நாம் பார்க்கலாம். ஹர்திக் எங்களுக்கு முக்கியமான வீரர். அவர் போன்று திறமையான வீரரை கண்டறிவது கடினம். ஆனால், அவரது உடல்தகுதி தான் சற்று யோசிக்க வைக்கிறது. அடுத்த டி20 உலக கோப்பைக்கு நிறைய அவகாசம் இருக்கிறது. அதனால் இப்போது அவசரம் ஏதுமில்லை. அதே சமயம், எப்போதும் தயாராக உள்ள வீரரை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுதான் அணி தேர்வுக்கும் வசதியானதாக இருக்கும். அப்படி ஒரு வீரராக சூரியகுமார் இருக்கிறார்.

ஒரு நல்ல கேப்டனாக இருக்கும் தகுதி சூரியகுமாரிடம் இருப்பதாக நம்புகிறோம். ஒரு வீரராக அவரது ஆட்டம் குறித்து எப்போதும் பிரச்னையில்லை. யார் கேப்டனாக இருக்கவேண்டும் அல்லது இருக்கவேண்டாம் என்பது… ஒரே இரவில் எடுக்கப்படும் முடிவு அல்ல. வெளிப்படையாக நிறைய கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் கேப்டனுக்கான வாய்ப்பில் இருக்க வேண்டும்.

தேர்வுக்கு முன்பும், பின்பும் ஒவ்வொரு வீரரிடமும் நாங்கள் பேசுகிறோம். அவர் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாற்றங்கள் குறித்து பேசுகிறோம். ராகுல் தேர்வு செய்யப்படாதபோது நான் தேர்வாளராக இல்லை. அவர் அணிக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு எப்போதும் உள்ளது. ரோகித் அணியில் நீடிப்பது எங்கள் வேலைகளை எளிதாக்குகின்றன. அவர் அணியை வழிநடத்துவார். ரோகித் அல்லது சூரியாவுக்கு காயம் ஏற்பட்டால் கேப்டன்களை தேடும் சவால்கள் இல்லை.

ஜடேஜாவின் சாதனைகள் எங்களுக்கும் தெரியும். ஒருநாள் உலக கோப்பையில் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. வாய்ப்புகள் அப்படியே இருக்கின்றன. ஜடேஜா, அக்சர் என இருவரையும் எடுத்திருந்தால் இருவருக்கும் 3 ஆட்டங்களிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அடுத்து பெரிய டெஸ்ட் தொடர்கள் நடைபெற
உள்ளன. அதில் விளையாட அவருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இந்த 3 ஆட்டங்கள் அவருக்கு முக்கியமானதாக இருக்காது. அணித் தேர்வுக்கு பிறகு அவர் நீக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் போன்றவர்கள் பல ஆண்டுகளாக வாய்ப்பு பெறாதது துரதிர்ஷ்டவசமானது. அணிக்காக 15 பேரை தேர்வு செய்வது எங்கள் முன் இருக்கும் பெரும் சவால். ஷ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பிவிட்டதால், ஒருநாள் அணிக்கு சூரியகுமார் பெயரை நாங்கள் பரிசீலிக்கவில்லை. மொத்ததில் யாராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும். அதற்கேற்ப தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இடத்துக்கு இன்னொரு தரமான வீரர் காத்திருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியும். இவ்வாறு அகர்கர் கூறினார்.

The post கேப்டன் பதவிக்கு சூரியகுமார் ப்பர் சாய்ஸ்… appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Mumbai ,Committee ,Ajit Agarkar ,Suryakumar Yadav ,Indian T20 team ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?