×

ஏன்? எதற்கு? எப்படி?

?அடித்தளங்கள் வாழ்வதற்கு அல்லது வேலை செய்வதற்கு நல்லதா?
– சூரியகுமார், ஆவடி.

அடித்தளங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது, கட்டிடத்தின் கீழே உள்ள பேஸ்மெண்ட் பகுதி என எண்ணுகிறேன். பேஸ்மெண்ட் பகுதி அதாவது தரைதளத்திற்கு கீழே உள்ள பகுதி என்பது குடும்பம் நடத்துவதற்கு உகந்தது அல்ல. அந்த இடத்தில் வியாபார நிமித்தமாக ஒரு சில தொழில்களை செய்யலாம். சில தொழில்களைச் செய்யக் கூடாது. காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் மளிகை பொருட்களை வியாபாரம் செய்யலாம். நகைக் கடை, விலையுயர்ந்த பொருட்கள் விற்பனை போன்றவற்றை தரைதளத்திற்கு கீழே செய்யக் கூடாது. வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் ஆக உபயோகப்படுத்தலாம். குடியிருப்பாக பயன்படுத்தக் கூடாது.

?சகடை யோகம் பற்றி விளக்கவும்.
– என்.செயக்குமரன், திருநெல்வேலி.

ஒருவருடைய ஜாதகத்தில் குருவிற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் அமர்ந்தால், சகடையோகம் என்பார்கள். சகடை என்றால் காலசக்கரம் என்று பொருள். ஒரு வண்டி எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டிருக்குமோ, அதுபோல இந்த யோகம் பெற்றவர்கள் வாழ்வினில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தால் மட்டுமே இவர்களால் பொருள் ஈட்ட இயலும் என்பது இந்த யோகத்திற்கான பலன் ஆக சொல்லப்படுகிறது. இதுபோக, சற்று கவனக்குறைவாக இருந்தாலும் பொருள் சேதம், பெருநஷ்டம் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். ெபாருளாதாரத்தில் எச்சரிக்கை தேவை. இதுபோன்ற அமைப்பினை உடையவர்கள், தேடும் பொருளினை தன் மனைவியின் பெயரிலோ அல்லது குழந்தைகளின் பெயரிலோ சேமித்து வைப்பது நல்லது.

?எனது மகளுக்கு நாகதோஷம் உள்ளது. அத்தை மகனுக்கு சுத்த ஜாதகமாக இருக்கிறது. திருமண ஏற்பாடு செய்யலாமா?
– வி.ரங்கநாதன், குடியாத்தம்.

தாராளமாக செய்யலாம். பிள்ளைகள் இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருந்தால், மனப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தாராளமாக திருமணத்தை நடத்தலாம். இறைவன் சந்நதியில் திருமணத்தை நடத்துங்கள். எந்தப் பிரச்னையும் வராது. குழந்தைகள் வாழ்வினில் வளமுடன் வாழ்வார்கள்.

?கையெழுத்து நன்றாக இருந்தால், தலையெழுத்து சரியாக இருக்காது என்கிறார்களே, இரண்டிற்கும் தொடர்பு உண்டா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இல்லை. இது முற்றிலும் மூடநம்பிக்கையே. கையெழுத்து என்பது இரண்டு விதமான பொருளைத் தரும். ஒன்று சிக்நேச்சர் என்றும் மற்றொன்று ஹேண்ட்ரைட்டிங் என்றும் ஆங்கிலத்தில் பொருள் காணப்படுகிறது. இவற்றில் சிக்நேச்சர் என்பதில் பெரும்பாலும் அழகினை எதிர்பார்க்க இயலாது. இந்த சிக்நேச்சர் என்பது அந்த மனிதரின் குணாதிசயத்தை உணர்த்தும். இதனைக் கொண்டு பலன் சொல்பவர்களும் உண்டு. ஆனால், ஹேண்ட்ரைட்டிங் என்பது அழகாக இருந்தால்தானே அவர் எழுதுவது மற்றவர்களுக்குப் புரியும்.

கணினி பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலத்தில், எழுதுவது என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது. போட்டித் தேர்வுகள்கூட தற்போது கணினிமயம் ஆகிவிட்டது. இன்னும் சில வருடங்களில், எழுதுவது என்பது முற்றிலும் குறைந்துவிடும். ஆக, கையெழுத்து என்பதுதான் ஒரு மனிதனின் தலையெழுத்தினை தீர்மானிக்கும் என்று கருதுவது முற்றிலும் மூடநம்பிக்கையே. ஜோதிடவியல் ரீதியாகவும் இந்த கருத்தில் உண்மை என்பது இல்லை.

?கோயில்களில் பூஜித்து கையில் கட்டும் கயிறு என்பது எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்.
– பொன்விழி, அன்னூர்.

குறைந்த பட்சமாக, ஒரு பக்ஷம் எனப்படும் 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக ஒரு மண்டலம் என்று அழைக்கப்படும் 48 நாட்கள் வரை கையில் இருக்கலாம். அதன்பிறகு மீண்டும் புதிதாக பூஜித்து வேறு ஒரு புதிய கயிறினை கட்டிக்
கொள்வது நல்லது.

?சிவாலயத்தில் எந்த மரம், செடிகள் நடலாம்?
– ராஜிராதா, பெங்களூரு.

வில்வமரம், சரக்கொன்றை போன்ற மரங்களையும், நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற பூக்களைத் தரும் செடி களையும் நட்டு வைத்து நீருற்றி வளர்த்தால், அளப்பறிய நன்மை கிடைக்கும். பலவிதமான தோஷங்களையும் நீக்கும் பரிகாரமாகவே இது பார்க்கப்படுகிறது.

?ரிஷப ராசிக்கு ஏற்ற தலம் எது? எந்த நாளில் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்?
– மு.கீதா, தஞ்சை.

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்ரன். சுக்ரனுக்கு உரிய தலம் என்பது ஸ்ரீரங்கம். சுக்ரவாரம் என்று அழைக்கப்படும் வெள்ளிக் கிழமை நாளில், ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதப் பெருமாளை சேவிக்க, ரிஷப ராசிக்காரர்களுக்கு பலம் என்பது கூடும். பொதுவாக, திங்கட்கிழமை நாளும், வெள்ளிக் கிழமை நாளும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், அந்நாட்களில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் தன்னம்பிக்கையைக் கூட்டும்.

?நாகங்கள் பின்னிப் பிணைந்து கொண்டிருப்பதைக் கண்டால் நாகதோஷம் வருமா?
– த.சத்தியநாராயணன்,அயன்புரம்.

வராது. அதே நேரத்தில், அவ்வாறு பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவற்றை விரட்டும் செயலில் ஈடுபட்டால், கண்டிப்பாக தோஷம் என்பது வந்து சேரும். அதுபோன்ற சூழலில், சத்தம் ஏதும் எழுப்பாமல் அமைதியாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவதே நல்லது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள்கூட சாலையோரத்தில் இவ்வாறு நாகங்கள் பின்னிப் பிணைந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, வண்டியின் இன்ஜினை அணைத்துவிட்டு ஓசை எழுப்பாமல் வண்டியை தள்ளிக் கொண்டு செல்வதை இன்றளவும் கிராமப்புறங்களில் காண முடியும்.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Avadi ,Dinakaran ,
× RELATED சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது...