×

இந்த வார விசேஷங்கள்

சஷ்டி 26.7.2024 வெள்ளி

சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மண மாலை சூடும் வாய்ப்பு உருவாகும். குழந்தைப் பேறு பெறக் காத்திருப்பவர்களுக்கு மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும். மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் அன்று அசைவ உணவைத் தவிர்த்து, மாலை முருகன் கோயிலுக்கு, அல்லது சிவ ஆலயத்துக்குள் இருக்கும் முருகன் சந்நதிக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை 26.7.2024

“கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம்” போல் ஒருமாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. வாரக் கிழமைகளில் சுக்கிர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். திருமகள் அருளைப் பெற்றுத் தரும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்குப் பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்பஇலையை கொண்டு வந்து வீட்டின் நிலைவாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளைச் சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Murukapperuman ,Diti ,Sashti Day ,
× RELATED வில்லேந்திய வேலவன்