கோவை மாவட்டத்தின் குன்றுறை கடவுளாக விளங்குபவர் மருதமலை முருகப்பெருமான். கோவை மக்களைப் பொருத்தவரையில் இந்த மருதமலையும் ஒரு படைவீடு தான். இந்த மருதமலை மீது இருக்கும் முருகனைக் கும்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும். அதுமட்டுமல்ல, அந்த மலையைக் கும்பிட்டாலே பல நன்மைகள் வந்து சேரும். அந்த மலையைக்கண்ணால் கண்டவர்கள், அந்த மலையைப் பற்றி மகிழ்வுடன் கேட்டவர்கள், அதைப் பணிந்தவர்கள், அங்கு வழிபடுவோர், அம்மலைக்குத் திருப்பணி செய்வோர் என அனைவரும் குற்றங்கள் தீர்ந்து, தேவர்கள் அடையும் அனைத்து நன்மைகளையும் அடைவார்கள். அதனை,
“………அந்த வரையினைக் கண்டோர்
உவப்புறக் கேட்டவர், பணிந்தோர்
வம்புலாங் கடப்பந் தாரினான் அங்கு
வதிதரும் உரு வழிபடுவோர்
செம்பொன் ஆதிகளால் திருப்பணி பிறவும் செய்பவர்
இவர் எலாம் செயிர் தீர்ந்து
இம்பரின் எதிரில் செல்வராய், உம்பர்
இன்பெலாம் கைக்கொள்வர் எளிதின்” (13: 25) என்கிறது பேரூர்ப்புராணம்.
மருதமலை குறித்த அரிய செய்திகள்
பேரூர்ப்புராணமானது பேரூரை மட்டுமே பாடாது அதனைச் சுற்றியுள்ள தலங்கள், மலைகள், ஆறுகள் என்று பரவலாகப் பதிவுசெய்துள்ளது. அவ்வகையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மருதமலையைப் பற்றிப் பல செய்திகள் பேரூர்ப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன. மருதமலையானது கந்தபுராணத்துடன் தொடர்புடையதாகும். சூரபத்மனின் இன்னல்களைத் தாங்காத தேவர்கள், கயிலாயம் சென்று கைகூப்பிக் கண்ணுதற்கடவுளை வணங்கி முறையிட, “நம்முடைய நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப் படும் முருகப்பெருமானால் மட்டுமே சூரபத்மனை அழிக்கமுடியும். அந்த முருகப்பெருமான் உதிக்கும்வரை அனைவரும் பேரூராகிய ஆதிபுரியில் இருங்கள். அதற்கு அருகில் சிறிய மலை ஒன்று உள்ளது. அது மருதமரங்கள் சூழ்ந்த மலையானதால் அம்மலை ‘மருதமலை’ எனப்பட்டது. அங்கு முருகனே மருதமலையாகவும் அவனுக்கு அருகில் இருக்கும் மருதமரமே வேலாகவும் உள்ளது என்றார்.
“முருகன் என்னும் மொய்கொள் மொய்ம்பினான்
உருகும் அன்பர்க்கு உதவி செய்யவே
பெருகு காமர்ப் பிறங்கல் ஆயினான்
ருகின்வேலும் மருதம் ஆயதே”
(பேரூர்ப்புராணம் 13: 17)
அங்கு சென்று வழிபடுங்கள் அல்லன தீர்ந்து நல்லன பெருகும் என்றார் சிவபெருமான். அதன்படி நன்மையும் நடந்தது.
மருத தீர்த்தம்
மேலும், அங்குள்ள மருதமரத்தின் அடியிலிருந்து ஒரு தீர்த்தம் உண்டாகிறது. அது வேறு எதுவுமல்ல சிவபெருமானின் தலையிலிருக்கும் கங்கையாறுதான். அது மருததீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்தீர்த்தத்தைப் பற்றிக் கேட்டோர், கண்டோர், நீராடியோர், அருந்தியோர் என அனைவரும் நற்கதி அடைவர் என்கிறது பேரூர்ப்புராணம்.
மருததீர்த்தத்தின் பலன்
மருத தீர்த்தத்தில் நீராடினால், பேய்நீங்கும், குழந்தைப்பேறு வாய்க்கும், கண்பார்வை கிடைக்கும், அழகும் ஆரோக்கியமும் கிடைக்கும். அதுமட்டுமல்ல, மனத்தில் நினைத்த எல்லாம் நிறைவேறும் என்கிறது
பேரூர்ப்புராணம்.
The post மனநலம் காக்கும் மருதமலையான்! appeared first on Dinakaran.