×
Saravana Stores

தீப ஒளியில் மின்னும் காசி

காசியில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. தீபாவளித் திருநாளில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது “மணிகர்ணிகா கட்டம்’’ மட்டுமே! ‘‘எந்த இடத்தில் சங்கரர் யாரும் கடக்க முடியாத சம்சார சாகரத்தைக் கடக்க வைக்கிறாரோ, அதுவே மணிக்கர்ணிகா கட்டம்’’ – என்று ‘காசி காண்டம்’’ விளக்குகிறது. ‘‘மணிகர்ணிகாவில், மாத்தியாந்நிக ஸ்நானம் செய்பவர் நாராயணனையோ, சிவனையோ அடைகிறார். மணிகர்ணிகாவில் மரணம் நேரிடின், அப்படி ஆவி பிரிந்தவனைத் தரிசிக்க இந்திரனே ஆயிரம் கண் கொண்டு காத்துக் கிடக்கிறான்!’’ என்று ‘மணிகர்ணிகா அஷ்டகத்தில்’ ஆதிசங்கர பகவத் பாதர் கூறுகிறார். காசி மாநகரில், கங்கைக் கரையில் உள்ள 64 ஸ்நானக் கட்டங்களில், முக்கியமான ஐந்து ஸ்நான கட்டங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

அவை, அஸிகட்டம், தசாசுவமேத கட்டம், வருணா கட்டம், பஞ்சங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகியவை. இந்த ஐந்து கட்டங்களிலும், படகில் கங்கையில் சென்று ஸ்நானம் செய்த பிறகு, பித்ரு காரியங்களைச் (நீத்தார் கடன்) செய்ய வேண்டும். குறிப்பாக, மணி கர்ணிகா கட்டத்தில் ஸ்நானம் செய்து, அங்கேயே கரையில் பித்ரு காரியங்களைச் செய்வது மிகவும் விசேஷம். மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி உயிரை விடும் மனிதன், முக்தி பெறுவான் என்பது ஐதீகம். ஆதிசங்கரம் மணிகர்ணிகாஷ்டகத்தில் இந்தக் கட்டத்தைப் பற்றி மிகவும் சிறப்பாகக் கூறி இருக்கிறார்கள். மேற்குறித்த ஐந்து ஸ்நானக் கட்டங்களில், தான தர்மங்கள் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. அவற்றின் பலன், பல மடங்கு உயரும் என்பர். இங்கே பித்ருக்களுக்குச் செய்யும் கடன் மிகுந்த பலன் உள்ளதாக ஆகிவிடுகிறது.

தல மகிமை, மூர்த்தி மகிமை, தீர்த்த மகிமை இம்மூன்றிலும் தலை சிறந்து விளங்கும் இத்தலத்தில், ‘காசி காண்டம்’ கணக்குபடி, தானாகவே தோன்றிய சுயம்புலிங்கங்கள் 11, தேவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்கள் 46, ரிஷிகள் ஸ்தாபித்த லிங்கங்கள் 47, நவக்கிரகங்கள் ஏற்படுத்திய லிங்கங்கள் 7, பூதகணங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கங்கள் 40, பக்த சிரோன்மணிகள் நிறுவிய லிங்கங்கள் 295, பாரதத்தில் புகழ் சேர்த்த சிவசேத்திரங்களை நினைவு கூறும் லிங்கங்கள் 65, விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் 56, பிந்து மாதவர்கள் வடிவம் 9, பைரவர்கள் 8ம் சேர்த்து மொத்தம் 584 தெய்வங்கள் உள்ளன, அவற்றை இன்றும் தரிசிக்கலாம்.நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள புகழ் பெற்ற காசியில், எந்தெந்த கோயில்களை எந்த வரிசையில் தரிசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு ஸ்லோகமே இருக்கிறது. அது…

‘‘விசுவேசம் – மாதவம் – துண்டிம்
தண்டபாணிஞ்ச பைரவரம் – வந்தே
காசிம் – குஹாம் – கங்காம்
பவானிம் – மணி கர்ணிகாம்!’’

இது, காசியில் உள்ள முக்கியமான மூர்த்திகள், தேவியர் திருநாமங்களைக் குறிக்கும் ஸ்லோகம். காசியில் தீபாவளியும், மகாசிவராத்திரியும் முக்கிய பண்டிகைகள். குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையே காசிமாநகரின் பிரதான பண்டிகை. தீபாவளியின் அருமை பெருமைகளை அதன் உண்மைத் தன்மையை நாம் காசியில் மட்டும்தான் காண முடியும். தீபாவளி என்றால் காசியில்தான் காண வேண்டும். கங்கா ஸ்நானம், காசியில் செய்வது மிகவும் விசேஷம். இதற்காகவே, லட்சக் கணக்கான மக்கள் காசியில் வந்து குவிகிறார்கள். மேற்குறித்த ஸ்லோகத்தின்படி, காசியில் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்வோம் வாருங்கள்!

காசி விஸ்வநாதர்

திருவருள் மணக்கும் அந்த விஸ்வலிங்கத்தை வழிபடுவோர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்தது. மேற்கு நோக்கி அமைந்துள்ள மூர்த்தியை நான்கு புறங்களிலிருந்தும் வழிபடலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை சந்நதி திறந்திருக்கிறது. பிறகு உச்சி கால பூஜை நடைபெறுகிறது. நாமே சிவலிங்கத்துக்கு கங்கை நீராலும், பாலைக் கொண்டும் அபிஷேகம் செய்யலாம். மாலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை சப்தரிஷி பூஜை நடைபெறுகிறது. ஏழு அந்தணர்கள் சுற்றிலும் அமர்ந்து வேத முழக்கம் செய்து ஆராதனை செய்கிறார்கள். அது முடிந்தவுடன் தமருகம் போன்ற வாத்தியத்தை முழங்கி சிவலிங்கத்துக்கு மலர் மாலை சூட்டி, நாகாபரணத்தைப் பொருத்துகிறார்கள். அதன் பின், பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்று, தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகிறது.

இரவு ஒன்பது மணிக்குப் பின்னர் அர்த்த ஜாம பூஜை நடத்துகிறார்கள். நள்ளிரவில் கோயிலில் திருக்காப்பு இட்டு மூடி விடுகிறார்கள். ஆலயத்துக்கு அருகே ஞானவாபி என்ற புனித கிணறு அமைந்துள்ளது. அதன் மேற்கே முக்தி மண்டபம் இருக்கிறது. இங்கே அமர்ந்து பஞ்சாட்சர ஜபத்தைச் சொன்னால், அளவற்ற புண்ணியம் உண்டாகும் என்கின்றனர்.

விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அன்னபூரணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அன்னையே அரசியாவாள். தேவி இடக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கையில் தங்கக் கரண்டியுமாகத் திகழ்கிறாள். எதிரில் திருவோடு ஏந்தி நிற்கும் விஸ்வநாதர்க்கு, அன்னமிடுகிறாள் அன்னபூரணித்தாய். அன்னபூரணியின் சந்நதியைப் பலகணி வழியாகத்தான் தரிசனம் செய்ய வேண்டும். தீபாவளியை ஒட்டி மட்டுமே அன்னபூரணியை வௌியே உற்சவத்துக்கு அழைத்து வருகிறார்கள். லட்டுத் தேரில் அமர்ந்து அன்னபூரணி காட்சி தந்தருள்வாள். தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியுடன், ஸ்ரீதேவியும் பூதேவியும் உடனிருந்து ஆசீர்வதிக்கிறார்கள். பிராகாரத்தைச் சுற்றி கோசாலை உள்ளது. அங்கேயே கணபதி, தசாவதாரப் பெருமாள், சூரிய நாராயணர் ஆகியோரின் விக்கிரகங்களும் உள்ளன. இங்கு நடுப்பகலில் நடைபெறும் பூஜையையும், ஆரத்தியையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

காசி விசாலாட்சி

காசி விசாலாட்சியின் ஆலயம், விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் சந்து ஒன்றில் அமைந்துள்ளது. தமிழக பாணியில் கோபுரமும் விமானமும் அமைந்த கோயில் இது. 1908ல் திருக்கோயில் உருவானது. தமிழகப் பாணியில் இங்கே அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரப் பூஜையெல்லாம் நடைபெறுகிறது. இங்கே குங்கும அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுப்பார்கள். மகாசிவராத்திரி நாளில், அன்னை விசாலாட்சிக்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவம் இங்கே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சிவலிங்கம், விநாயகர், தண்டாயுதபாணி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் சந்நதிகளுடன், நவக்கிரகங்கள் சந்நதியும் உள்ளது. இங்கே தீபாவளி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அம்மனின் தங்க விக்கிரகம் நாகேஸ்வரர் ஆலயத்தில் தரிசனத்துக்கு எழுந்தருளச் செய்யப்படுகிறது.

துண்டிராஜ விநாயகப் பெருமான்

இந்த விநாயகர் கோயில், கடைத் தெருவில் உள்ளது. அவர் செந்தூர வண்ணத்தில் காட்சியளிக்கிறார். அவர் அருகே கிழக்கு முகமாகச் சாட்சி விநாயகர் அருளுகிறார். காசியில் பஞ்சகங்கா கட்டத்தில் பிந்து மாதவரைத் தரிசிக்கலாம். இங்கே உள்ள மூர்த்தி நாராயணன், சங்கு, சக்கர, கதா, பத்மராகக் காட்சி தருகிறார். மண்டபத்தின் வலது புறம் ஜக ஜீவனேஸ்வரர் என்ற சிவபெருமான் சந்நதியும் உண்டு. பிந்துமாதவரின் பாதங்களில் கங்கை நீரைச் சொரிந்து மலர்கள் தூவி வழிபடுகிறார்கள்.

தண்டபாணி

கேதாரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்டபாணியின் சிறு ஆலயம் உள்ளது. முழங்காலுக்கு நேரே இருகைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக் கொண்டு சுவாமி குத்திட்டு அமர்ந்திருக்கிறார். கழுத்திலும், தலையிலும் ருத்ராட்சமாலைகள் உள்ளன. சிவகணங்களில் ஒருவர் இந்த தண்டபாணி. சிவபெருமானை ஆராதித்துப் பெருமை பெற்ற இவரை, பக்தர்கள் தவறாமல் வழிபட்டுச் செல்கிறார்கள்.

காலபைரவர்

காலபைரவர் ஆலயம், விஸ்வேஸ்வரர் ஆலயத்துக்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. காசிமாநகருக்கு இவரே காவல் தெய்வம் என்பர். பைரவருக்கு நாய்தான் வாகனம். அதனால், நாய்க்கு அன்னமிடுவது இங்கே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இங்கே காசிக் கயிறு மிகவும் விசேஷம். துன்பங்களை நீக்கும் ரட்சையாக இதைக் கையில் கட்டிக் கொள்கிறார்கள். இங்கே காசி என்று குறிப்பிடப்படும் ஆதிகாசியில் லிங்கமும் மூர்த்திகளும் உள்ளன. கங்கை நீரைச் சுவாமியின் மீது பொழிந்து மலர்களால் அர்ச்சிக்கிறார்கள்.குஹாம் என்பது சிறுவாசற்படி கொண்ட குகை. இந்தக் குகை வாசலில் ஜைகிஷவ்யர் என்ற முனிவருக்குச் சிவபெருமான் காட்சி தந்து சிவபதம் அருளினாராம். இந்தக்குகை வழியே கைலாசபர்வதம் செல்லலாம் என்ற ஐதீகமும் உண்டு.

இங்கே அபிஷேகம், பூஜை எதுவும் இல்லை. தரிசனம் மட்டுமே உண்டு. ஆதிகங்கை இருந்த இடம் `கங்காம்’ என்பது. இங்கே கங்கை தடாகமாக, நீர்நிலையாகக் கொலுவிருக்கிறாள். ஆதிகங்கையின் தீர்த்தத்தைப் புரோட்சணம் செய்து கொண்டால்தான் கங்கா ஸ்நான பலன் பூர்த்தியாகும் என்ற நாம்பிக்கை பலமாக வேரூன்றியுள்ளது. இங்கே பார்வதியின் பெயர் பவானி. விஸ்வநாதர் ஆலயத்தில், பார்வதி அம்மனின் உருவம் இருக்கிறது. அன்னபூரணியையும் பவானி என்றே சொல்கிறார்கள். ஆலயத்துக்கு அருகில் உள்ள கிணற்றடியில் உள்ள ஸ்ரீசக்ரமே பவானி என்று சொல்லுவதும் உண்டு. பொதுவாக காசியில் உள்ள அன்னையின் வடிவமே பவானி. மேற்குறித்தவை அனைத்தும் காசியில் உள்ள பிரதான ஆலயங்கள். காசிக்கு வருபவர்கள் இந்தக் கோயில்கள் அனைத்தையும் தரிசனம் செய்ய வேண்டியது முக்கியம்.

வராஹி அம்மன்

தசாசுவமேத கட்டத்திற்கு அருகில் உள்ளது, வராஹி கோயில். அம்பாளை இங்கே தாந்திரீக முறையில், உக்கிர ரூபத்தில் பூஜிக்கிறார்கள். நள்ளிரவில் அபிஷேக ஆராதனை தொடங்கி, விடியற்காலை மூன்று மணி அளவில் முடிந்துவிடுகிறது. காலை ஐந்தரை மணிக்குள்ளாகத் தரிசனம் முடிந்துவிடும். பகலில் தரிசனம் கிடையாது. அம்பாளை மேலே தளத்திலிருந்து நாம் தரிசிக்கலாம். பாதங்கள் மட்டுமே தெரியும் சற்றுத் தொலைவில் இருக்கும் இன்னொரு துவாரத்தின் வழியாகப் பார்த்தால், புஷ்ப வஸ்திர அலங்காரத்துடன் நின்ற கோலத்தில் தேவியை தரிசிக்கலாம்.

சங்கட நிவாரண ஆஞ்சநேயர்

அனுமன் காட்டிலிருந்து காசி இந்துப் பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் வழியில், சங்கட நிவாரண ஆஞ்சநேயர் ஆலயம் இருக்கிறது. இங்கே செந்தூரவர்ணத்தில் ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள். எதிரே ராமர் – சீதை ஆலயமும் உள்ளது. ஆஞ்சநேயர் சங்கடங்கனைத் தீர்க்க வல்லவர் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் பலரும் பல விதமான வேண்டுகோளுடன் வந்து வழிபடுகிறார்கள். இங்கே செவ்வாயும் சனியும் விசேஷமான நாட்கள்.

துர்க்கை ஆலயம்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ளது, துர்க்கை ஆலயம். அம்மனுக்குக் கனக துர்க்கை என்று பெயர். இது ஆதிசங்கர பகவத் பாதர் வழிபட்ட கோயில். துர்க்கை ஆலயத்துக்கு அருகில் இருப்பது கௌளீ மாதா ஆலயம். ஈசனைப் பிரார்த்தித்துச் சாபவிமோசனம் பெற, பார்வதிதேவி இங்கே ஊர் எல்லையில் தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கேதாரேசுவரர்

கேதரா கட்டத்தில் இருப்பது கேதாரேசுவரர் ஆலயம். இங்கு கர்ப்பக்ருகத்தில் சிவலிங்கம் இரண்டு பாகங்களாகவே காணப்படுகிறது. ஒரு பாகத்தை ஈசனாகவும், மற்றொரு பாகத்தைத் தேவியாகவும் எண்ணி வழிபடுகிறார்கள். சுவாமியைத் தொட்டும் தரிசிக்கலாம். ஆலயத்தில் அம்மன் சந்நதியும் உண்டு. அர்ச்சனை, ஆரத்தியுடன் வழிபாடு செய்கிறார்கள்.

திலபாண்டீஸ்வரர்

விஸ்வநாதர் கோயிலுக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ளது திலபாண்டீஸ்வரர் கோயில். திலம் என்பது எள் என்று பொருள்படும். அங்கே சிவலிங்கம் நாள் தோறும் எள்ளத்தனை வளர்வதாக ஐதீகம் உண்டு. இந்தக் கோயிலுள் பாதாளேஸ்வரர் என்ற சிவலிங்கம் பள்ளத்தில் இருக்கிறது. இங்கே ஐயப்பன் சந்நதியும் உண்டு.

தாரகேஸ்வரர்

விஸ்வநாதர் கோயிலுக்கு வடக்கே மகாமயானத்துக்கு அருகில் தாரகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் மானுட வடிவம் தாங்கி தாரகம் எனும் பிரணவ மந்திரத்தை இங்கே உபதேசித்து அருளுகிறார். இதே போல, வடபகுதியில் லலிதா கட்டத்தில் பசுபதீஸ்வரர் கோயில் இருக்கிறது. அதனருகே உள்ள சாதுக்கள் மடத்தில் பஞ்சமுகலிங்கம், ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வ உருவங்களைத் தரிசிக்கலாம்.

மிட்டாய்த் திருவிழா

தீபாவளி சமயத்தில் காசிநகர் முழுவதும் வண்ண அலங்காரங்களும் தோரணங்களும் கண்ணைப் பறிக்கும். தீபாவளி சமயத்தில் மூன்று நாட்கள் காசியில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் கோலாகலமாக விளங்கும். பிரசித்தி பெற்ற ‘மிட்டாய்த் திருவிழாவும்’, அன்னகூட, அன்னாபிஷேக ஆராதனைகளும் பிரமிக்க வைப்பதாகும். தங்க அன்னபூரணித் தேரோட்டம் திமிலோகப்படும். காசி வரும் லட்சோப லட்சம் பக்தர்களுக்கு ஏராளமான இடங்களில் அன்னதானம் நடைபெறும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. காசியில் மானிடர்களோ, விலங்குகளோ, பறவைகளோ உயிரை விடும் போது விஸ்வநாதர், அதனை தன் மடியிலிருந்தி அதன் செவிகளில் தாரக மந்திரத்தை ஓதுகிறார் என்று சொல்வார்கள்.

அந்தத்தாரக மந்திரம் என்பது ஓம்காரம், மகாபாக்கியம், ராமநாமம் என மூன்றையும் குறிக்கும். உத்மாச்ரம சன்னியாசிகளுக்கு ஒம்காரமும், கிரகஸ்தர்களுக்கு மகாவாக்கியமும், அறியாதவர்களுக்கு ராம நாமமும் அவர் உபதேசம் செய்கிறாராம். ஒப்பற்ற இத்தாரக மந்திரத்தினால் ஜீவன்கள் முக்தி பெறுகின்றன என்பது ஐதீகம்.காசியில் அதிக மகத்துவம் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் கோயில், சுமார் 100 – ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு கோயிலாக இருந்ததைப் புதுப்பித்து பெரியதாகவும் அழகாகவும் மாற்றியது, தமிழ் நாட்டில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மக்களே!

வருடந்தோறும் தீபாவளி அன்றும், மகாசிவராத்திரி அன்றும் தங்க விசாலாட்சி அம்மனை அந்த மக்கள், நகரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்து பொது மக்கள் புண்ணிய தரிசனம் பெற ஏற்பாடுகள் செய்கிறார்கள். விழாக் காலங்களில் தமிழக மேள தாள நாதசுரம் இசைக்கருவிகளைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

காசி மாநகரின் நான்கு எல்லைகளிலும் நான்கு ஆம்னாய தேவதைகளின் இடங்கள் உள்ளன. இவ்விடத்திலிருந்து ஆம்னாய மந்திரங்களை உச்சரித்தால் சித்தி ஏற்படும். ஸப்த கோடி மந்திரங்களும், சதுர்வேதங்களும், இருபத்தெட்டு அகமங்களும், தொண்ணூற்றாறு தத்துவங்களும், அறுபத்து நான்கு கலைகளும் இங்கு ரட்சிக்கப்படுவதாக பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறுவதைக் காசி காண்டம் கூறுகிறது. த்ரிஸ்தவி, ஸேது, க்ருத்ய கல்பதரு, ஸ்காந்த புராணத்தின் 4ம் பகுதியான காசி காண்டத்தின் (25 – 34) அத்தியாயங்கள், மத்ஸயபுராணம் (179-184), லிங்கபுராணம் (92), இவற்றில் வாரணாசி எனும் காசியின் அருமை பெருமைகள், வர்ணனைகள் எல்லாம் அதி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சைவ, வைணவ, சக்திச்க்ஷேத்திரமான காசிமா நகர், நான்கு மைல் சுற்றளவுடைய பழமையும் புதுமையும் ஒருங்கிணைந்த மிகப் பெரிய புனிதப்பதியாகும். மூவுலகத் தீர்த்தங்களும் காசியில் இருப்பதால், காசி யாத்திரையை முறைப்படி மேற்கொள்ளுவோர் மூன்று உலகெங்கிலுமுள்ள சர்வதீர்த்தப் பலன்களையும் ஏக காலத்தில் அடைந்தவராகிறார்கள்.

காசி யாத்திரையில் இறுதியாக கங்கையைப் போற்றும் பாடலும், கங்கா ஆரத்தி தரிசனமும், அவசியம் காண வேண்டும்.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்த தொகுப்பின் வாயிலாக நாம் காசிக்கு சென்று வந்த புண்ணியத்தையும், அறியப்படாத பல செய்தியினையும் சிந்தித்தது மகிழ்ச்சியே!

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post தீப ஒளியில் மின்னும் காசி appeared first on Dinakaran.

Tags : Khasi ,Manikarnika ,Diwali festival ,Sankar ,Kasi Kandam ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!