×
Saravana Stores

தெளிவு பெறு ஓம்

தினம் காக்கைக்கு உணவை வைக்க வேண்டுமா? அமாவாசைக்கு வைத்தால் போதுமா?
– பரிமளா, திருச்சி

அமாவாசைக்கு அவசியம் வைக்க வேண்டும். தினமும் வைத்தாலும் நல்லதுதான். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார் அல்லவா. எனவே காக்கைக்கு மட்டுமல்ல அணில் கிளிப்பிள்ளை போன்ற வேறு சில பிராணிகளுக்கும் நாம் உணவு தருவது நல்லது. எறும்புக்கு அரிசி மாவு போடுவது நல்லது அதற்காகத்தான் பச்சரிசி மாவு கோலம் போடுகின்றோம். “பூத யக்ஞம்” என்று இதற்குப் பெயர்.

?முன்னோர்கள் சாபம் என்று சொல்கிறார்களே, முன்னோர்கள் நமக்கு சாபம் விடுவார்களா, என்ன?
– விஷ்ணு, மதுரை.

முன்னோர்கள் சாபம் விட மாட்டார்கள். ஆனால் அவர்களை நாம் அலட்சியப்படுத்தினால் அவர்கள் மனது வருத்தம் அடையும் அல்லவா! நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார். அவரைக் கவனிக்காமல் விடுகிறோம். நம் மீது உள்ள நல்ல மதிப்பால் அவர் நம்மை ஏதும் திட்டாமல் சென்று விட்டாலும் அந்த அவமரியாதையானது அப்படித்தான் இருக்கும். அதற்கான விளைவுகள் சாபமாக மாறி நம்மைத் தாக்கும். அதைத்தான் முன்னோர்கள் சாபம், (பிதுர் சாபம்) என்று சொல்லுகின்றார்கள்.

?நாகாத்தம்மன் என்றால் என்ன பொருள்?
– சண்முகபிரியா, சென்னை.

அஷ்ட காளிகளில் ஐந்தாவதாக பிறந்தவள். அரியநாச்சி என்று பெயர். இவளே நாகாத்தம்மன் ஆகவும் நாகவல்லியாகவும் அழைக்கப்படுகின்றாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடு மனித பெண் முகத்தோடு அருள்பாலிக்கும் தாய் என்பதால் நாகாத்தம்மன் என்று அழைக்கப்படுகின்றாள். திருமணத் தடை, புத்திரப் பேற்றுத் தடை முதலிய தோஷங்களைப் போக்குபவள். நாகாத்தம்மனுக்கு பல இடங்களில் கோயில் உண்டு.

?முதலில் குருவை வணங்க வேண்டுமா? கடவுளை வணங்க வேண்டுமா?
– ரகுபதி, திருவண்ணாமலை.

இதற்கு கபீர் தாசர் அற்புதமான பதில் சொல்லுகின்றார். குருவும் இறைவனும் என் எதிரில் ஒரு சேர நின்றால் நான் முதலில் குருவைத் தான் வணங்குவேன். அவருடைய பாதங்களைத் தான் பற்றுவேன். காரணம் கடவுளை எனக்குக் காட்டி தந்தவர் என் குருநாதர் தானே! குரு கிருபை இல்லாமல் கடவுள் எப்படிக் காட்சி தருவார்? கடவுள் நமக்கு உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களையும் தருவார். ஆனால் அந்தச் செல்வங்களை எல்லாம் தருகின்ற கடவுளையே நமக்குக் காட்டித் தருபவர் குரு அல்லவா! எனவே முதல் மரியாதை குரு என்பதை வலியுறுத்தத்தான் மாதா பிதா குரு தெய்வம் என்று குருவுக்குப் பிறகு தெய்வத்தை வரிசைப்படுத்திச் சொன்னார்கள் நம்முடைய சான்றோர்கள். அருணகிரி நாதரும், முருகனை “குருவாய் வருவாய் அருள்வாய்” என்றே அழைக்கிறார்.

?ஆசையை அறுக்க முடியுமா?
– ராமமூர்த்தி, சென்னை.

ஆசை இயல்பானது. அதை ஏன் அறுக்க வேண்டும்? ஆசையை வெல்வது என்பது இயலாத காரியம். ‘‘ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று சொல்லி இருக்கிறார்களே தவிர அது அவ்வளவு எளிதான செயல் அல்ல! ஆனால் நம்முடைய சான்றோர்கள் ஆசையை அடக்குவதை விட அதனை கையாளுகின்ற திறமையை வளர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆசைகளைச் சீரமைப்பது தான் முக்கியம். ஆண்டாள் ஆசையை மடைமாற்றம் செய்து சரியான வழியில் செலுத்தும் படி நமக்குச் சொல்லுகின்றாள். அதுதான் திருப்பாவையில் வருகின்ற வார்த்தை ‘‘மற்றை நம் காமங்கள் மாற்று.’’ காமத்தை விட வேண்டாம். அதை பகவான் மீது மடை மாற்றம் செய்து பிறவிப்பயன் பெறலாம் என்றார்கள்.

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்-
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான் வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே. என்ற இராமானுச நூற்றந்தாதிப் பாசுரம் இதனை இனிது விளக்கும்.

?நம் மனது அமைதி இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
– ஜெயந்தி, திண்டுக்கல்.

நுட்பமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மனிதர்களுக்கு இருக்கக் கூடிய தன்முனைப்பும் தற்பெருமையும்தான் அமைதி இல்லாத வாழ்வுக்குக் காரணமாக அமைகின்றன. தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையே உள்ள வெறுப்பு மாறும். வெறுப்பு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும். வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நம் மனதில் பிறக்கும். இன்னும் ஒரு விஷயமும் இதில் உண்டு. நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் மனதில் அமைதி இருக்கும். பிறர் வாழ்க்கையை வாழ நினைத்தால் என்றும் அமைதி இருக்காது.

?நாம் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான அறிவுரையைக் கூற முடியும்?
– சிவக்குமார், திருநெல்வேலி.

நமது முன்னோர்களே இதற்கு வழிகாட்டி இருக்கிறார்கள். காந்திஜியின் ஒன்பதாவது வயதில் அவரது தாயார் அவருக்கு ஒரு அறிவுரையை வழங்கினார் அந்த அறிவுரையை நமது குழந்தைகள் பின்பற்றினால் போதும். ‘‘துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அவரை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால் நீ பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்போதும் உனக்கு அருள்வார்.’’ இதுதான் காந்திஜியின் அன்னை, காந்திஜிக்கு ஒன்பதாவது வயதில் சொன்ன அறிவுரை. இந்த அறிவுரை நாம் நமது குழந்தைகளுக்குச் சொல்லலாம். நாமும் பின்பற்றலாம். ஏனென்றால் பின்பற்றப்படாத வெறும் அறிவுரைகளால் பயனில்லை.

?எந்தப் பழக்கம் அடியோடு வெற்றியைப் பாதிக்கும்?
– கோமதி, சிவகங்கை.

தள்ளிப்போடும் பழக்கம் தான் ஒருவனுடைய வெற்றியை பாதிக்கும். ‘‘பிறகு பார்த்துக் கொள்ளலாம்’’ ‘‘நாளைப் பார்த்துக் கொள்ளலாம்’’ ‘‘அடுத்த மாதம்தானே, இன்னும் நாளிருக்கிறது’’ என்று வேலையைத் தள்ளிப் போடுபவர்கள், அந்த வேலையை எப்பொழுதும் செய்வதில்லை. இது ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.

?நம் பின்னால் கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதானா?
– கார்த்திக், திண்டிவனம்.

அதில் என்ன சந்தேகம்? இந்தக் கதை உங்கள் சந்தேகத்தைப் போக்கும். ஒரு குருவிடம் சீடன், ‘‘குருவே, கடவுளைக் காண முடியுமா?’’ என்று கேட்டார். ‘‘அதிலென்ன சந்தேகம்? உன் பின்னால் என்றும் கடவுள் இருக்கிறார்’’ என்றார் குரு. சீடன் குரு சொன்னதை சோதித்துப் பார்க்க நினைத்தார். ‘‘எங்கே கடவுள் பின்னால் இருக்கிறாரா, பார்ப்போமே என்று திரும்பினான். யாருமில்லை. குரு பொய் கூற மாட்டாரே என்று சீடன் திரும்பவும் பின்புறம் திரும்பி கடவுளைத் தேடினான்.

பல தடவை திரும்பினாலும் கடவுள் தெரியவில்லை பிறகு குருவிடம் சென்று” சுவாமி கடவுள் பின்புறம் இருக்கிறார் என்கிறீர்களே, நான் திருப்பிப்பார்த்தேன் என் பின்னால் அவர் இல்லையே’’ என்றான். குரு சொன்னார். ‘‘இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய். கடவுள் உன் பின்னாலேயே இருக்கிறார். நீ திரும்பும்போது அவரும் உன் பின்னால் சென்று விடுகிறார் அவ்வளவுதான் என்றார் குரு. இதுதான் உண்மை. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய அத்தனைச் செயல்களையும், ஏன் மனதையும், அவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து செயல்பட்டாலும் பேசினாலும் நமக்கு கடவுளின் அருள் நிச்சயம்.

?பிறர் மீது உள்ள தவறுகளை சுட்டிக் காட்டலாமா?
– சரண்யா, ஆரணி.

சுட்டிக்காட்டலாம். ஆனால் அதை நிஜமான மனதுடனும் பொறுப்புடனும் சுட்டிக்காட்ட வேண்டும். சுட்டிக்காட்டும் போது மனம் புண்படாமல் இனிமையாக சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு சின்னக் கதை. சொல் கின்றேன். ஒருவர் தன் வீட்டு ஜன்னல் வழியாக அடுத்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார் தன் வீட்டுக்கு வருகிறவர்களிடம் ‘‘பாருங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டைச் சரியாகவே வைத்துக் கொள்வதில்லை எங்கே பார்த்தாலும் அழுக்குத் துணிகள்… எங்கும் துடைப்பதில்லை. ஒட்டடை. சுவர் காவி காவியாகத் தொங்குகிறது பாருங்கள்’’ என்று ஜன்னல் வழியே காண்பிப்பார் அப்படிக் காண்பிக்கும் போது ஒருவர் சொன்னார். ஒரு நிமிஷம் ஒரு துணியைக் கொண்டு வாருங்கள் என்றார்.

‘‘ஏன் கேட்கிறீர்கள்?’’

‘‘காரணமாகத்தான் கேட்கிறேன் கொண்டு வாருங்கள்’’ என்று சொல்லி, அந்த துணியைக் கொண்டு ஜன்னல் கம்பிகளையும் கண்ணாடியையும் சுத்தமாகத் துடைத்தார்.‘‘இப்பொழுது பாருங்கள் பக்கத்து வீடு சுத்தமாக இருக்கிறதா?’’ இப்பொழுது அவர் பார்த்தார். பக்கத்து வீடு பளி ச்சென்று சுத்தமாக இருந்தது. அப்பொழுது சொன்னார். ‘‘அவர்கள் எப்பொழுதும் சுத்தமாகத் தான் இருக்கிறார்கள். உங்கள் வீட்டு அழுக்கு ஜன்னல் வழியாக பார்க்கும் பொழுது எல்லாம் அசுத்தமாகத் தெரிகிறது. முதலில் நீங்கள் உங்கள் ஜன்னல் கம்பிகளை சுத்தமாக துடைத்து வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

இதேதான் நம் விஷயத்திலும் நடக்கிறது. நம் மனதை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் பிறர் குற்றம் எளிதாகக் நம் கண்ணில் படாது. நம் அழுக்கு மனதோடு யாரைப் பார்த்தாலும் குற்றமாகவே தெரியும்.

?மடியில் கனமிருந்தால் வழியில் பயம் என்று ஒரு பழமொழி இருக்கிறதே எதனால் இந்தப் பழமொழி வந்தது?
– விஜயலட்சுமி, திருத்தணி.

பொதுவாக நாம் சில பொருள்களைக் காப்பாற்றுவதற்கு படாத பாடுபடுகிறோம். பொன்னோ பொருளோ நமக்கு உதவும் என்று நினைத்து, அந்தப் பொருள் வேறு யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பயத்தோடு வைத்துக் கொள்ளுகின்றோம். அந்தப் பொருள் நமக்கு ஒரு விதமான அச்சத்தைத் தந்து கொண்டே இருக்கிறது. ஒரு கதை.

கோரக்கர் என்பவர் மிகச்சிறந்த வைராக்கிய சீடர். பக்தர்.. அவர் தன்னுடைய ஆச்சாரியரான மச்சேந்திரருடன் ஒரு திருத்தல தரிசனத்திற்காகச் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் அவருடைய குரு கேட்டார். ‘‘இந்தப் பகுதியில் கள்ளர் பயம் உண்டா?’’

கோரக்கர் ஏதும் பதில் சொல்லாமல் மௌனமாகவே நடந்து வந்தார். இடையில் அவர்கள் ஒரு குளக்கரையை அடைந்தனர். குரு மச்சேந்திரர் தன்னிடம் இருந்த மூட்டையை சீடனான கோரக்கரிடம் தந்து விட்டு ‘‘இதைப் பார்த்துக்கொள். நான் காலைக் கடனை முடித்துவிட்டு வருகிறேன்’’ என்று சென்று விட்டார்.

குளக்கரையில் மூட்டையோடு அமர்த்த கோரக்கர், மூட்டையில் என்ன இருக்கிறது என்று பார்த்தார் அதில் ஒரு தங்கக் கட்டி குருவைத் திருந்தார் உடனே சற்றும் யோசிக்காத கோரக்கர் அந்தத் தங்க கட்டியை எடுத்து குளத்தில் வீசிவிட்டு மூட்டையைக் கட்டி வைத்து விட்டார். குரு வந்தவுடன் அந்த மூட்டையைத் தூக்கிக் கொண்டு மேற்கொண்டு இரு வரும் நடக்க ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று மறுபடியும் குரு கேட்டார்.

‘‘நான் இந்த வழியில் கள்ளர் பயம் இருக்கிறதா என்று கேட்டேனே, நீ ஒரு பதிலும் சொல்லவில்லையே’’ என்றார். இப்பொழுது கோரக்கர் வாயைத் திறந்து பதில் சொன்னார். ‘‘குருவே, கள்ளர் பயம் இருந்தது உண்மைதான் ஆனால் அது அந்த குளத்தோடு போய்விட்டது. இனி பயமில்லை. காரணம் நம் மடியில் கனமில்லை’’ என்றார்.

எந்தப் பொருளும் தனக்கென்று வைத்துக் கொள்ளாதவனுக்கு என்ன பயம் இருக்க முடியும்?

?சடங்குகளில் ஏன் தர்ப்பையைப் பயன்படுத்துகின்றோம்?
– குமார், திருவனந்தபுரம்.

எத்தனையோ காரணங்கள். அதில் ஒரு காரணம். வித்து இல்லாமல் இருப்பது ஆன்மா. ஒரு உடலை உருவாக்கத்தான் வித்து வேண்டுமே தவிர, அந்த உடலுக்குள் உள்ள ஆன்மா வித்து இல்லாதது. நிரந்தரமானது. ஞானமயமானது என்று வேத வேதாந்தங்கள் கூறுகின்றன. அப்படி வித்து இல்லாமல் முளைக்கின்ற புல் தர்ப்பை புல். அதற்கு விதை இட வேண்டியது இல்லை. தானாக முளைக்கும். எனவே தானாகத் தோன்றிய ஆன்மா குடியிருக்கும் உடலுக்கான பல விதமான சம்ஸ்காரங்களை, தானாகத் தோன்றிய புல்லைக் கொண்டு செய்கிறோம்.

?பக்தி என்பது என்ன?
– செல்வி, தூத்துக்குடி.

இதற்கு பாரதியார் அபாரமான விளக்கம் தருகின்றார். பக்தி என்பது தெய்வத்தை நம்புதல் என்று ஒரு விளக்கத்தைத் தந்த அவர், அந்த நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பல உதாரணங்களோடு விளக்குகின்றார். குழந்தையானது தாயை நம்புவது போலவும், ஒரு பதிவிரதை தன் கணவனை நம்புவது போலவும், பார்க்கின்ற பொருள்களை கண்கள் நம்புவது போலவும், தன்னைத் தானே நம்புவது போலவும் இறைவனை நம்புவது தான் பக்தி என்று விளக்கம் அளிக்கின்றார் பாரதி.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம் appeared first on Dinakaran.

Tags : Om ,New Moon ,Parimala ,Bharati ,
× RELATED வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்