திருப்போரூர், ஜூலை 22: திருப்போரூரில் மண்ணால் சூழ்ந்து காணப்படும் பிரணவமலை குடிநீர் கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் உள்ள பிரணவமலையின் மீது பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த மலைக்கோயிலுக்கு செல்ல ஓஎம்ஆர் சாலையில் பிரணவமலைக்குச் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயிலை ஒட்டி தர்ம சத்திரத்திற்குச் சொந்தமான கிணறு ஒன்றும் உள்ளது.
இந்த, கிணற்றில் மோட்டார் மற்றும் குழாய் பொருத்தப்பட்டு பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கும், திருப்போரூர் அரசு தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் அண்மையில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த மண்ணை இந்த ஒப்பந்த பணிகளை செய்தவர்கள் கிணற்றை சுற்றி கொட்டி விட்டனர். இதன் காரணமாக கிணற்றுக்குள் மண் சேர்ந்து விட்டது.
இதனால், பள்ளிக்கும், பிரணவமலை கோயிலுக்கும் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த கிணற்றை சுற்றி கொட்டி வைத்துள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்றும், கிணற்றுக்குள் கொட்டி உள்ள மண்ணை தூர்வாரி கோயிலுக்கும், பள்ளிக்கும் தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post திருப்போரூரில் மண் சூழ்ந்து காணப்படும் பிரணவமலை குடிநீர் கிணற்றை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.