×

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மையம் வாரியாக ரிசல்ட் வெளியீடு: குஜராத், ராஜஸ்தான் ‘நீட்’ தேர்வு மையத்தில் மெகா மோசடி

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட் தேர்வு மையம் வாரியாக ரிசல்ட் வெளியான நிலையில், குஜராத், ராஜஸ்தான் மாநில தேர்வு மையத்தில் அதிக மோசடிகள் நடந்துள்ளது. குஜராத்தில் ஒரே மையத்தில் மட்டும் 70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்த 24 லட்சத்து 6,079 பேரில் 23 லட்சத்து 33,297 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இதுதவிர நேரக் குறைபாடு சிக்கல்களை முன்வைத்து 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்த கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் நீட் மறுத்தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 813 பேர் மட்டுமே எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்டன. எனினும், வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தமனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தகுதித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த கோரியும், நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையான நேரடி விசாரணை நடத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதேநேரம் நீட் தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக தேர்வு முடிவுகளை மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையேற்று நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத 1 லட்சத்து 58,449 மாணவர்கள் வரை விண்ணப்பித்தனர். அதில் 1 லட்சத்து 52,920 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 89,426 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான புள்ளி விவரங்களில் 1 லட்சத்து 53,357 பேர் தான் தேர்வெழுதினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 437 மாணவர்களின் விபரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதேபோல், வேறு சில மாநிலங்களின் புள்ளி விபரங்களிலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவில் வெளியான தரவுகளை ஆய்வு செய்யும் போது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் சிகார் ஆகிய தேர்வு மையத்தில் (ஆர்.கே. பல்கலைக்கழகம் – மைய எண். 22701) தேர்வெழுதியவர்கள் அதிகப்பட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜ்கோட்டில் தேர்வெழுதிய மொத்த மாணவர்களில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மையத்தில் 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் 700 மதிப்பெண்களும், 115 மாணவர்கள் 650 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 259 மாணவர்கள் 600 மதிப்பெண்களும், 403 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இம்மையத்தில் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,968; இதில் 1,387 மாணவர்கள் நீட் தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதாவது, இந்த ஒரு மையத்திலிருந்து மட்டும் ஏறக்குறைய 70%க்கும் அதிகமான மாணவர்கள் நீட் தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மையங்களையும் விட அதிகமாக உள்ளது. நாட்டிலேயே ராஜ்கோட் மையத்தில் மட்டுமே 700 மதிப்பெண்களுக்கு மேல் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் சென்டரில் 12 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக, குஜராத்தில் மட்டும் 700 மதிப்பெண்களுக்கு மேல் 122 மாணவர்கள் பெற்று உள்ளனர். அவர்களில் 19 பேர் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதேபோல் ராஜஸ்தானின் சிகாரில் உள்ள வித்யாபாரதி பள்ளி மையத்தில் தேர்வெழுதியவர்களில் 8 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 650 மதிப்பெண்களுக்கு மேல் 69 பேரும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 155 பேரும், 550 மதிப்பெண்களுக்கு 241 பேரும் பெற்றுள்ளனர். குருகுல் இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வெழுதிய 715 மாணவர்களில், 700 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 650 மதிப்பெண்களுக்கு மேல் 63 பேரும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 132 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 181 பேரும் பெற்றுள்ளனர். சிகார் பகுதியில் மட்டும் 50 மையங்களில் இருந்து 149 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 482 ஆக உள்ளது. இதில் 149 மாணவர்கள் சிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகபட்ச தேர்ச்சியாகும். இதைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 205 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள கேரளாவில் 194 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 184 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிக்கிய ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் ஒயாசிஸ் பப்ளிக் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களில் 22 மாணவர்கள் மட்டுமே 600 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அதேபோல் சர்ச்சைக்குரிய அரியானாவின் ஹர்தியால் அரசுப் பள்ளி தேர்வு மையத்தில் ஒரு தேர்வர்கூட 720க்கு 720 பெறவில்லை. அந்த மையத்தில் தேர்வெழுதியவர்களின் அதிகபட்ச மதிப்பெண் 682 ஆக உள்ளது. அவர்களில் 13 பேர் மட்டுமே 600க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால் நீட் முறைகேடுகள் பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகளவில் தேர்ச்சி உள்ளதால், அங்கு அதிகளவில் முறைகேடுகள் நடந்திருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நீட் தேர்வு சர்ச்சை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளி விபரங்களுக்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மாணவர் விதுஷி சர்மா உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘நீட் தேர்வு முடிவுகளை நகரம் மற்றும் தேர்வு மையத்தின் அடிப்படையில் மாணவர்களின் ‘ரோல்’ எண்ணுடன் வெளியிட வேண்டும். தேர்வர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ரோல் எண்ணுடன் வெளியிட்டால், தரவுகளை பகுப்பாய்வு செய்ய எளிதாக இருக்கும். ரோல் எண்களுக்கு பதிலாக, டம்மி எண்கள் (வரிசை எண்) குறிப்பிட்டு இருப்பதால் குழப்பம் அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நீட் முறைகேடுகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையானது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக சனிக்கிழமை (ஜூலை 20) பகல் 12 மணிக்குள் வெளியிட வேண்டும். அவ்வாறு முடிவுகளை வெளியிடும்போது, தேர்வர்களின் அடையாளங்களை மறைத்து வெளியிட வேண்டும். தேர்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தவும், முறைகேடு நடைபெற்ற மையங்களில் தேர்வெழுதியவர்கள் வேறு இடங்களில் எழுதியவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறியவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (நாளை) ஒத்திவைத்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளதால், நாளைய விசாரணையின் போது முக்கிய உத்தரவுகள் வெளியாக வாய்ப்புள்ளது.

சிகாரில் 600 மதிப்பெண்ணுக்கு மேல் 4,200 ேபர்
நாடு முழுவதும் மொத்தம் 30,204 மாணவர்கள் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 27 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். அவர்களில் 4,200க்கும் மேற்பட்டோர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிகார் பகுதி மையங்கள் ஒவ்வொன்றிலும் தலா 75க்கும் மேற்பட்ட தேர்வர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். சில மையங்களில் இந்த எண்ணிக்கை 150ஐ எட்டியுள்ளது. இது தேசிய சராசரியை விட மிக அதிகமாகும். எடுத்துக்காட்டாக, ஆரவலி பப்ளிக் பள்ளியில் உள்ள ஒரு மையத்தில், 942 தேர்வர்களில், 90க்கும் மேற்பட்டோர் 600க்கு மேல் மதிப்பெண்களும், ஏழு பேர் 700க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மோடி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மையத்தில் 110க்கும் மேற்பட்டோர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். விஸ்வ பாரதி முதுநிலை கல்லூரி மையம், தாகூர் முதுநிலை கல்லூரி மையம், ஆரிய முதுநிலை கல்லூரி மையம், சன்ரைஸ் இன்டர்நேஷனல் பள்ளி மையம், பிபிஎஸ் கான்வென்ட் பள்ளி மையம், குருகுல் இன்டர்நேஷனல் பள்ளி மையம், ஸ்ரீ மங்கள் சந்த் தேவனியா வித்யா மையத்தில் தேர்வெழுதியவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

‘கோச்சிங் பேக்டரிகள்’
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தான் நீட் தேர்வின் பயிற்சி மையங்கள் அதிகளவில் செயல்படுகின்றன. சிகார் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம், அங்குள்ள ‘கோச்சிங்’ சென்டர்கள் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாடர்ன் ஸ்கூல், கேரளாவின் கோட்டயத்தின் சின்மயா வித்யாலயா, குஜராத்தில் ராஜ்கோட்டில் உள்ள யூனிட்-1 இன்ஜினியரிங் பள்ளி, அரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள மாடல் ஸ்கூல் போன்றவற்றில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் யாவரும், ‘கோச்சிங் பேக்டரிகள்’ என்று கூறப்படும் மையங்களில் படித்தவர்கள் ஆவர். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ெசன்னை ஐஐடி தாக்கல் செய்த அறிக்கையில், குறிப்பிட்ட பகுதியில் செயல்படும் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு, நீட் பயிற்சி வகுப்புகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மையம் வாரியாக ரிசல்ட் வெளியீடு: குஜராத், ராஜஸ்தான் ‘நீட்’ தேர்வு மையத்தில் மெகா மோசடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Gujarat, Rajasthan ,New Delhi ,NEET ,Gujarat ,Rajasthan ,BJP ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...