- திருநல்லூர் அஷ்டபுஜ்கலி
- திருநல்லூர் அஷ்டபுஜகழி
- காளி
- திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
- நல்லூர் அஷ்டபுஜமாகாளி
- தல புராணம்
- திருநல்லூர் அஷ்டபுஜ்கலி
திருநல்லூர் அஷ்டபுஜகாளி
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள பிராகாரத்தில்தான் இந்த காளி வீற்றிருக்கிறாள். இவளை நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்பார்கள். இக்கோயில் பிரளயத்தில்கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதுபோல, இத்தலத்திலும் காளி பேரழகாக வீற்றிருக்கிறாள். காளி என்றாலே கோரமுகமும். ஆவேசமும் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக அமர்ந்திருக்கிறாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக்கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள் கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது.
திருப்பரங்குன்றம் வெயிலுகந்த காளி
அது திருமலை நாயக்கர் காலம். மதுரை முழுவதும் அம்மைநோய் தாக்கியிருந்தது. நிறைய மக்கள் இறந்தனர். அரசர் செய்வதறியாது திகைத்தார். அப்போதுதான் வெயிலுகந்த காளியம்மனுக்கு நாடகம் நடத்தி விழா கொண்டாடினால் நோய் தீரும் என்றார்கள். திருமலை நாயக்கர் வலையன் குளம், நல்லர் என்ற இரு கிராமங்களிலிருந்து அழைத்து வந்து கூத்து நடத்தினார். உடனேயே மதுரையில் அம்மை நோயின் தாக்கம் உடனடியாக குறைந்தது.
இன்றும் இக்கோயிலில் அம்மை நோயிலிருந்தும் சகல பிரச்னைகளுக்கும் வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். பெண்கள் திருவிழாக்காலங்களில் காவடி எடுத்தல், தீச்சட்டி தூக்கி வருதல், மஞ்சள் ஆடை, வேப்பிலை தாங்கி ஈர உடையுடன் வந்து வணங்குகின்றனர். திருப்பரங்குன்றம் தென் கண்மாய் ஓரத்தில் ரயில் பாதைக்கும் சாலைப் போக்குவரத்துப் பாதைக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அர்ஜுனனுக்கு தனிக்கோயில்
வைணவத்திருப்பதியான பார்த்தன் பள்ளி திருநாங்கூர் திவ்ய தேசங்களில் ஒன்று. அர்ஜுன் கண்ண பிரானிடம் ஞான உபதேசம் பெற்ற தலம். அர்ஜுனனுக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது. அர்ஜுனன் துளசி மாலையுடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் மூலவர், உற்சவர் இருவருமே ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி என்று மூன்று தேவியர்களுடன் காட்சியளிப்பது இங்கு மட்டும்தான்.
வலி தீர்க்கும் கலி தீர்த்த ஐயனார்
முத்துப் பேட்டை வேதாரண்யம் சாலையின் வடக்குத் திசையில் கோடியக்கரைக்கு 10.கி.மீ. முன்பாக ‘‘கலி தீர்த்த அய்யனார்’’ ஆலயம் மிக அற்புதமாக, பல வண்ணக் களஞ்சியமாக எழில்புற அமைந்துள்ளது. எங்குப் பார்த்தாலும் மனித சிலைகள். குதிரையுடன் வீரர்கள் சிலைகள். இங்கே, ‘‘கலி தீர்த்த அய்யனார்’’ சுயம்புவாகத் தோன்றி, வேண்டி வந்தோரின் இன்னல்களை தீயசக்திகளை களைந்தெறியும் கண்கண்ட தெய்வமாக, கலியுக மூர்த்தியாக அருள்மழை பொழிகின்றார். வீரனார், லாடசாமி, பெரியாச்சி என்று பரிவார தேவதைகளும் உள்ளனர். கலி தீர்த்த அய்யனார் நம் வலியை நிச்சயம் தீர்ப்பார்.
மண்ணே பிரசாதம்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கே நடுநாயமாக விளங்கும், நாகராஜர் திருக்கோயிலில், மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகின்றது. சர்ப்ப வழிபாட்டுக்கென்றே தனித் திருக்கோயிலாக விளங்கும் இங்கு ஆவணி ஞாயிறு தோறும் பக்தர்கள் அலை அலையாய் வந்து நாகராஜரைத் தரிசித்து செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் என்று வழங்கப்படுகின்ற சங்கரன் கோயிலிலும் மண் பிரசாதமாக வழங்கப்படுவதுடன் ஆடி மாதம் நிகழ்கின்ற தபசுக் காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சங்கரநயினார் கோமதி அம்மனின் திருவருளை ெபற்றுச் செல்கின்றனர்.
சச்சிதானந்தம்
வயலூர் திருத்தலத்தில் இறைவனான ஆதிநாதர் சத்தி (சக்தி) நிலையையும், அன்னை உமையவள் சித்து நிலையையும், முருகப்பெருமான் ஆனந்த நிலையையும் கொண்டிருப்பதால் இத்திருத்தலம் சச்சிதானந்த (சத் + சித் + ஆனந்தம்) திருத் தலம் என போற்றப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் மூழ்கி எழ, பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளும் பொய்யாமொழி விநாயகரின் பேரருளாலேயே அருணகிரிநாதர் திருப்புகழை பாடினார் என்கிறார்கள்.
தொகுப்பு: ஜெயசெல்வி
The post திருநல்லூர் அஷ்டபுஜகாளி appeared first on Dinakaran.