×

குற்றவியல் வழக்குகளில் இருந்து ஆளுநருக்கு விலக்கு அளிக்கும் சட்டம்: ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுடெல்லி: மேற்குவங்க ஆளுநர் மாளிகையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டப்படி குடியரசு தலைவர் அல்லது ஒரு மாநில ஆளுநருக்கு எதிராக அவரது பதவி காலத்தில் எந்த நீதிமன்றத்திலும் குற்றவியல் வழக்கு தொடர முடியாது. இந்நிலையில் ஆனந்த போசுக்கு எதிரான பாலியல் புகார் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட கோரி பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் குற்றவியல் விசாரணைகளில் இருந்து ஆளுநருக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 361ஐ ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் விசாரணைகளில் இருந்து ஆளுநர்களுக்கு விலக்கு அளிக்கும் 361வது சட்டப்பிரிவை ஆய்வு செய்ய ஒப்புதல் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு மீது மேற்குவங்க அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பையும் சேர்க்க மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.

 

The post குற்றவியல் வழக்குகளில் இருந்து ஆளுநருக்கு விலக்கு அளிக்கும் சட்டம்: ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,GOVERNOR ,C. ,President of the Republic ,Dinakaran ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...