×

அருணாச்சலபிரதேச எல்லை அருகே சீனா கட்டும் மெகா அணை: பா.ஜ எம்எல்ஏ கவலை

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்திற்கு அருகே சீனாவால் கட்டப்பட்டு வரும் மெகா அணையால் மாநிலத்தில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று பா.ஜ எம்எல்ஏ நினோங் எரிங் கவலை தெரிவித்து உள்ளார். அருணாச்சலபிரதேச மாநிலம் சீனா எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி சீனா ஊடுருவி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள மெடோக் பகுதியில் சீனா மிகப்பெரிய அணை கட்டி வருகிறது. யர்லுங் சாங்போ ஆற்றில் இந்த அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆறு அருணாச்சலில் சாங்போ ஆறு என்றும், அசாமில் பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தான் 60 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மெகா அணையை சீனா கட்டி வருகிறது. இதுகுறித்து அருணாச்சல் சட்டப்பேரவையில் பா.ஜ மூத்த எம்எல்ஏவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நினோங் எரிங் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று பேசிய நினோங் எரிங், ‘நம் அண்டை வீட்டாரை(சீனா) நம்ப முடியாது. அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. நதிநீர் முழுவதையும் திசை திருப்பலாம். சியாங் ஆற்றில் ஒரே நேரத்தில் தண்ணீரை விடுவித்தால் முன்னெப்போதும் இல்லாத வெள்ளம் அருணாச்சலில் அழிவை ஏற்படுத்தும். இந்த அணையை சீனா கட்டுவது இந்தியாவை மட்டுமல்ல, வங்கதேசத்தையும் பாதிக்கக்கூடும். மக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் நாம் சமரசம் செய்ய முடியாது. நமது குறிக்கோள் ‘தேசம் முதலில்’ என்று இருக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் சிந்திக்க வேண்டும். எனவே அப்பகுதியில் வெள்ளத்தைத் தடுக்க நீர்த்தேக்கத் திறன் கொண்ட அணைகளை நாமும் கட்ட வேண்டும்’ என்று பேசினார்.

 

The post அருணாச்சலபிரதேச எல்லை அருகே சீனா கட்டும் மெகா அணை: பா.ஜ எம்எல்ஏ கவலை appeared first on Dinakaran.

Tags : China ,Arunachal Pradesh ,BJP MLA ,Itanagar ,Ninong Ering ,Dinakaran ,
× RELATED சீனாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி