×

துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தாய் கைது

புனே: நிலத்தகராறில் சிலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தாய் மனோரமா போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சியில் இருந்த போது தனிஅறை மற்றும் கேபின் கேட்டு சர்ச்சையில் சிக்கினார். சட்டவிரோதமாக தனது காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியதால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரது பயிற்சியை நிறுத்தி வைத்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், பூஜா கேத்கரின் தாய் மனோரமா மற்றும் தந்தை திலீப் கேத்கர் ஆகியோர் புனேவில் முல்ஷி தாலுகாவில் உள்ள தத்காலி கிராமத்தில், நிலத்தகராறில் சிலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மனோரமா, திலீப் கேத்கர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதனையறிந்த அவர்கள் தலைமறைவாக இருந்தனர். இவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள மகாத் என்ற இடத்தில் வைத்து பூஜா கேத்கரின் தாய் மனோரமா நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தாய் கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Pooja ,Pune ,Pooja Kethkar ,Manorama ,Dinakaran ,
× RELATED போலிச் சான்றிதழ் விவகாரம்: பூஜா கேட்கர் ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கம்