×

‘‘நன்மைப் பொருள்’’

‘‘மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும்
நன்மைப் பொருள் போலும்’’
என்பது திருவண்ணாமலையாரைப் போற்றிய தென்தமிழ் திருஞானசம்பந்தர் வாக்கு.

‘மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவரான சிவபெருமான் பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் அழியாது காக்கும் நன்மையைக் கருதியதான ‘நன்மைப் பொருளாகும்’.

பரமானந்தத்தை அனுபவித்துக் கொண்டு எப்போதும் இறை நிலையிலேயே இருப்பவர்கள் மகான்கள். சாதாரண மக்களைப் போல உருவத்தில் காணப்பட்டாலும் அவர்களின் உள்ளம் இறை அனுபவத்தின் ஆனந்தத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும். மனித இயல்பிற்கு அப்பாற்பட்டதாகவும் இயற்கையில் நிகழ முடியாதவைகளாகவும் கருதப்படும் அற்புதங்களை தம் இறைசக்தியின் மூலம் நடத்திக் காட்டுகின்றனர்.

இத்தகைய தூய்மை நிலையிலுள்ள மகான்களைக் கண்டு, தமது பாவத்தை இறக்கி வைப்பதற்கென்றே பாவப்பட்ட ஆன்மாக்கள் வருகின்றன. மகான்களும் அந்த ஆன்மாக்களை உய்வடையச் செய்யும் பொருட்டு அந்த ஆன்மாக்களின் துன்பங்களைத் தம் துன்பங்களாக (Vicarious Suffering) ஏற்றுக் கொண்டு, ‘நன்மைப் பொருளாக’ நல்வாழ்வு அளிக்கின்றனர்.

சாதாரணமாகவே, தீயவர்கள் கையினால் உணவு உண்ணக் கூடாது என்பார்கள். அவர்களின் இயல்பு உண்போரையும் சார்ந்து விடும். தீயவர்கள் தரும் பொருள்கள் வழியாக அவர்களின் எண்ணங்கள், நல்ல செயல்களைச் செய்யும்
நல்லோரையும் பாதித்து விடும்.

சிவபெருமானின் தோழனாய் இருந்தும் குபேரன் தவறான வழியில் வந்த பாவப் பொருள்களைப் (பணத்தை) பார்த்த பாவத்தால் கண் குறைபாடு உள்ளவன் ஆனான் என்று மீயுயர் கற்பனையாக திருச்செந்தூர் தலபுராணம் கூறும். ஒருவரின் பாவத்தை மற்றவர் ஏற்றுக் கொள்வதால் அவரது வினைப்பயன் ஏற்றுக் கொண்டவரைச் சாருகிறது. பக்குவப்பட்ட உயர்ந்த நிலையில் இருக்கும் மகான்கள் மட்டுமே அதை ஏற்றுக் கொண்டு அதனை நிவர்த்தி செய்ய இயலும்.

எல்லோருடைய பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும் புனிதநதிகள் கூட இத்தகைய ஞானிகளையும் மகான்களையும் தேடிக் கொண்டேயிருக்கின்றன. மகான்களின் கால் பட்ட நொடியிலேயே புனிதநதியின் பாவங்கள் அனைத்தும் தீயில் இட்ட சருகுகள் போல பொசுங்கி சாம்பலாகி விடுகின்றன. அதன்மூலமாக மகான்கள் புனிதநதிகளை புனிதப்படுத்தி விடுகின்றனர் என்பது உயர்ந்தோர் வாக்கு.

ஒரு சமயம் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை, வெண்குஷ்டம் கொண்ட ஒருவன் தரிசிக்க வந்தான். அவன் பகவானிடம், ‘என் வெண்குஷ்டத்தை தங்கள் கையால் தடவி விட்டீர்கள் என்றால் என் நோய் தீர்ந்து விடும்’ என்று மனமுருகி வேண்டிக் கேட்டுக்கொண்டான். பகவானும் அவன் மேல் இரக்கம் கொண்டு ‘அது அம்பிகையின் திருவுளமானால் உன் பிணி நீங்கட்டும்’ என்று தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! அந்நோய் அவனிடத்திலிருந்து அப்பொழுதே நீங்கிவிட்டது. அவனுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், அன்று முழுவதும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கையில் பெரும் வலி உண்டாகி அவரை வருத்தியது. அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர், ‘அவனது நோய் தீர்ந்தது; ஆனால் அவனுக்குரிய துன்பம் இவ்வுடலைப் பற்றியது’ என்று முகம் மலரக் கூறினார்.

பகவான் பாபாவை அவரது உடலோடு மட்டும் தொடர்புபடுத்தி அவரை ‘வெறும் மனிதரே’ என்று கூறுவது மிகத் தவறான செயலாகும். ‘‘நான் சீரடியிலும் எல்லா இடங்களிலும் வசிக்கிறேன். ஆகாயம் முழுவதும் நானே நிரம்பியுள்ளேன்’’ என்று அடிக்கடி கூறுவார்.

‘‘நான் உனக்குள் இருக்கிறேன். எனக்குள் நீ இருக்கிறாய்.நீங்கள் இவ்வாறே தொடர்ந்து நினைக்கப் பழக வேண்டும். பின்னர் அதை அனுபவத்தில் உணர்வீர்கள்’’ என்பதே அவருடைய மிகச் சிறந்த போதனையாகும். ‘‘அவருடைய சக்தி மட்டுமே அவரைப் பிறரின் அன்புக்குரியவராக்கவில்லை. அத்தகைய சக்தியோடு அவர் காட்டிய அன்பு மிகுந்த அக்கறை, சீரடியை உண்மையான சொர்க்கமாகவே ஆக்கிவிட்டது. அங்கு சென்றவுடனே நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், நமக்கு எதுவும் எந்தத் தீங்கும் வராது என்பதையும் உணரலாம். பாபாவின் முன்னிலையில் நாம் அமர்ந்த வுடனே நமது வலிகளையும், கவலைகளையும், பொறுப்புகளையும் ஏன் நம் உடலையே மறந்து விடுகிறோம்.’’

பாபாவின் அன்பு ஆயிரம் தாயன்பு போன்றது; விசித்திரமானது; பற்றில்லாதது; இணையில்லாதது. தமது அடியவர்களிடம் எப்பொழுதும் மிகுந்த அன்பு கொண்டு அவர்களின் நன்மைக்காகவும் அவர்களின் நலத்திற்காகவும் உழைத்தார். தாங்க முடியாத பயங்கர வலிகளை எல்லாம் பக்தர்களுக்காக தாமே பலமுறை தாங்கிக் கொள்வார். எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் கருணை அப்படிப்பட்டது.

அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி தன் மகனுடன் சீரடிக்கு வந்து பாபாவை தரிசனம் செய்ய சில நாள்கள் தங்கியிருந்தாள். அப்போது அவளது மகனுக்கு அதிக காய்ச்சல் வந்து அது நெறிகட்டி பிளேக் கட்டிகளாகப் பெரிதானது. அவள் பயந்து போய் மிகவும் மனவேதனையடைந்தாள். எனவே, சீரடியை விட்டுக் கிளம்பி மகனுக்கு வைத்தியம் செய்வதற்காக அமராவதி கிளம்ப தீர்மானித்தாள். பாபா வழக்கமாக நடந்து வரும் மாலை வேளையில் வாதாவுக்கு அருகில் வந்து கொண்டிருக்கையில், ‘தன் மகன் பிளேக்கால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவசரமாக அமராவதி செல்ல வேண்டும்’ என்று நடுங்கும் குரலில் பாபாவிடம் தெரிவித்தாள். பாபா அவளிடம், அன்பாகவும், கருணையுடனும், ‘வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது. அவைகள் உருகி ஓடிவிடும். எல்லாம் இலகுவாகவும் தூய்மையாகவும் ஆகிவிடும்’ என்று கூறினார். இவ்வாறு கூறிக் கொண்டே தமது கப்னியை இடுப்பு வரை தூக்கி முட்டையளவு உள்ள பிளேக் கட்டிகளைக் காண்பித்து, ‘பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எப்படி கஷ்டப்படுகின்றேன். அவர்களின் கஷ்டங்கள் எல்லாம் என் கஷ்டங்களாகும்’. என்று சொன்னார்.

இந்த அசாதாரணச் செயலை (லீலையை) சீரடி மக்கள் பார்த்து, வியந்து, அவதார புருஷர்கள் தங்கள் அடியார்களின் துன்பங்களைத் தாங்கி அவர்களை காப்பாற்றுகிறார்கள் என்பதில் உறுதியடைந்தனர். அடியவர் துயரை தானே ஏற்று வாழ்வையருளும் வள்ளலாக பாபா திகழ்கிறார்.

1910 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று பாபா துனிக்கு (அக்னி குண்டம்) அருகில் அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார். நன்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் துனியில் விறகுகளைத் தள்ளிக் கொண்டேயிருந்தார். திடீரென்று விறகுக்குப் பதிலாக துனியில் பாபா தம் கையை விட்டார். அது உடனே தீயில் வெந்து கருகிவிட்டது. இதனைக் கவனித்த மாதவனும், மாதவராவ் தேஷ்பாண்டேயும் உடனே பாபாவின் பக்கத்தில் சென்றனர். மாதவராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து பின்னுக்குப் பாபாவை இழுத்தார் ‘தேவா! ஏன் இப்படி செய்தீர்கள்’ என்று கேட்டார். உடனே பாபா அமைதியாக ‘‘தொலை தூரத்தில் உள்ள இடத்தில் கொல்லன் ஒருவனுடைய மனைவி உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
அப்போது கணவன் அவளைக் கூப்பிடவே அவள் இடுப்பில் தன் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பதை மறந்தவளாய், திடீரென்று திரும்ப, குழந்தை உலையில் விழுந்துவிட்டது. நான் உடனே என் கையில் தாங்கிப் பிடித்து குழந்தையைக் காப்பாற்றினேன். என் கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. குழந்தையைக் காப்பாற்றியதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று சொன்னார். பாபாவே பரம்பொருளாய் நிகழ்த்திய அற்புதம். இந்நிகழ்ச்சியை ‘‘கும்பகாரக்னி ஷிஷு த்ராத்ரே நம: – கொல்லனின் குழந்தையை நெருப்பிலிருந்து காப்பாற்றிய ஸ்ரீ ஸாயி நாதருக்கு வணக்கம்’’ என்று ஸ்ரீ ஸாயி ஸஹஸ்ரநாமம் கூறுகிறது.

மாதவராவிடம் பாபாவின் கை இப்படியாகி விட்டது என்று கேட்ட நானா சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த டாக்டர் பரமானந்தை பாபாவின் கைக்கு வைத்தியம் பார்க்கக் கூட்டி வந்தார். ஆனால் பாபா அதை மறுத்துவிட்டார். டாக்டர் பரமானந்த் எவ்வளவு கேட்டும் பாபா,கைக்கு மருந்துகள் பயன்படுத்த அனுமதியளிக்கவில்லை. ஆனால் அந்தக் கையின் மீது நெய் தடவ பாகோஜி என்ற குஷ்டரோக அடியவரை பாபா அனுமதித்தார். குஷ்டரோகத்தால் பாகோஜியின் கைகள் சுருங்கி, உடம்பு முழுவதும் சீழ் வடிந்து நாற்றமடித்த போதிலும் அவர் தினந்தோறும் பாபாவின் கைக்கு நெய் தடவி வந்தார் என்றால் பாபாவின் கருணையை என்னவென்பது. அடியார்கள் மீதுள்ள அன்பின் காரணத்தாலே பாகோஜியின் சேவையை உபாசனையாக மாற்றிக் கொடுத்தார் பாபா. பாபாவின் மஹாசமாதி வரை பாகோஜிக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. காயம் ஆறிய பின்பும் பாகோஜி அதனைத் தொடர்ந்து செய்ய அனுமதியளித்து, பாகோஜியின் குஷ்டரோகத்தையும் நீக்கினார் பாபா.

தம்மிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு சரணடைந்தோரை உய்வித்திடவே ஸத்குருமார்கள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றனர். பாவத்தின் பயனை அனுபவத்தே தீர வேண்டும் என்ற விதிமுறையில், அப்பாவத்தின் பயனை குருமார்கள் ஏற்றுக்கொண்டு ஆன்மாக்களுக்கு இன்றும் நல்வழி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறு இறைவன் உலக உயிர்களுக்காக விடத்தை தன் கண்டத்தில் வைத்து உலக உயிர்களைக் காப்பாற்றினாரோ அதைப்போலவே மகான்களும் தம்மைச் சார்ந்த ஆன்மாக்களுக்கு அவர்களின் துன்பத்தை ஏற்று நன்மை செய்கின்றனர். இதுவே திருஞானசம்பந்தப் பெருமான் கூறியருளிய ‘நன்மைப் பொருள்’. அந்த நன்மைப் பொருளை நாளும் அருளும் பரம்பொருளாம் பகவான் பாபாவின் திருவடிகளே சரணம்.

The post ‘‘நன்மைப் பொருள்’’ appeared first on Dinakaran.

Tags : Thirugyansamander ,Tiruvannamalai ,Shivaberuman ,Mediterranean ,
× RELATED தொடர் விடுமுறை நாட்களால்...