×

தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் இந்து-முஸ்லிம் மொகரம் பண்டிகை கொண்டாட்டம்

 

வல்லம், ஜூலை 18: தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூரில் விரதம் இருந்து இந்து மக்கள் மொகரம் பண்டிகையை கொண்டாடினர். தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதுார் கிராமத்தில், பெரும்பான்மையாக இந்து மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை கிராம விழாவாக அக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மொகரம் பண்டிகையையொட்டி காசவளாநாடு புதூர் கிராம மக்கள் விரதம் இருந்தனர். மேலும் ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் அல்லாசாமி என்றழைக்கப்படும், உள்ளங்கை உருவம் கொண்ட பொருளை, தனியாக அமைத்து பந்தல்போட்டு தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதிவழிபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக எடுத்து வந்தனர். அப்போது வீடுகள் தோறும் புதுமண் கலயம், புது பாத்திரங்களில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து கிராம மக்கள் அல்லா சாமியை வரவேற்றனர். ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை மாலை மற்றும் பட்டுதுண்டு போர்த்தி வழிபாடு நடத்தினர். பின்னர் நேற்று அதிகாலை மீண்டும் செங்கரையில் சாவடிக்கு அல்லா சாமியை துாக்கி வந்தவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ மிதித்து வழிபட்டனர். இந்த கிராம மக்கள் தங்களின் முன்னோர்கள் வழிகாட்டுதல்படி தொடர்ந்து சுமார் 300 ஆண்டுகளாக மொகரம் பண்டிகையை விரதம் இருந்து கொண்டாடி வருகிறோம்.

The post தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் இந்து-முஸ்லிம் மொகரம் பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Hindu-Muslim Mogaram festival ,Thanjavur, Orathanadu ,Vallam ,Hindus ,Mogaram festival ,Budur ,Kasavala Nadu ,Thanjavur ,Kasavalanadu Pudhar ,Mogaram ,
× RELATED அப்பாவின் அந்த வார்த்தை இன்று குழந்தைகளை மீட்க உதவுகிறது!