×
Saravana Stores

அப்பாவின் அந்த வார்த்தை இன்று குழந்தைகளை மீட்க உதவுகிறது!

நன்றி குங்குமம் தோழி

‘‘தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே, கண்ணந்தங்குடி கிராமம்தான் என் சொந்த ஊர். அப்பா டிரைவர் வேலைதான் பார்த்து வந்தார். அதில் வரும் வருமானத்தில்தான் எங்களை படிக்க வைத்தார். தங்கை திருமணமாகி துபாயில் இருக்கிறாள். தம்பியும் அங்கு வேலை பார்க்கிறான்’’ என்று தன் குடும்பத்தைப் பற்றி கூறிய வானதி, தென்காசி, ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் கிராமத்தில் ‘வனப்பேச்சி வாழ்வியல் மையம்’ என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் இந்தப் பயிற்சி மையம் துவங்க தன் குடும்பத்தினர் அவர் மீது செலுத்திய அன்புதான் காரணமாம்.

‘‘எங்களுடையது சிறிய குடும்பம் என்றாலும், ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்புடனும் பாசத்துடனும் இருப்போம். குடும்பத்தை சார்ந்தே வாழ்ந்து பழகிய எனக்கு, என் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட இழப்பில் நிலைத் தடுமாறி போனேன். அந்த சமயத்தில் ‘அம்மாடி நான் இருக்கேன்’ என்று என் கரங்களை பற்றிய அப்பாவின் அன்புதான் என்னை வழிநடத்த ஆரம்பித்தது. அவர் கொடுத்த அந்த அன்பினை நான் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். எனக்கு கிடைத்த ‘நானிருக்கிறேன்’ என்ற சொல்லையும், அன்பையும் கடத்திட நான் தேர்ந்தெடுத்துக் கொண்டதுதான் இந்தப் பயணம்’’ என்றவர், சிறப்புக் குழந்தைகள் மேல் கவனம் செலுத்திய காரணத்தை விவரித்தார்.

‘‘பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமில்லாமல் சமூகத்தில் இருந்தும் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆனால் சிறப்புக் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் ஆதரவு இருந்தாலும் சமூகத்தில் அவர்கள் தனித்துதான் இருக்கிறார்கள். குறிப்பாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி கேள்விப்பட்ட போது அவர்களுக்காக நான் என் பாதையை செயல்படுத்த விரும்பினேன். சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சியினை மேற்கொண்டேன்.

புத்தகங்களில் உள்ளவற்றை மட்டுமே படித்து, கோட்பாடுகளை பின்பற்றினால் அந்தக் குழந்தைகளை ஒரு ஆய்வு பொருளாக மட்டுமே நடத்த முடியும். ஆத்மார்த்தமான பிணைப்பு இருந்தால்தான் குழந்தைகளின் நிலையில் மாற்றத்தினை காணமுடியும். பயிற்சி முடித்தவுடன் திருச்சியில் இவர்களுக்கான பயிற்சி மையம் ஒன்றை துவங்கினேன். மையம் இயற்கை மற்றும் இசையும் இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் நான் ரொம்பவே தெளிவாக இருந்தேன்’’ என்றவர் திருச்சியில் மையம் ஆரம்பித்த காரணம் பற்றி விவரித்தார்.

‘‘ஒருமுறை தென்காசி சிவசைலத்தில் உள்ள ஆசிரமத்தில், சிறப்புக் குழந்தைகளுக்கான முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பல பெற்றோருக்கு குழந்தைகளுக்கு உள்ள பிரச்னை குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதல் இல்லவே இல்லை. முகாமிற்கு மஸ்குலர் டிஸ்ட்ரோபி நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது மகனை அழைத்து வந்திருந்தார் ஒரு அன்னை. இது குறித்து தாயிடம் எடுத்து சொன்ன ேபாது, அவர், ‘‘என் மகன், நிறைய மண் சின்ன வயசில் சாப்பிட்டான். அதனால்தான் இப்படி ஆயிடுச்சு’’ என்றார் வெகுளியாக.

மேலும் அவரிடம் ‘குழந்தைக்கு என்ன உணவு காலை கொடுப்பீர்கள்’ என்று கேட்ட போது, ‘டீயும், ஒரு பாக்கெட் ரஸ்க்கும்’ என்றார். அப்போது இங்குள்ள குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனதில் பதிந்தது. திருச்சியில் தெரபி சென்டர்கள் பல இருந்தாலும், இவர்களுக்காக ஒரு தனிச்சிறந்த பயிற்சி மையத்தினை திறக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் தான் என்னை ஏழு வருடங்களாக இந்த ஊரோடு பிணைத்து வைத்துள்ளது’’ என்றவர் மையத்தில் அளிக்கப்படும் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘ஆட்டிச குழந்தைகளுக்கு உணவுமுறை மற்றும் தினசரி வாழ்வியலில் மாற்றத்தை கொடுத்து கண்காணித்தால் அவர்களின் செயல்பாட்டில் மாற்றத்தினை காண முடியும். இங்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் குழந்தைகளின் பிரச்னைகள் பொறுத்து பயிற்சி அளிக்கப்படும். அந்த சமயத்தில் குழந்தையுடன் அவரின் அம்மாவும் உடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைகளையும் கவனமாக கவனித்து அவர்களின் சின்னச் சின்ன அசைவுகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் ஐந்து குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறேன். இதில் அவர்கள் உண்ணும் உணவில் தொடங்கி உறக்கம் வரை அத்தனையும் அடங்கும். இதுவரை நானூறு குழந்தைகளுக்கு மேல் பயிற்சி அளித்திருக்கிறேன். இங்கு குழந்தைகள் மட்டுமில்லாமல், அவர்களை உளவியல் ரீதியாக பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கிறோம்.

குழந்தைகள் தானாகவே கழிவறையை பயன்படுத்துவது, குளிப்பது, தன் உணவை உண்ணுவது என தன் சுய வேலைகளை யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதுதான் முதல் பயிற்சி. இரண்டரை வயது முதல் ஏழு வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பயிற்றுவிக்கிறோம். சிறு வயதிலேயே பிரச்னைகளை அடையாளம் கண்டுவிட்டால் விரைவாக மீட்டெடுக்க முடியும். ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுக்க கூடுதல் அவகாசம் தேவைப்படும். ஹைஃபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கு பொம்மை படங்கள், ப்ளாஷ்கார்ட்ஸ், ஏ.பி.சி.டி எழுத வைப்பது, விளையாட்டுப் பொருட்கள் கொண்டு அவர்களை அமைதியாக இருக்க வைப்பார்கள்.

அப்படிப்பட்ட பொருட்கள் இல்லாமலே அவர்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எங்க மையத்தின் முதல் வெற்றி. குழந்தைகளுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் இது போன்ற பொருட்களுக்கு அவசியம் இருக்காது. எங்கள் மையம் மலையடிவாரத்தில் இருப்பதால், குயில், குருவிகளின் மொழிதான் இவர்களுக்கான பேச்சுப்பயிற்சி, அணையும் மலையும் காட்சி தூண்டுதல் பயிற்சி, பல்லாங்குழி தாயம் அறிவுசார் பயிற்சி, ஆட்டுக்கல், திருகை கண், கைகள் ஒருங்கிணையும் பயிற்சி, நடையும் மிதிவண்டியும் உடற்பயிற்சி, பாடலும் இசையும் மனதிற்கான பயிற்சி என இயற்கை முறையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான உணவு முறைகள் குறித்து புரிதல் ஏற்படுத்துகிறோம்’’ என்றவர், ஆட்டிச குறைபாட்டின் அறிகுறிகளை முன்வைத்தார்.

‘‘குழந்தைகளை அவர்கள் பெயர் சொல்லி அழைத்தால், திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அதுவே முதல் அறிகுறி. அதனைத் தொடர்ந்து, விரல்கள் மற்றும் உடல்களை அசைத்துக் கொண்டே இருப்பார்கள். காதினை கைகளால் மூடிக் கொள்வார்கள். வயதுக்கு ஏற்ப பேச்சுத்திறன் இருக்காது. இதில் ஏதேனும் ஒரு குறை தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து அவர்களுக்கான பயிற்சிகளை துவங்க வேண்டும். தற்பொழுது செல்போன் குடும்பத்தில் உள்ளவர்களின் முக்கிய பங்காக மாறிவிட்டது.

அதனால் குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். ஆட்டிசம் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. எங்களின் பயிற்சி மையத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்கி இருக்கிறோம். மற்ற நேரத்தில் அவர்கள் அதனை பயன்படுத்தக்கூடாது. அடுத்து அவர்களின் உணவு முறை. மைதா, ரவை, சர்க்கரை, இனிப்பு சார்ந்த பொருட்கள் தவிர்த்து கேழ்வரகு, கம்பு, முழுதானியங்கள், காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம், இந்த குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும் என்பதால், நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். அடுத்து போதுமான தூக்கம் அவசியம்.

இதனை முறையாக பின்பற்றினால் கண்டிப்பாக அவர்களை மீட்டெடுக்க முடியும். எங்களின் நோக்கம் இந்தக் குழந்தைகளும் மற்றவர்கள் போல் சகஜமாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும். இவர்களின் அதீத சுறுசுறுப்பும், அதிகப்படியான அழுகையும் பிறருக்கு தொந்தரவாக இருக்கும் என்பதாலே பெற்றோர்கள் பெரும்பாலும் இவர்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்த்து விடுகிறார்கள். அந்த தயக்கத்தை உடைத்து அவர்கள் இயல்பான வாழ்வியலை வாழ நாங்க உதவுகிறோம்.

இங்கு தங்கி பயிற்சி பெற கட்டணம் நிர்ணயித்தாலும், வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பயத்தோடு வரும் பெற்றோர், அவர்களிடம் தென்படும் மாற்றத்தினை பார்க்கும் போது அவர்களிடம் ஏற்படும் அந்த மகிழ்ச்சியினை ரசிப்பதும் எனக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன். ‘யாரும் அற்றாருக்கு யாவரும் உற்றார்’ என்பதே எங்களின் தாரக மந்திரம்.

இங்கு பயிற்சி பெற்ற குழந்தைகள் மீண்டு, பள்ளிச் சீருடை அணிந்து செல்வதைப் பார்க்கும் போது மனசுக்கு நிறைவாய் இருக்கிறது. வாழ்வில் ஏற்பட்ட இழப்பு என்னை முடக்கிய தருணத்தில் அப்பா அன்று சொன்ன அந்த வார்த்தைதான் இன்று இத்தனை குழந்தைகளை மீட்க உதவியிருக்கிறது. இதை பெரிய நிறுவனமாக மாற்றுவது என் நோக்கமில்லை. முடிந்தவரை மக்களிடம் ஆட்டிசம் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதன் நிலைப்பாட்டினை புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார் வானதி.

தொகுப்பு: திலகவதி

The post அப்பாவின் அந்த வார்த்தை இன்று குழந்தைகளை மீட்க உதவுகிறது! appeared first on Dinakaran.

Tags : Kannantangudi ,Thanjavur, Orathanadu ,Dubai ,
× RELATED துபாய் விமான நிலையத்தில் பாகிஸ்தான்...