×

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

நாகர்கோவில், செப்.7: விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (7ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அனைத்து கோயில்களிலும் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெறும். முழு முதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த அவல், பொரி, கடலை, மோதகம், கொழுக்கட்டை, பாயாசம் வைத்து வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெறும். இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும்.

நாளை முதல் ஒரு வாரம் பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வரும் 13, 14, 15ம்தேதிகளில் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை, திற்பரப்பு, மிடாலம், தேங்காப்பட்டணம், மண்டைக்காடு, பள்ளிக்கொண்டான் அணை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்படும். வரும் 13ம்தேதி சிவசேனா சார்பில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. 14ம்தேதி இந்து மகா சபா சார்பில் சிலைகள் கரைக்கப்படும். 15ம்தேதி இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் சிலைகள் கரைக்கப்படும். விநாயகர் சிலைகள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 10 அடிக்கு மேல் சிலைகள் இருக்க கூடாது. கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் தான் சிலைகள் வைக்க வேண்டும். முறையாக அனுமதி பெற்ற பின்னரே சிலைகள் வைக்கப்பட வேண்டும்.

புதிய வழித்தடம் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடம் வழியாகவே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை , மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில், தக்கலையில் இரு தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட உள்ளன. ஊர்வல பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட உள்ளன. ஊர்வல பாதைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவதுடன், கட்டுப்பாட்டு அறைகளுடன் அவை இணைக்கப்பட உள்ளன.
ஊர்வல நிகழ்ச்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மதியம் முதல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர். இன்று காலை மேலும் பல்வேறு இடங்களில் பூஜைக்கு வைப்பார்கள். சிலை வைக்கும் இடங்களில் சிலை கமிட்டி சார்பில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க வேண்டும் என போலீசார் கூறி உள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் மாவட்டம் முழுவதும் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

The post சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Chaturthi ,NAGARGO ,VINAYAKAR CHATURTHI ,Vinayagar ,Pooja ,Kumari district ,Vinayagar Chaturthi Festival ,Hindus ,Chaturthi festival ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...