×

பைடன் உளறிக்கொட்டுவதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி? ஜனநாயக கட்சியில் பரபரப்பு திருப்பங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் களமிறங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.  அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் தற்போது அதிபராக உள்ளார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த விவாத நிகழ்ச்சியில் பைடன் தடுமாறினார். ட்ரம்ப் அசத்தினார். அதனால் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே, பைடனை அதிபர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருந்தும், தான் அதிபர் தேர்தல் களத்தில் தான் இருக்கிறேன் என்றும், தான் பின்வாங்க போவதில்லை என்றும் 81 வயதான பைடன் உறுதியாக கூறினார்.

ஆனால் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் பைடனுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதத்தை விட, துணை பிரதமரான கமலா ஹாரிஸுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கிடையே வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அமெரிக்க அதிபர் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பெயரை குறிப்பிட்டு பேசும் இடத்தில், ரஷ்ய அதிபர் புதினின் பெயரை குறிப்பிட்டார். அதேபோல் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை குறிப்பிடும் இடத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் பெயரை குறிப்பிட்டார்.

அதாவது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக துணை ஜனாதிபதி ட்ரம்ப் என்று தவறாக கூறினார். இவ்வாறாக அவரது பேச்சுகள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், மாநாட்டில் கூடியிருந்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பைடனுக்கு 81 வயதாவதால், அவரால் தொடர்ந்து செயல்படமுடியவில்லை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில், ‘ஜோ பைடனுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடுவது என்பது கேள்விகுறியாக உள்ளது.

பைடனின் மூத்த ஆலோசகர்கள் சிலர், அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். பைடனை மீண்டும் களமிறக்கினால் ட்ரம்ப் எளிதாக வென்றுவிடுவார். அதனால் கமலா ஹாரிசை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜனநாயக கட்சியின் செனட் குழு தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஷ் நேற்று திடீரென தனிப்பட்ட முறையில் அதிபர் பைடனை சந்தித்து பேசினார். அப்போது அதிபர் தேர்தலில் பைடன் நிலைகுறித்து அவருக்கு விளக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் போட்டியில் இருந்து பைடனை விலகும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

* கமலா ஹாரிஸ் தகுதியானவர் அதிபர் பைடன் ஒப்புதல்
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அதிபர் பைடன் நேற்று கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே, நான் கூறிவருகிறேன். துணை அதிபர் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு தகுதியானவர். அதனால்தான் நான் அவரை துணை அதிபராக தேர்ந்தெடுத்தேன். அவர் மிகவும் நல்லவர்’ என்றார்.

The post பைடன் உளறிக்கொட்டுவதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி? ஜனநாயக கட்சியில் பரபரப்பு திருப்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Kamala Harris ,US presidential election ,Biden ,Democratic Party ,Washington ,US presidential ,United States ,US ,
× RELATED கமலா ஹாரிஸ் பதவி ஏற்பில் அவரது தந்தை...