×

சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி ரூ.40 கோடி சொத்து… காரில் சிவப்பு சுழல் விளக்கு… போலி மருத்துவ சான்றிதழ்: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் பூஜா கேத்கர். 2023 பேட்ச்சை சேர்ந்த அவர், புனேயில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தி நகரை வலம் வந்தார். இது பணி விதிகளுக்கு முரணானது என்பதால், அவர், புனேவில் இருந்து வாஷிமுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் போலி சான்றிதழ்களை பூஜா சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்வு முகமையில், ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் இருப்பதாக சமர்ப்பித்து, கிரீமி லேயரில் இல்லை என்பதற்கான சான்றினை பெற்று ஓபிசி பிரிவில் சலுகை பெறவதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பித்திருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலிப் கேத்கர், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். வேட்பு மனுத்தாக்கலின் போது, ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், ரூ.40 கோடி சொத்து இருப்பதாகவும் திலிப் கணக்கு காட்டியிருந்தார். எனவே, ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமி லேயரில் இல்லை என்ற சான்று பெற்றதும், தனது சொந்த ஆடி சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்குடன் வலம் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாகவும், மூளை திறன் குறைபாடு தொடர்பான பிரச்னையை குறிப்பிட்டு அதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிக்கான போலி மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்திருந்தார். பின்னர் தேர்வில் வெற்றி பெற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 6 முறைக்கும் மேலாக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கொரோனா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காரணம் காட்டிய பூஜா மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து, எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுவரையிலும் பூஜா இந்த மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்ளாதது கூடுதல் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. இதனிடையே, பணியிட மாற்றம் தொடர்பாக புனே கலெக்டர் விளக்கமளிக்க வேண்டுமெனக் கோரி, பிரதமர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக பயிற்சியாணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே முறைகேடு செய்து ஐ.ஏ.எஸ் ஆனார் பூஜா என்ற புகார் குறித்து விசாரிக்க ஒரு நபர் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.

* தனி கேபின், விஐபி அறை கேட்டு அடம்
பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட பூஜா கேத்கருக்கு, புனே கலெக்டர் அலுவலகம் சார்பில் அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அதில், அட்டாச்டு பாத்ரூம் இல்லை என்பதால், அந்த அறையை வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். வேறு ஒரு விஐபி அறை, தனி கேபினை தனக்கு ஒதுக்கக் கோரி தந்தை திலீப் கேத்கருடன் புனே கலெக்டர் அலுவலகம் சென்று முறையிட்டதாக தெரிகிறது. மேலும், தனக்கு தனி பியூன் மற்றும் பிற ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமெனவும் பூஜா கோரிய தகவலும் வெளியாகியுள்ளது.

The post சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி ரூ.40 கோடி சொத்து… காரில் சிவப்பு சுழல் விளக்கு… போலி மருத்துவ சான்றிதழ்: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,IAS ,Union ,Mumbai ,Pooja Kethkar ,Pune ,Audi ,Union Govt ,Dinakaran ,
× RELATED போலிச் சான்றிதழ் விவகாரம்: பூஜா கேட்கர் ஐஏஎஸ் பணியிலிருந்து நீக்கம்